செய்திகள் :

காவிரி விவகாரம்: தமிழக அரசின் மனுக்கள் தள்ளுபடி; பெரும் பின்னடைவு! உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

post image

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாகத் தமிழக அரசு தாக்கல் செய்த மூன்று இடைக்கால மனுக்களில் இரண்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 20) தள்ளுபடி செய்துள்ளது.

மேலும், மூன்றாவது புதிய மனு மீதான விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கர்நாடக அரசுக்கு எவ்வித அறிவுறுத்தல்களையும் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசுக்குப் பெரும் சட்டப்பூர்வப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

வழக்கின் பின்னணி 

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்திற்கு ஆண்டிற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட வேண்டும். ஆனால், நடப்பு பாசன ஆண்டில் ஜூலை மாதம் தொடங்கி அக்டோபர் 12-ஆம் தேதி வரை கர்நாடகா வழங்க வேண்டிய நீரில் 11 டிஎம்சி பற்றாக்குறை நிலவியது.

காவிரி

இதனைத் தொடர்ந்து, நிலுவையில் உள்ள 11 டிஎம்சி நீரை உடனடியாகத் திறந்துவிட உத்தரவிடக் கோரியும், நீர் பற்றாக்குறை நிலவும் ஆண்டுகளில் அணைகளின் நீர் இருப்பிற்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் நீரைப் பங்கீட்டுத் தர ஆணையத்திற்கு அறிவுறுத்தக் கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுக்களைத் தாக்கல் செய்திருந்தது.

கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அபரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இம்மனுக்கள் தீவிர விசாரணைக்கு வந்தன.

தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, உமாபதி மற்றும் குரு கிருஷ்ண குமார் ஆகியோர், "கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும், காவிரி ஆணையத்தின் உத்தரவுகளையும் தொடர்ச்சியாக அவமதித்து வருகிறது. காவிரி ஆணையம் கர்நாடகாவின் வாதங்களை மட்டுமே கேட்டு ஒருதலைப்பட்சமாகச் செயல்படுகிறது; முந்தைய பற்றாக்குறை நீரைக் கணக்கில் கொள்வதில்லை. டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளன" என வாதிட்டனர்.

உச்சநீதிமன்றம்

கர்நாடகா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், "கர்நாடகாவில் பல மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன; பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. உபரி நீர் காலங்களில் 177.25 டிஎம்சியை விடக் கூடுதல் நீரைத் திறந்துள்ளோம். எனவே, இதில் நீதிமன்றம் தலையிடத் தேவையில்லை" எனத் தெரிவித்திருந்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி விக்ரம் நாத், "ஒவ்வொரு முறையும் நீர் பற்றாக்குறை உள்ளதாகத் தமிழ்நாடு கூறுகிறது; ஆனால் உத்தரவை விடக் கூடுதல் நீர் திறந்துள்ளதாகக் கர்நாடகா தரவுகளைத் தருகிறது. இதற்கான விளக்கம் தேவை" எனக் கூறி, தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர்.

இதற்கிடையே, கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி கூடிய காவிரி நீர் மேலாண்மை ஆணையம், தமிழகத்திற்கு தினமும் வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவையும் கர்நாடகா செயல்படுத்தவில்லை எனக் கூறி, ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்தக் கோரி தமிழக அரசு மூன்றாவதாக ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்தது.

உச்ச நீதிமன்றத்தில் இன்று நடந்தது என்ன?

ஏற்கனவே தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு மனுக்கள் மீதான உத்தரவும், தமிழக அரசு தாக்கல் செய்த மூன்றாவது புதிய மனு மீதான விசாரணையும் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அபரேஷ் குமார் சிங் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன.

முதல் மனு தள்ளுபடி:

ஜூலை மாதம் முதல் அக்டோபர் 12-ஆம் தேதி வரை நிலுவையில் இருந்த 11 டிஎம்சி பற்றாக்குறை நீரை உடனடியாகத் திறந்துவிடக் கோரிய தமிழக அரசின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இரண்டாவது மனு தள்ளுபடி: நீர் பற்றாக்குறை காலங்களில் விகிதாச்சார அடிப்படையில் தண்ணீரைப் பங்கீட்டுத் தர உத்தரவிடக் கோரிய இரண்டாவது இடைக்கால மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

மூன்றாவது மனு ஒத்திவைப்பு: அக்டோபர் 23-ஆம் தேதி காவிரி ஆணையம் உத்தரவிட்ட 3,000 கனஅடி நீரைக் கர்நாடகா திறக்காததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மூன்றாவது மனுவை விசாரித்த நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

காவிரி ஆறு

நீதிபதிகள் கூறிய முக்கியக் கருத்துக்கள்:

விசாரணையின் போது நீதிபதிகள் தமிழக அரசின் மனுக்கள் மீது அதிருப்தி வெளிப்படுத்தும் வகையில் முக்கியக் கருத்துக்களைப் பதிவு செய்தனர். "காவிரி விவகாரத்தில் இன்னும் எத்தனை மனுக்களைத்தான் தாக்கல் செய்து கொண்டே இருப்பீர்கள்?" என நீதிபதிகள் நேரடியாகக் கேள்வி எழுப்பினர்.

முதல் இரண்டு மனுக்களைத் தள்ளுபடி செய்ததோடு மட்டுமல்லாமல், "நீங்கள் புதிதாகத் தாக்கல் செய்துள்ள இந்த மூன்றாவது மனுவையும் நாங்கள் இப்போதே தள்ளுபடி செய்கிறோம்" என நீதிபதிகள் கறாராகத் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள், இம்மனுவின் அவசியத்தை விளக்க ஒரு வார கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்

அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மூன்றாவது மனு மீதான விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

குறிப்பாக, இன்றைய விசாரணையில் கர்நாடக அரசுக்கு எதிராகக் குறைந்தபட்ச அறிவுறுத்தல்களைக் கூட வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த உத்தரவு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்?

