செய்திகள் :

சிம்ரன்: பார்வை குறைபாட்டை தாண்டி... `விடாமுயற்சி' - 2 தங்கங்களுக்குப் பின்னால் ஒரு நெகிழ்வான காதல்

post image

ஒரு விளையாட்டு வீரர் பதக்கம் வெல்லும்போது, மேடையில் அவருடைய பெயர் அறிவிக்கப்படும். தேசியக் கொடி உயர்த்தப்படும். ஆனால், அந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் தியாகங்களும் கண்ணீரும் பல நேரங்களில் வெளியில் தெரிவதில்லை. இந்தியாவின் பாரா தடகள வீராங்கனை சிம்ரன் ஷர்மாவின் கதையும் அப்படித்தான்.

பார்வைக் குறைபாடு, பொருளாதார நெருக்கடி, தாய்மைப் பொறுப்பு எனப் பல சவால்களைக் கடந்து, இன்று சர்வதேச அரங்கில் இந்தியாவுக்காக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று சாதித்திருக்கிறார்.

கேலிகளை தாண்டி... கனவுக்குத் துணையாக நின்ற கணவர்!

உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தைச் சேர்ந்த சிம்ரன், குறைமாத பிரசவத்தில் பிறந்தவர். பிறந்ததிலிருந்தே பார்வைக் குறைபாடு இருந்ததால், சிறு வயதில் மற்றவர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியிருக்கிறார். ஆனால், அந்தக் கேலிகள் அவருடைய ஓட்டத்துக்கு முட்டுக்கட்டையாக மாறவில்லை. தடகளத்தில் ஆர்வம் வளர்ந்தபோது, அவருடைய திறமையை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தியவர் கஜேந்திர சிங். விளையாட்டில் தொடங்கிய இந்தப் பயணம், பின்னாளில் இருவரையும் வாழ்க்கைத் துணைகளாகவும் மாற்றியது.

சிம்ரன்

சிம்ரனின் கனவை நனவாக்குவதற்குக் கணவர் கஜேந்திர சிங் அளித்த ஆதரவு சாதாரணமானதல்ல. பயிற்சியளிப்பதுடன் நின்றுவிடாமல், அவருடைய விளையாட்டுப் பயணத்துக்கான செலவுகளையும் சமாளிக்க முயன்றார். சிம்ரனின் சர்வதேச விளையாட்டுப் பயணத்துக்காகச் சுமார் ரூ.3.5 லட்சம் கடன் வாங்கியதுடன், ரூ.9 லட்சம் மதிப்பிலான நிலத்தையும் விற்றதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மற்றவர்கள் அவருடைய குறைபாட்டைப் பார்த்தபோது, கஜேந்திர சிங் அவருடைய திறமையைப் பார்த்தார். அந்த நம்பிக்கைக்குப் பலனாக, 2024-ல் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று உலக சாம்பியனானார் சிம்ரன்.

சிம்ரன்

இரட்டைக் குழந்தைகள்... மீண்டும் தடகளப் பாதையில்!

வெற்றிப் பயணம் தொடர்ந்தாலும், வாழ்க்கை அவருக்கு இன்னொரு பொறுப்பைக் கொடுத்தது. இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயான பிறகு, மீண்டும் பழைய உடற்தகுதியைப் பெற்று ஓட்டப்பந்தயத்துக்குத் திரும்புவது எளிதாக இருக்கவில்லை. குழந்தைப் பிறப்புக்குப் பிறகு ஏற்பட்ட ஹார்மோன் தொடர்பான சிக்கல்களும் பயிற்சிக்குத் திரும்புவதில் சவாலாக இருந்தன. ஒருபுறம் குழந்தைகள்; மறுபுறம் நாட்டுக்காகச் சாதிக்க வேண்டும் என்ற கனவு. இந்த இரண்டுக்கும் இடையில் தன்னை மீண்டும் தயார்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. அந்தக் கடினமான காலத்தில் கணவர் கஜேந்திர சிங்கும் பயிற்சிக் குழுவினரும் அவருக்கு ஊக்கமளித்தனர்.

இரண்டு தங்கங்கள்... இரண்டு போட்டிச் சாதனைகள்!

அந்த உழைப்பின் பலனை ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் உலகம் பார்த்தது. பெண்களுக்கான T12 பிரிவு 200 மீட்டர் ஓட்டத்தில் 24.80 விநாடிகளில் இலக்கைக் கடந்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கம் வென்றார் சிம்ரன்.

