செய்திகள் :

நித்தம் - சிறுகதை

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

வேலை முடிந்து அந்த மின்ரயிலில் ஏறும்பொழுது மாலை முடிந்து இரவு ஆகத் தொடங்கி இருந்தது. எனக்கென தனியான நேரமிது. ஒரு மணி நேரம் பத்து நிமிடம் கிடைக்கும். அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டே, ஹெட்போனில் பாட்டு கேட்டுக் கொண்டு அரைத் தூக்கத்தில் ஒரு இரயில் பயணம். இரயில் ஓடத் தொடங்கியது.

அந்த மின்கம்பத்தைத் தாண்டும்பொழுது தான் சுருக்கென்றது. படபடவென்று வந்தது. மேலாளரின் மேசையில் இடப்பக்கம் இருந்த மூவ்மென்ட் ரெஜிஸ்டரை வலப்பக்கத்துக்கு மாற்றாமலே வந்துவிட்டேன். அவர் அதைப் பார்க்கக் கூடப் போவதில்லை. நான் அலுவலகம் செல்வதற்கும் முன் அவர் வந்து விடுகிறார். அவருக்கு முன் நான் போனாலும் அறைக்குள் செல்ல அந்நேரத்துக்கு அனுமதி இருக்காது. ஆனால், அவர் எனக்கு முன்னமே அங்கிருப்பார். என் பொறுப்பாளர் தெளிவாக சொல்லி இருந்த வேலைகளில் இது ஒன்று. அந்த ரெஜிஸ்டரில் சரியாக கையெழுத்து வாங்கி விட வேண்டும் என்பது. இப்போது என்ன செய்வது?

அந்த மின்கம்பம் நான் முதல் நாள் வேலைக்குப் போகும்போதிலிருந்தே கவனித்துக் கொண்டு இருப்பது. அந்த ஊரின் முதல் மின்விளக்கு இந்த கம்பத்தின் மின்சாரத்தில் தான் எரிந்திருக்கும். நான் பார்ப்பதைப் போல, அந்த கம்பமும் எத்தனை எத்தனையோ பேரைத் தினம் தினம் பார்த்துக் கொண்டிருக்கும். இந்த இரயில் எத்தனை முறை அந்தக் கம்பத்தைக் கடந்திருக்கும்?

மேலும் நிறைய கம்பங்கள் கடந்துவிட்டிருந்தன. எனக்கு இப்பொழுது தலை பாரமாக இருந்தது. ரெஜிஸ்டர் அதுவாக நகர்ந்து வலப்பக்கம் போய் விடாதா என்று தோன்றிக்கொண்டே இருந்தது. ஊரில் இருந்து வரும் பாட்டி சொல்லி இருக்கிறாள்; அவளுடைய பாட்டி அவளுக்குச் சொல்லி இருக்கிறாள் என்று. எள்ளுப் பாட்டி, எள்ளுத் தாத்தா தாத்தா கடைக்குச் செல்லும்பொழுது, வாங்கி வர வேண்டிய பொருள் ஏதேனும் சொல்ல மறந்து விட்டால், பாட்டி அருகில் இருக்கும் உயரமான மரத்திடம் சொல்லி விடுவாளாம்;

தாத்தா வீடு வரும்போது அந்த பொருள் அவர் தலைக்கூடையில் இருக்குமாம். என் பாட்டி சொன்னாள்: அது எந்த மரம் என்று தெரியவில்லை என்று. அவளும் வேறு பல மரங்களில் முயன்று பார்த்து சில நேரங்களில் தாத்தா அவளுக்குப் பிடித்த தேன் மிட்டாய் மட்டும் வாங்கி வந்ததாக சொன்னாள்.

நான் அந்த மாதிரி ஒரு மரத்தைத் தேடி ரெஜிஸ்டரை இடம் மாற்றச் சொல்ல வேண்டும். இறங்கியவுடன் அதுதான் முதல் வேலை. இரயில் நிலையத்தின் அருகில் நிறைய மரங்களைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறேன்.

