"நான் ஹீரோவாக அறிமுகமாகிறேனா?" - விளக்கமளிக்கும் சாய் அபயங்கர்
‘கோவை தெற்கில் தி.மு.க வாக்காளர்களுக்கு ரூ.5,000 பட்டுவாடா செய்ததா?’ – செந்தில் பாலாஜி விளக்கம்
கோவை காந்திபுரம் பகுதியில் கோவை தெற்கு தொகுதி தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தி.மு.க 2.0 ஆட்சி அமைந்த உடன் ஒரு லட்சம் கோடி ரூபாயில் கோவை மாவட்டத்திற்கு அடுத்த 5 ஆண்டுகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். தொழில்துறை விரிவாக்கத்திற்காக ரூ. 50 ஆயிரம் கோடியிலும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ. 50 ஆயிரம் கோடியிலும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். அடுத்த 7 முதல் 10 ஆண்டுகளில் கோவையில் 15 சதவிகிதமாக உள்நாட்டு உற்பத்தியை பெருக்கத் திட்டமிடப்படும்.
ஜவுளித்துறையில் புதிய முதலீடுகள், சிறு, குறு தொழில்துறையை மேம்படுத்த மூலப்பொருட்கள் தயாரிப்பு திட்டம், தகவல் தொழில்நுட்ப தலைநகராக மாற்ற முயற்சி, ஆழியாறு - நல்லாறு திட்டத்தைச் செயல்படுத்த கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும், ஒருங்கிணைந்த புறநகர் பேருந்து நிலையம் அமைத்தல், கிழக்கு புறவழிசாலைப்பணிகளை விரைந்து முடித்தல் உள்ளிட்ட 26 திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
தேர்தலை சுமுகமாக நடத்த வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். தேர்தலில் தோல்வி பயம் காரணமாக அ.தி.மு.கவினர் வன்முறையைத் தூண்ட வேண்டும், சட்டம், ஒழுங்கு சீராக இருக்கக்கூடாது என பிரச்னைகளை உருவாக்கி வருகின்றனர். கோவையில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளருக்கு வெளிமாநில முதலமைச்சர் உட்பட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். எனக்காக வெளியூர்காரர்கள் இங்கே பணியாற்றுகிறார்கள் என்பது ஏற்புடையது அல்ல.

கோவை தெற்கில் தோல்வி என்பதை உணர்ந்த அ.தி.மு.க வேட்பாளர் குறைகளைக் கூறி வருகிறார். குற்றச்சாட்டுகள் யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அதற்கு ஆதாரம் வேண்டும். அ.தி.மு.க-வினர் என்ன கொடுத்துள்ளார்கள் என்பதை சொன்னால், அரசியல் நாகரீகமாக இருக்காது. மக்களை சந்தித்து வாக்குறுதிகளை சொல்லி வாக்குகளை சேகரிக்க வேண்டும். அதைவிட்டு விட்டு மாற்றுவழியில் சிந்தித்து கலவர பூமியாக்க முயற்சிப்பதை ஏற்க முடியாது. அதற்கு முயற்சி எடுத்தால் பலிக்காது.
வாட்ச் பில் கேட்டதற்கு அண்ணாமலை துண்டு சீட்டைக் கொடுத்தார். நான்கு ஆட்டுக்குடி போதும் என்றவருக்கு, இன்று ஆயிரம் கோடிக்கு சொத்து வாங்க பணம் எங்கிருந்து வந்தது? மண் வெட்டி எடுத்து வெட்டினாரா? தோட்டத்தில் ஆயிரம் ஆடு மேய்த்து, பணம் சம்பாதித்தாரா? உரக்கப்பேசினால் உண்மையாகிவிடும் என நினைக்கிறார். நான் கோவையில் இருக்கிறேன். எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் இருக்கிறார். இங்கிருந்து போரில் நடப்பது போல ஏவுகணை தாக்குதலா நடத்த முடியும்? பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தால், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வாங்கிக்கொள்ளட்டும். நான் எப்படி அவருக்கு தீங்கு ஏற்படுத்த முடியும்? சொல்ல கூடிய கருத்து நியாயமானதாக இருக்க வேண்டும். நான் கோவையில் இருந்து கரூருக்கு வந்ததற்கு முதலமைச்சர் தந்த விளக்கமே போதுமானது.

தேர்தலின் போது, மத்திய, மாநில அரசு ஊழியர்களாக இருந்தாலும், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். அப்படியிருக்க எப்படி வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முடியும்? தேர்தல் ஆணையத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள பா.ஜ.க வேண்டுமானால் அந்த முயற்சியை எடுக்கலாம். ஒரு எதிர்க்கட்சித் தலைவர் தேர்தல் காலத்தில் பேசக்கூடிய வார்த்தைகளுக்கு ஒரு எல்லை உண்டு. ஆனால் பல்வேறு விமர்சனங்களை அவர் என் மீது வைத்து வருகிறார். தேர்தல் காலத்தில் இப்படி பேசுவது, தோல்வி பயத்தால் கூறக்கூடியது. தேர்தல் முடியும் வரை சட்டத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது” என்றார்.
கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க-வினர் வாக்காளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பணம் பட்டுவாடா செய்வதாக எழுந்த புகார் தொடர்பான கேள்விகளுக்கு, “தேர்தல் நியாயமாக வெளிப்படையாக நடக்க வேண்டும். மக்கள் விரும்பியவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். மக்களை சந்தித்து செய்ததையும், செய்யப்போவதையும் சொல்லி வாக்கு கேட்க வேண்டும். வாக்காளர்களுக்கு யார் பணம் கொடுக்கிறார்கள், வாங்கிறார்களோ அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

வாக்கிற்கு பணம் தருவதை நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன். தேர்தலுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் இரண்டுமே தவறு. கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க-வினர் பணம் வழங்கியதாக கூறுவதை, முழுமையாக மறுக்கிறேன். பணம் கொடுப்பதாக ஆதாரங்கள் இருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வேண்டும். ஆதாரம் இல்லாமல் பொதுவெளியில் செய்திகளை சொல்லக்கூடாது” என பதிலளித்தார்.



