அடுத்ததாக, 100 மீட்டர் ஓட்டத்திலும் 12.02 விநாடிகளில் இலக்கைக் கடந்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கம் வென்றார். இரண்டு தங்கங்கள்... இரண்டு சாதனைகள்! வெற்றிக்குப் பிறகு தனது குழந்தைகளையும் கணவரையும் நினைவுகூர்ந்த அவர், குழந்தைகளுடன் காணொலி அழைப்பில் பேசியது அந்த வெற்றியின் இன்னொரு நெகிழ்ச்சியான தருணம்.

சிம்ரன்

சிம்ரனைப் பாராட்டிய பிரதமர் மோடி!

இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்த சிம்ரன் ஷர்மாவைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். அவரது வேகம், மன உறுதி மற்றும் விளையாட்டின் மீதான அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர், சிம்ரனின் சாதனை பலருக்கும் ஊக்கமளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் தன்னுடைய குறைபாட்டைக் கேலி செய்தவர்களுக்கு மத்தியில் ஓடத் தொடங்கிய சிம்ரன், இன்று இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியிருக்கிறார். ஒரு பெண்ணின் கனவுக்குப் பின்னால் கணவரின் நம்பிக்கை இருந்தால், தாய்மையின் பொறுப்புகளுக்கு மத்தியிலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். சிம்ரன் ஓடியது ஓடுபாதையில் மட்டுமல்ல... தன்னால் முடியாது என்று நினைத்த எல்லைகளையும் தாண்டித்தான்..!

வாழ்த்துக்கள் சிம்ரன் ஷர்மா!

Asian Para Games: தோல்விகளை கடந்து தங்கம்; ஆசிய பாரா போட்டியில் சாதித்த சென்னை வீரர் நவீன் சிவகுமார்

உடல் தகுதி வாய்ந்த வீரர்களுடன் விளையாடி பல தோல்விகளைச் சந்தித்தவர்; இன்று ஆசிய அரங்கில் இந்தியாவைப் பெருமிதமடையச் செய்திருக்கிறார்! தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த 22 வயது பாரா பேட்மிண்டன் வீரர் நவீன் ... மேலும் பார்க்க

ஆசிய பாரா விளையாட்டுப்போட்டி: "அழாதீங்க; நா சாதிப்பேன்னு சொன்னான்"- தங்கம் வென்ற தூத்துக்குடி இளைஞர்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்ததர்மராஜ் - ஈஸ்வரி தம்பதியின் மகன் சோலைராஜ். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போதுசோலைராஜ் தனது 19வயதில் ... மேலும் பார்க்க

Para Games: தங்கம் வென்ற துளசிமதி; காஞ்சிபுரம் மண்ணிலிருந்து ஆசிய மேடை.. வியர்வையில் விளைந்த வெற்றி!

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த துளசிமதி முருகேசன், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று அசத்தல், தோல்விகளைக் கடந்து தங்கத்துடன் நிறைவடைந்த நெகிழ்ச்சிப் பய... மேலும் பார்க்க

மாற்றுத்திறன் தடையல்ல, மன உறுதியே வெற்றி.! - ஆசிய சாதனையுடன் தங்கம் வென்ற சோலைராஜ் தர்மராஜ்!

ஒருவரின் உடலில் இருக்கும் குறைபாடு அவரது கனவுகளுக்கான எல்லையைத் தீர்மானிப்பதில்லை என்பதைத் தனது சாதனையால் உலகிற்கு உணர்த்தியிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த சோலைராஜ் தர்மராஜ். உடல் சார்ந்த சவால்களைத் த... மேலும் பார்க்க

ஸ்குவாஷ்: ரசிகையின் கனவு நனவானது: 8 முறை உலக சாம்பியன் எல் ஷெர்பினியை வீழ்த்திய 18 வயது அனஹத் சிங்!

சிறுவயது முதல் வியந்து பார்த்த உலக சாம்பியனையே வீழ்த்தி வரலாறு படைத்த இளம் வீராங்கனை! 30 நிமிடங்களில் முடிவுக்கு வந்த ஆட்டம்; காலிறுதிக்கு முன்னேறி இந்திய ஸ்குவாஷ் உலகின் கவனத்தை ஈர்த்த அனஹத் சிங்!சில... மேலும் பார்க்க

பேட்மிண்டன் முதல் பவர் லிஃப்டிங் வரை... ஆசிய பாரா விளையாட்டுகளில் தமிழகத்தின் முத்திரை!

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்து வருகின்றனர். பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், பவர் லிஃப்டிங் எனப் பல்வேறு போட்டிகளில் தமிழக வீரர்களின் சாதன... மேலும் பார்க்க