சீனியர் குமார் அண்ணன் தான் பல வருடங்களாக எங்கள் கம்பெனியில் இருப்பவர். அவர்தான் இம்மாதிரி விஷயங்களில் பலருக்கும் முன்னோடி. மூவ்மென்ட் ரெஜிஸ்டர் என்பது எவ்வளவு முக்கியம் என்று சொல்லி இருந்தார். முன்னொரு முறை, மேலாளர் அப்போதிருந்த துணை மேலாளரை இம்மாதிரி ஏதோ ரெஜிஸ்டரைச் சரியாக வைத்து கையெழுத்து வாங்கவில்லை என்று மெமோ கொடுத்ததாகவும், அதற்கு அந்த துணை மேலாளர் மெமோ காகிததைக் கிழித்து மேலாளர் மேசையில் வைத்துவிட்டு, வேலையை விட்டுப் போய் விட்டதாகவும் சொன்னார்.

ஒரு வார்த்தை, எந்த ரெஜிஸ்டரால் அது நடந்தது என்று அண்ணனிடம் கேட்க வேண்டும். தலை பாரம் இப்பொழுது வலியாக மாறி இருந்தது.

எல்லாவற்றையும் மறந்து சற்று தூங்கலாம் போல இருந்தது. தலைவலி என்னை விடப் பெரிதாக ஆகி இருந்தது. வேறு பெட்டியில் இருந்து நான் இருந்த பெட்டி வழியாக கூச்சலிட்டுக் கொண்டு வந்த அந்த நான்கு பேரும் என்னைப் பார்த்ததும் அமைதி ஆகி, வணக்கம் வைத்துக் கொண்டே போனார்கள். நான் கை காண்பித்து முறுவலித்தேன். அவர்களின் சீருடை பழுப்பும் நீலமும் கலந்த ஒரு நிறம். அவர்களின் வருகைப் பதிவேடு, அந்த ரெஜிஸ்டரின் ஒரு பகுதி. அது நாளை காலை கையெழுத்து ஆனால்தான் மதியம் இவர்களுக்கு சம்பளம் தரப்படும். எனக்கு வயிற்றில் யாரோ அழுத்தியது போல உணர்வு. பெரிய தவறு. உடனே இறங்கிப் போய் ரெஜிஸ்டரை மாற்றி வைக்க வேண்டும் என்று எண்ணினேன். ஆனால், இப்பொழுது இறங்குவதால் எந்த பயனும் இல்லை என்பது புரிந்து இன்னும் தலை எரியத் தொடங்கியது.

நான் இந்த அலுவலகத்துக்கு வந்து ஏழு மாதங்கள் ஆகிவிட்டன. ஒரு பொது மேலாளர். இரண்டு மேலாளர்கள். பதினாறு துறை பொறுப்பாளர்கள். நான் விற்பனைத் துறைக்காரன். என் பொறுப்பாளர், இந்த கம்பெனியின் உரிமையாளரான அரசியல் பிரமுகருக்கு நெருக்கம் என்றார்கள்- சொந்தமோ ஏதோ. தேர்தல் காலம் என்பதால், உரிமையாளருடன் இணைந்து வேலை பார்க்க வேண்டிய அவசியத்தை சொல்லிவிட்டு என் பொறுப்பாளர், என்னிடம் தன்னுடைய சில வேலைகளை செய்ய சொல்லி இருந்தார்.

'மேனேஜர் ஏதாவது கேட்டாருன்னா என்கிட்ட ஒரு கால் பண்ணுயா', என்றிருந்தார். அவர் விட்டுச் சென்ற இந்த ஒரு வாரத்தில் மேலாளர் எதுவும் கேட்டிருக்கவில்லை. இப்பொழுது, பொறுப்பாளருக்கு போன் செய்து கேட்கலாமா என்று தோன்றியது. ஆனால், என்ன கேட்பது? ரெஜிஸ்டரில் மேலாளர் கையெழுத்து போடவில்லை என்றா சொல்வது? ரெஜிஸ்டர் அவர் மேசை மேல்தான் இருக்கிறது; அவரைக் கைஎழுத்து போடச் சொல்ல வேண்டும் என்றால் பொறுப்பாளர் என்ன நினைப்பார். என் தலை வெடித்து விடும்போல தோன்றியது.

இங்கு சேருவதற்கு முன் எட்டாண்டுகள் பூனா நகரில் ஒரு சோப்பு ஷாம்பு கம்பெனியின் விற்பனைத் துறையில் ஒரே மேற்பார்வையாளனாய் வேலை செய்திருக்கிறேன். அத்தனை சரக்குகளின் போக்கும் வரத்தும் விரல் நுனியில் இருக்கும். எல்லா கணக்குகளும் தினமும் கொடுக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, சரக்குகள் கையாளப்படும்.

