``நீங்கள் இருக்கும்போது எனக்கு நாட்டைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை" - பிரதமரிடம...
கல்யாணம் பண்ணிக்கப் போறீங்களா?- இந்த கோர்ஸைப் பத்தியும் தெரிஞ்சுக்கோங்க பாஸ்; கோவாவில் புது முயற்சி!
ஒரு நல்ல வேலையைப் பெறுவதற்கு ஆண்டுக்கணக்கில் படிக்கிறோம். விரும்பிய துறையில் சாதிக்கப் பல பயிற்சிகளை மேற்கொள்கிறோம். ஆனால், வாழ்நாள் முழுவதும் ஒருவருடன் இணைந்து பயணிக்கப் போகும் திருமண வாழ்க்கைக்காக எவ்வளவு தயாராகிறோம்? திருமணத்துக்கான ஏற்பாடுகளில் காட்டும் ஆர்வத்தை, அந்த வாழ்க்கையைப் புரிந்துகொள்வதிலும் காட்டுகிறோமா? இப்படியான கேள்விகளுக்கு விடை தேடும் வகையில், திருமணத்துக்கு முன்பே உறவுகளைப் பற்றிக் கற்றுக்கொள்ள புதிய சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது கோவாவைச் சேர்ந்த கல்லூரி ஒன்று.
கோவாவின் பனாஜியில் அமைந்துள்ள ‘Goa College of Home Science’ கல்லூரியின் மனித வளர்ச்சி மற்றும் குடும்ப ஆய்வுகள் துறை சார்பில், ‘Marriage Readiness: Preparing for Healthy and Lasting Relationships’ என்ற பெயரில் 15 நாள்கள் சான்றிதழ் பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 2 முதல் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் பயிற்சி, திருமணத்துக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு உறவுகள் குறித்த புரிதலை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

திருமணத்துக்கு முன் என்னென்ன பாடங்கள்?
ஒரு திருமண உறவு சிறப்பாக அமைய, வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது மட்டும் போதுமா? முதலில் ஒருவர் தன்னைப் பற்றியும், தனது எதிர்பார்ப்புகள் பற்றியும் புரிந்துகொள்வது அவசியம். இதற்காகச் சுய விழிப்புணர்வு (Self-awareness), அன்பு மற்றும் பிறருடன் இணைந்திருக்கும் உணர்வு, டேட்டிங் செய்வதன் நோக்கம் உள்ளிட்ட அடிப்படையான விஷயங்களில் இருந்து இந்தப் பயிற்சி தொடங்குகிறது.
அதுமட்டுமன்றி, ஆண்மை, பெண்மை குறித்த புரிதல்கள் உறவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, திருமண விழாவுக்கும் (Wedding), திருமண வாழ்க்கைக்கும் (Marriage) இடையிலான வேறுபாடு என்ன என்பன குறித்தும் கற்றுத்தரப்பட உள்ளன.
தொடர்ந்து, வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது, இருவருக்கிடையேயான தகவல் தொடர்பு, அன்பு மற்றும் நெருக்கம், கருத்து வேறுபாடுகளைக் கையாள்வது, விட்டுக்கொடுத்தல், மன்னிக்கும் மனப்பான்மை எனத் திருமண வாழ்க்கையில் எதிர்கொள்ளக்கூடிய பல்வேறு சூழல்களும் பாடங்களாக இடம்பெறுகின்றன.
இவை வெறும் வகுப்பறைப் பாடங்களாக மட்டும் இருக்கப் போவதில்லை. ஆளுமை மதிப்பீடுகள் (Personality Assessment), சுயபரிசோதனை மற்றும் நடைமுறைப் பயிற்சிகள் மூலமாகவும் தங்களையும், உறவுகளையும் புரிந்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

யாரெல்லாம் பங்கேற்கலாம்?
இளங்கலை, முதுகலை மாணவர்கள், திருமணமாகாத இளைஞர்கள் மட்டுமன்றி, ஆரோக்கியமான உறவுகளை உருவாக்குவதில் ஆர்வமுள்ள மற்றவர்களும் இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம்.
இது குறித்துப் பேசியுள்ள கல்லூரி முதல்வர் மகேஷ் பாய், ``திருமணத்துக்குத் தயாராவது என்பது திருமண ஏற்பாடுகளைச் செய்வது மட்டுமல்ல; ஒருவர் தன்னைப் பற்றியும், தனது துணையைப் பற்றியும், உறவில் இருக்கும் பொறுப்புகள் மற்றும் அர்ப்பணிப்பு பற்றியும் புரிந்துகொள்வதே முக்கியம்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தப் படிப்பு ஏன் இப்போது?
கோவாவில் திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான வழக்குகளும் மனுக்களும் கவனத்தைப் பெற்றுள்ளன. 2022 முதல் 2025 வரை திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பாக 3,000-க்கும் மேற்பட்ட மனுக்கள் சிவில் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2024-ம் ஆண்டில் மட்டும் 947 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக மாநில சட்டத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், திருமணத்துக்கு முந்தைய ஆலோசனைகளை மாநிலம் முழுவதும் அறிமுகப்படுத்தத் திட்டமுள்ளதாக கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
ஒரு திருமணத்துக்காக மண்டபம், அலங்காரம், ஆடை எனப் பல விஷயங்களைத் திட்டமிடுகிறோம். ஆனால், திருமணத்துக்குப் பிறகு வரக்கூடிய கருத்து வேறுபாடுகள், பொறுப்புகள், எதிர்பார்ப்புகள் பற்றி எவ்வளவு பேசுகிறோம்? திருமணத்தை ஒரு நாள் கொண்டாட்டமாகப் பார்க்காமல், வாழ்நாள் முழுவதும் தொடரும் உறவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையே இந்த முயற்சி நினைவூட்டுகிறது.
திருமணத்துக்கான அழைப்பிதழை அச்சிடுவதற்கு முன்பே, அந்த வாழ்க்கைக்கான புரிதலையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் இந்தப் படிப்பு சொல்லும் செய்தி!



















