98 கோடி பங்குகள், 83 டாலர் விலை... பங்குச்சந்தைக்கு வரும் AI நிறுவனம் Anthropic;...
திருச்சி உய்யக்கொண்டான் திருமலை கற்குடிநாதர்; கவலைகள் தீரும்... ஆயுள் விருத்தி நிச்சயம்!
திருச்சி, உய்யக்கொண்டான் திருமலை, உய்யநாதர் கோயில் பாடல் பெற்ற தலம். அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்றது. நந்திவர்ம பல்லவனால் புனரமைக்கப்பட்ட பழைமையான கோயில். மார்க்கண்டேயரைக் காப்பாற்றுவதாக வாக்களித்தபடி ஈசன் அருள் செய்த தலம்.
இங்கு வந்து வேண்டிக்கொண்டால், உங்கள் வேண்டுதல்களைக் காப்பதாக ஈசன் உறுதிகொள்வாராம். அதை ஏதாவது சகுனத்தின் வழியே அறிவிக்கவும் செய்வாராம்.
தேவாரங்களில் இத்தலத்தின் திருநாமம் கற்குடி. ஈசன் கல் மலையில் குடியிருப்பதால் கற்குடி என்னும் பெயர் பெற்றது. `கலைசேர் கையினனே திருக்கற்குடி மன்னிநின்ற அலைசேர் செஞ்சடையாய் அடியேனையும் அஞ்சலென்னே!' என்று தொழுகிறார் சுந்தரர்.
நந்திவர்ம பல்லவன் காலத்தில் திருப்பணி நடந்ததால், இவ்வூர் நந்திவர்ம மங்கலம், ராஜாஸ்ரய சதுர்வேதி மங்கலம் என்றானதாகக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

மிருகண்ட ரிஷி, பிள்ளை வரம் கேட்டு ஈசனை வேண்ட, 16 ஆண்டுகளே ஆயுள் கொண்ட மார்க்கண்டேயர் மகனாக அவதரித்தார். மார்க்கண்டேயருக்கு 14 வயதானது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் மகன் மரித்துவிடுவானே என்று தவித்த பெற்றோர், மார்க்கண்டேயரிடம் உண்மையைக் கூற, அவரும் ஆயுள் பலம் வேண்டிப் பல திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டார்.
அப்போது கற்குடிக்கும் வந்தார். அங்கு அவரின் அதீத பக்தியைக் கண்டு மெச்சி, ஈசன் உமையவளுடன் காட்சி தந்தார்; `உன்னைக் காக்கிறேன்’ என்றும் வாக்கு தந்தார்.
`காப்பேன்' என வாக்களித்தது கற்குடியில்; காத்தது திருக்கடவூர். பக்தனைக் காக்கிறேன் என வாக்குத் தந்து, மார்க்கண்டேயரின் வாழ்வில் உய்வு தந்ததால், `உய்யக்கொண்டார்' என்றானார், ஈசன். அங்குள்ள திருமலையோடு சேர்ந்து உய்யக்கொண்டான் திருமலை என்று ஊர்ப் பெயரும் வழங்கலாயிற்று.
திருச்சி - வயலூர் சாலையில் உய்யக்கொண்டான் மலை உள்ளது. திருச்சி மாநகரில் இருந்து பால் பண்ணை, தென்னூர் தாண்டி 9 கி.மீ தொலைவில் உள்ளது. அரசுப் பேருந்துகள் உட்பட வாகன வசதிகள் பல உண்டு. ஆலய நுழைவாயிலில் இருக்கும் நீளமான மண்டபத்தைக் கடந்தால், ஞானவாவி குளத்துக்கு எதிரில் உள்ள படிகளில் ஏறி மலைமேல் எழுந்தருளியுள்ள ஈசனை தரிசிக்கவேண்டும்.
45 படிகளைக் கடந்தால், கொடிமரம் அருகே... ஈசனின் திருவடிச் சுவடுகள். மார்க்கண்டேயனுக்கு அருள்வதற்காக ஈசன் நின்றபோது, அவன் திருப்பாதங்கள் அப்படியே நிலைத்தனவாம்.பாதங்களை வணங்கி உள்சென்றால், கருவறை. அங்கே மேற்கு நோக்கியவராக அமர்ந்திருக்கும் உய்யக்கொண்டார், கற்குடியப்பர், உஜ்ஜீவநாதர், அபயநாதர், உச்சி முக்தீசர், கற்பகநாதர், உச்சிநாதர் என்றெல்லாம் திருநாமங்கள் கொண்ட சர்வேசனைத் தரிசிக்கலாம்.

அழகிய திருமேனி; சுயம்பு லிங்கம்; பளபளக்கும் பாணம்; சதுரபீட ஆவுடையார். ஈசனைப் பார்க்கப் பார்க்க, உள்ளம் உருகி நெகிழ்கிறது. நான்முகன், நாரதர், உபமன்யு ரிஷி ஆகியோரும் வழிபட்டுள்ளனர். ஈழ நாட்டரசர் உச்சிக் காலத்தில் இங்கு வந்து இங்கு வழிபட, முக்தி பெற்றாராம் அதனால் ஈசன் உச்சி முக்தீசர் என்றானாராம்.
நந்திவர்மன் வணங்கிய தலம்; செம்பியன்மாதேவி போற்றிய தலம்; குந்தவை நாச்சியார் அன்னதானம் செய்த தலமிது; அருணகிரியார் `கைத்தல நிறைகனி’ என்ற திருப்புகழை இங்குதான் இயற்றினாராம். மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள், `கற்குடி மாமலை மாலை’ என்ற பெரும் தோத்திரப் பாடல்களை இங்கு வந்து இயற்றியுள்ளார்.
இங்கே இரண்டு அம்பிகையர். மூலவரான ஸ்ரீஅஞ்சனாட்சி (மைவிழியம்மை) மேற்கு நோக்கி அருள்கிறாள். இவளை `பழைய அம்பாள்’ என்கின்றனர். நான்கு திருக்கரங்களுடன் அம்பாள் அருள்கிறாள். மேல் திருக்கரத்து மலர் உடைந்துவிட அம்பாளின் பின்னப்பட்ட சிலாரூபத்தை நீக்கிவிட்டு, புதிய அம்பாள் விக்ரகத்தை நிர்மாணிக்க முடிவுசெய்தனர்.
ஆனால், ஊர் முக்கியஸ்தர்களின் கனவில் வந்த அம்பாள், தன்னை அகற்ற வேண்டாம் என்று தெரிவித்தாளாம்! அதனால், விக்ரகத்தை அப்புறப்படுத்தாமல், புதிய விக்ரகத்தை வேறு இடத்தில் பிரதிஷ்டை செய்தனர். பழைய அம்பிகையின் சந்நிதிக்கு வடக்கில், கிழக்குப் பார்த்தபடி அருள்கிறாள் புதிய அம்பிகையான ஸ்ரீபாலாம்பிகை. இருவருமே மங்கல வாழ்வருளும் மாதரசி என்று சிலிர்க்கிறார்கள் பக்தர்கள்.

இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டாலே மனக்கவலைகள் தீரும் என்பது நம்பிக்கை. இப்படிப்பட்ட அற்புதத்தலத்துக்கு ஒருமுறை சென்று வாருங்கள். வாழ்க்கை வளமாகும்; நலமாகும்.




