என்மீது எந்த புகாரும் இல்லை. அந்த கம்பெனியை விரிவாக்கம் செய்யும்பொழுது, அதன் உரிமையாளர் அவரோடு மும்பைக்கு வரச் சொன்னார். எனக்கு ஊருக்குப் போக வேண்டும் என்று தோன்றியதை அவரிடம் சொன்னேன். அவர்தான் அவருடைய தொடர்பில் இங்கே அனுப்பினார். எப்பொழுது கூப்பிட்டாலும் உடனே வர வேண்டும் என்று உரிமையாகக் கூறி வழி அனுப்பினார். அவருக்கு போன் செய்யலாமா? இது மாதிரியாக, ஒரு சின்ன பிரச்சினை சார் என்று? பிறகு எனக்கே தோன்றியது- சின்ன பிரச்சினை தானே என்று? இன்னும் பிரச்சினையா என்றும் தெரிய வில்லை. அவரை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்?

இந்த நேரத்தில் தான் எனக்கு சட்டென்று ஒரு விளக்கு எரிந்தது. ஏன் இவ்வளவு பயம்? மனிதன் என்பவன் தவறு செய்பவன் தானே? 'ஹியூமன் எர்ரர்' என்கிறார்களே? நாளை போய் ஒரு மன்னிப்பு கேட்டுவிட்டால் போகிறது. இனிமேல் இது நிகழாது என உத்திரவாதம் கொடுக்கலாம். வேறு என்ன செய்வது? வேறு எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணத்தால் தான், வேறு ஏதேனும் வழி இருக்குமா என்று மூளை தேடிக் கொண்டே இருந்தது. வேறு வழி ஏதாவது தென்பட்டால் பரவாயில்லை.

இங்கே கண்முன் போன நான்கு பணியாளர்கள் மாதிரி நானூற்றுப் பத்து பேர். அவர்களின் சம்பளம், அவர்களின் வாழ்வாதாரம் - என்னால் கெடப் போகிறது என்று தோன்றியது. 'இறைவா! நான் செய்த தவறுக்கு எனக்குத் தானே தண்டனை கொடுக்கப்பட வேண்டும். அவர்களுக்கு ஏன்?' என்று எண்ணினேன். இறை நம்பிக்கை என்று எனக்கு இருக்கிறதா என்று தெரியாது. ஆனால், இத்தகைய குழப்பமான நேரங்களில் யாரிடம் சொல்ல முடியும் என்றும் என்னால் நிர்ணயம் செய்ய முடியவில்லை.

இரயில் நிலையம் வந்து விட்டது. நான் என் பையை எடுத்துக் கொண்டு இறங்கினேன். நிலையத்தை விட்டு வெளியே வந்து அங்கிருந்த சின்ன விநாயகர் கோவிலில் அமர்ந்தேன். பார்க்கிங் பகுதிக்குப் போய் அங்கிருந்து பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்ப வேண்டும். அயர்ச்சியாக இருந்தது. சிறிது நேரம் அமர்ந்திருப்போம் என்று தோன்றியது. ஒரு சில நிமிடங்களில் அந்த இரயில் நிலையம் காலியாகி இருந்தது.

இரவின் இருள் கவிந்து தனிமையில் எந்த சக்தியும் அற்றவனாக அங்கு அமர்ந்து கொண்டிருந்தேன். எந்த யோசனையும் இல்லை. தலை வெடித்துக் கொண்டிருந்தது. கண்ணில் இருந்து நீர் வழியத் தொடங்கியது. அழும் அளவிற்கு என்ன நடந்தது என்று அறிவு கேட்கிறது; மனம், அறிவைக் கொஞ்சமும் மதிக்கவில்லை. என் அழுகையின் வீரியம் அதிகமானது. சத்தம் போட்டு அழத் தொடங்கினேன். அருகில் யாரும் இல்லை என்று அறிவு கொடுத்த தகவலை மனம் தன் இஷ்டத்துக்கு பயன்படுத்திக் கொண்டிருந்தது. என் வேலையைச் சரியாக செய்யாமையா? இத்தனை வருடத்தில் யாரும் கூறாத குறையை நாளைக்கு யாரோ என்மீது சொல்லப்போவதாலா? அந்த நொடியின் கணமா? அவமான உணர்ச்சியா? மெமோ காகிதம் தரப்போகும் வலியா? பலருக்குச் சம்பளம் போகாமல் இருக்கப் போவதாலா? அவர்களின் மனக் கஷ்டமா? அல்லது அவர்கள் விடப் போகும் சாபமா? அல்லது என் தலைவலியா? ஏன் அழுகை என்பது எனக்குத் தெரியவில்லை.