உச்ச நீதிமன்றத்தின் இன்றைய நிலைப்பாடு தமிழகத்தின் விவசாயிகள் மற்றும் அரசியல் களத்தில் பல முக்கிய விளைவுகளை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.

நிலுவையில் உள்ள 11 டிஎம்சி தண்ணீரைத் திரும்பப் பெறுவதற்கான சட்டப்பூர்வ வாய்ப்புகள் ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளன. மேலும், பற்றாக்குறை காலங்களில் 'விகிதாச்சாரப் பங்கீடு' என்ற தமிழகத்தின் நீண்டகாலக் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்திருப்பது, வருங்கால வறட்சி ஆண்டுகளிலும் தமிழகத்திற்குப் பாதகமாக அமையக்கூடும்.

காவிரி ஆணையத்தின் உத்தரவுகளை மதிக்காமல் நீர் திறப்பை நிறுத்தி வைத்தாலும், உச்ச நீதிமன்றம் கர்நாடகாவிற்கு எவ்வித எச்சரிக்கையோ அல்லது அறிவுறுத்தலோ வழங்காதது கர்நாடக அரசிற்குச் சாதகமாக அமைந்துள்ளது.

இதனால் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவின் கை தொடர்ந்து ஓங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே போதிய தண்ணீரின்றி சம்பா சாகுபடிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தின் மூலமும் உடனடி நிவாரணம் கிடைக்காதது காவிரி டெல்டா விவசாயிகளிடையே பெரும் கவலையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றம்

தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் பொழுது தண்ணீரை திறக்காமல் அதிக அளவில் மழை பெய்து அதை தங்களது அணைகளில் சேமித்து வைக்க முடியவில்லை என்ற நிலை வந்தால் மட்டும் தான் கர்நாடகா தண்ணீரை திறந்து விடுகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் வரும் காலங்களிலும் இதே நிலைப்பாட்டை கர்நாடகா தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தின் கையில் உள்ள ஒரே சட்டப்பூர்வ வாய்ப்பாக மூன்றாவது மனு மட்டுமே எஞ்சியுள்ளது.

ஒரு வாரத்திற்குப் பிறகு நடைபெறவுள்ள விசாரணையில், அக்டோபர் 23-ஆம் தேதி காவிரி ஆணையம் பிறப்பித்த 3,000 கனஅடி நீர் திறப்பு உத்தரவைக் கர்நாடகா மீறியதைத் தமிழக அரசு எவ்வளவு வலுவாக நிரூபிக்கப் போகிறது என்பதைப் பொறுத்தே அடுத்தகட்ட நகர்வு அமையும்.

உங்க பெயரில் போலி சமூக வலைதளக் கணக்கு... முதலில் என்ன செய்ய வேண்டும்?சட்டம் சொல்வது என்ன? - 17

உங்கள் பெயர்… உங்கள் புகைப்படம்… உங்கள் நண்பர்கள்… ஆனால், அந்தக் கணக்கிலிருந்து வரும் மெசேஜ்களை அனுப்புவது மட்டும் நீங்கள் இல்லை!இணையதளத்தில் அல்லது சமூக வலைத்தளத்தில், உங்கள் பெயரில் யாரோ போலிக் கணக்... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: அதிரடி வாதங்களும் ஆட்சியர் தரப்பின் தடுமாற்றமும்! - நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பெரும் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது. குறிப்பாக, தீபத்தூண் அமைந்துள்ள இடம் ய... மேலும் பார்க்க

கடன் வாங்கியவரை அவமானப்படுத்தலாமா? கடன் கொடுத்தவருக்கு என்னென்ன உரிமைகள்? சட்டம் சொல்வது என்ன? - 16

நண்பருக்கோ, உறவினருக்கோ நம்பிக்கையின் அடிப்படையில் பணம் கொடுத்திருப்போம். ஆனால், திருப்பிக் கேட்டால் பதில் இருக்காது; போன் செய்தால் எடுக்க மாட்டார்கள். சிலர் பணத்தைத் திருப்பிக் கேட்கும்போது, “என் பணத... மேலும் பார்க்க

சர்ச்சையான நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் பேச்சு:"இது ஜோதிடர்களின் வேலை"- எம்.பி சு.வெங்கடேசன் விமர்சனம்

பி சுவாமிநாதன் எழுதிய மகா பெரியவா பாகம் 16 (தமிழ்) மற்றும் பாகம் 4 (ஆங்கிலம்) நூல்கள் வெளியீட்டு விழா, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் சென்னை பாரதிய வித்யா பவனில் நடைபெற்றது. இந்த நிக... மேலும் பார்க்க

'’பெற்றோரைப் பராமரிக்க மறுக்கும் பிள்ளைகள்'' உத்தரவை மதிக்காவிட்டால்... | சட்டம் சொல்வது என்ன? - 15

“பெத்த பிள்ளைகளே கைவிட்டுட்டாங்க… வயசான காலத்துல எங்களை யார் பார்த்துப்பாங்க?” என்று கண்ணீருடன் நிற்கும் பெற்றோரைப் பார்த்திருக்கிறோம். வயதான காலத்தில் உணவுக்கும் மருந்துக்கும் பிறரை எதிர்பார்க்கும் ப... மேலும் பார்க்க