``நீங்கள் இருக்கும்போது எனக்கு நாட்டைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை" - பிரதமரிடம...
நெல்லை: முதல்வர் நிகழ்ச்சி பாதுகாப்புக்குச் சென்ற பெண் போலீஸூக்குப் பாலியல் தொல்லை - எஸ்.எஸ்.ஐ கைது!
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் முதல்வர் விஜய் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி 3-ம் தேதி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் பாதுகாப்புப் பணிக்காக நெல்லையில் இருந்து போலீஸார் சென்றிருந்தனர். அந்தக் குழுவில் சென்ற பெண் காவலரிடம், குழுவில் வந்த சிறப்பு எஸ்.ஐ-யான குமார் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் புகார் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முதல்வரின் பாதுகாப்புப் பணியை முடித்துவிட்டு நெல்லைக்கு காவல்துறை வாகனத்தில் போலீஸ் குழுவினர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அதே வாகனத்தில் வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரான குமார் என்பவர் தனது கால்களை சீட்டுக்கு அடியில் நீட்டியபடி அமர்ந்து, பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதனால் அதிர்ச்சியடைந்த பெண் காவலர், பின்னால் அம்ர்ந்திருந்த சிறப்பு எஸ்.ஐ-யைக் கண்டித்துள்ளார்.
பெண் போலீஸின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாத சிறப்பு எஸ்.ஐ., தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த பெண் காவலர், சிறப்பு எஸ்.ஐ குமாரை, வாகனத்திலேயே தாக்கியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவர் குடிபோதையில் இருந்ததால் தொடர்ந்து பெண் காவலருக்குத் தொல்லை கொடுத்தபடியே வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

காவல்துறை வாகனத்தில் வந்தபோது தனக்கு நேர்ந்த இந்தச் செயலால் மனம் நொந்துபோன பெண் காவலர், சொந்த ஊருக்குத் திரும்பியதும் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் குமாரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், சம்பவம் நடந்ததை உறுதிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்த போலீஸார், குமாரைக் கைதுசெய்தனர்.
கைது செய்யப்பட்ட குமார், நெல்லை மாவட்டம், தாழையூத்து பகுதியைச் சேர்ந்தவர். அவர், மேலப்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தார். போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் நீதிமன்றத்தில், தனக்கு காலில் நரம்பு சுருட்டல் நோய் ஏற்பட்டுள்ளதால் காலை நீட்டியபோது தவறுதலாக பெண் காவலர் மீது பட்டுவிட்டது. அதை அவர் தவறாகப் புரிந்து கொண்டதாகத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம, அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை மாநகரக் காவல்துறை ஆணையர் தேஷ்முக் சஞ்சய், விசாரணை மேற்கொண்டார். அதில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியில் மது போதையில் இருந்தததை உறுதிசெய்தார். எனவே, போதையில் பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அவரை சஸ்பெண்ட் செய்து காவல்துறை ஆணையர் தேஷ்முக் சஞ்சய் உத்தரவிட்டார்.



