சற்று நேரத்தில், அழுகை அடங்கியது. போதும் என்று தோன்றியது. எழுந்து நடந்தேன். பைக்கை எடுக்கும்பொழுது அருகில் இருந்த அந்த பெரிய ஆலமரத்தைப் பார்த்தேன். அதனிடம் சொல்லிவைக்க எதுவும் முறைகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. மயில் விடு தூது, புறா விடு தூது எல்லாம் கொஞ்சம் நம்புகிற மாதிரி இருக்கின்றன; அவை குறைந்தபட்சம் பறப்பன. பாட்டியின் பாட்டி சொன்ன மரம் விடு தூது, நிலவில் இட்லி சுடுவது போன்ற செய்தியா என்று சொல்ல இயலவில்லை. நின்றேன். 'அந்த மூவ்மென்ட் ரெஜிஸ்டர் நாளைக்குச் சரியா கையெழுத்து ஆகிடணும்' என்று வாய் விட்டுச் சொன்னேன்.

வாய் விட்டுச் சொன்னதும்தான் அதன் வலி மீண்டும் என் மீது ஏறியது போல் இருந்தது. வீட்டுக்கு வந்து அம்மாவிடம் சாப்பாடு கேட்டு வாங்கி சாப்பிட்டு விட்டு உடனே படுக்கைக்கு வந்து விட்டேன். இன்னும் சீரான தலைவலி இருந்தது. குமார் அண்ணனுக்கு போன் செய்யலாம் என்று தோன்றியது.

இரண்டாவது ரிங்கில் எடுத்தார்.

'இன்னிக்கு நீ வரலையாப்பா?'

'கொஞ்சம் வேலை இருந்துச்சு அண்ணே. அதான் அடுத்த வண்டில ஏறினேன்.'

'அது கூட்டமா இருக்குமே. நம்ம ஒர்க்கர்ஸ் அந்த வண்டில நெறய பேரு வருவாங்களே... சரி... என்ன விஷயம்?'

'ஒண்ணும் இல்லைணே. நீங்க பழைய ஏ.எம். ஒருத்தரு எதோ ரெஜிஸ்டர் பிரச்சினையில வேலையை விட்டுட்டாருனு சொன்னீங்க இல்ல... என்ன ரெஜிஸ்டர் அது?'

'நம்ம அட்டெண்டன்ஸ், ஒர்க்கர்ஸ் அட்டெண்டன்ஸ், வண்டி போக்குவரத்து எல்லாம் மொத்தமா எழுதற ரெஜிஸ்டர்பா அது. எதுக்கு கேக்கறே?'

'எங்க இன்ச்சார்ஜ் மூணு நாலு வேலை குடுத்துட்டு போயிருக்காருணே. அதைச் சரியா பண்ணி வெக்கணும்ல. அதான் உங்ககிட்ட இந்த முக்கியமான ரெஜிஸ்டர் பத்திக் கேட்டுக்கலாம்னு.'

'உங்க இன்ச்சார்ஜ்-ம் நானும் ஒண்ணா வேலை பார்த்தவங்கதான் தெரியுமா? அவருக்கு ஓனர்கிட்ட நல்ல செல்வாக்கு. அதே சமயம் நல்ல மனுஷன். அவர் சொல்ற வேலைய சரியா பண்ணிடு.'

தூக்கம் வரவில்லை. வலி மட்டுமே வாழ்க்கையைப் போல் உணர்ந்தேன். நாளை ஒரு நாள், உடல் நிலை சரி இல்லை என்று வேலைக்கு விடுமுறை எடுத்து விடலாமா என்று யோசித்தேன். எப்படியும் நம் தவறு நம்மை விரட்டும்; அது நாளையாகவே இருக்கட்டும் என்று தோன்றியது.

அதிகாலையில் என் பைக்கில் இரயில் நிலையத்துக்குச் செல்லும்பொழுது சற்று அமைதியாக உணர்ந்தேன். என்ன நடக்கிறது பார்க்கலாம் என்று மனம் சொன்னது.

இரயிலில் குமார் அண்ணனைப் பார்த்தேன். அவருடன் இன்னொருவரும் இருந்தார். குமார் அண்ணன் அவரை உரிமையாளரின் வண்டிகளுக்கான பொறுப்பாளர் என்று அறிமுகப்படுத்தினார். உரிமையாளரின் வண்டிகள் சில அந்தப் பக்கம் ஓடுவதாகவும், தேர்தல் வேலைக்கு என்ன அவற்றைத் திருப்பிவிட வந்திருப்பதாகவும் சொன்னார். வணக்கம் வைத்தேன்.

குமார் அண்ணன் தொடங்கினார். 'நேத்து இவன் போன் வந்துச்சு. என்னடான்னா, பழைய ஏ.எம். பத்தி விசாரிக்கவாம்.'

அவர் இடைமறித்தார்.

'பழைய ஏ.எம். ஆ? கடைசி ஏ.எம். இல்ல அவரு?'

'ஆமா, ஏன் அதுக்கப்பறம் இன்ச்சார்ஜ் மட்டும் போடறாங்க? ஏ.எம். போடறது இல்லையே?'- குமார் அண்ணன்

'அந்த ஆள் பண்ண வேலை அப்படி. ரெஜிஸ்டர்ல இருந்த பேர்ல பாதிதான் உண்மை. மேனேஜர் கண்டுபுடிச்சிட்டார். அதான் பெரிய சண்டை ஆயிடுச்சு. அவர் எழுதாம விட்ட பேரை எல்லாம் கணக்குப் பண்ணி எல்லாருக்கும் சரியா சம்பளம் செட்டில் பண்ண பதினஞ்சு நாள் ஆயுடுச்சி. அதுக்குள்ளே அந்த ஏ.எம்., அவர் ரெஜிஸ்டர் இருந்த இடத்தைச் சரியா சொல்லாததுக்கு அவரை வேலையை விட்டு போக சொன்னாங்கனு எல்லாருக்கும் மெசேஜ் அனுப்பி, இனிமே சம்பளம் சரியா வராதுன்னும் எல்லாருக்கும் சொல்லி... அது ஒரு பெரிய காமெடி...'

அவரே தொடர்ந்தார்.

'அதுக்கப்றம் தான் நம்ம கம்பெனில கைரேகை மெஷின் கொண்டு வந்தாங்க. இப்போ எல்லாமே கைரேகை தான். அவனவனுக்குச் சரியா சம்பளம் போயிடுது. வண்டி டிரைவர்க்கும் கை ரேகை தான். எத்தனை கிலோமீட்டர்னு கணக்குப் பார்த்துடலாம்.'

நான் வாய் திறந்தேன். 'சார். இன்னும் அந்த ரெஜிஸ்டர் இருக்கே சார்.'

'அது சும்மா பா. கம்பெனில எல்லா இடத்துலயும் கம்ப்யூட்டர் வந்தாலும் ஓனர் வந்தா அவருக்கு கையெழுத்து போட அங்கங்க நாலு ரெஜிஸ்டர் இப்போவும் வெச்சுருக்காங்க.'

எனக்கு எல்லாம் விடுபட்டு மூச்சு சீராக வந்தது. தலையில் நிறைய பனி கொட்டியது போல குளிர்ந்தது. மகிழ்ந்தேன். ஹெட்போன் எடுத்து பாட்டு கேட்கத் தொடங்கினேன்.

அந்த மின்கம்பத்தைத் தாண்டும்போது தான் சுருக்கென்றது.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

தி.நகர் நடைபாதை முதல் டிரில்லியன் இலக்கு வரை: ஒழுக்கமும் பொருளாதார வளர்ச்சியும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மனம் என்னும் மாயக்கண்ணாடி! - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

நாராயணின் நிலம்! - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கால நதியில் ஒரு பயணம்: பொன்னியின் செல்வன் சுவடுகளில் 'பழையாறை' வரை!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தீபாவளி - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சடுகுடு பாட்டும்... ஜில் நினைவுகளும்: பாரதிபுரத்தை அதிரவைத்த பனிமலர் கபடிக்குழு!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க