“Love பண்ணுங்க சார்... Life நல்லா இருக்கும்”- இளைஞர்களுக்காக Dating App தொடங்கிய...
`பாஜகவின் கைக்கூலிதான் தேர்தல் ஆணையம்..!' - டெல்லி எதிர்க்கட்சிகள் பேரணியில் தமிழ்நாடு எம்.பி-க்கள்
டெல்லியில் எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணியில் கலந்து கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். இது குறித்து ஒவ்வொன்றாக காணலாம்!

`ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி அறப்போர்!'
விசிக தலைவர் திருமாவளவன்:
``எதிர்க்கட்சிகளை சேர்ந்த 200-க்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகத்தை காப்பதற்காக இங்கு கூடி இருக்கிறோம். ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டுமென்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி இந்த அறப்போர் நடந்து வருகிறது. இந்தியாவில் தேர்தல்களில் முறைகேடு நடந்திருக்கிறது என்பதை தேர்தல் ஆணையர்கள் இருவருமே ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளால் பொதுமக்கள் கொதித்துப் போய் உள்ளனர். இது பாஜக-வை ஆட்சியில் இருந்து அகற்றும் ஒரு புரட்சியாக வெடித்து இருக்கிறது."

`மக்கள் உணர்வை தடுக்க முடியாது!'
காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்:
``அதிகார திமிரோடு நடந்து கொள்வதால் மக்களின் புரட்சியைத் தடுக்க முடியாது. லத்தி அடி கொடுக்கலாம், கைது செய்யலாம் ஆனால் மக்கள் உணர்வை தடுக்க முடியாது. மக்களுக்கு தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை போய்விட்டது. எஸ் ஐ ஆர் நடவடிக்கையே சட்டத்திற்கு புறமானது. ஒரு வாக்காளரை பட்டியலில் சேர்ப்பது என்பது தேர்தல் ஆணையம் கொடுக்கும் பரிசு ஒன்றும் கிடையாது... அது இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமை. ஆனால் அந்த உரிமையை தான் தேர்தல் ஆணையம் கேள்விக்குறியாக்கி வருகிறது."
`ஒரு நொடிகூட அந்த பதவியில் இருக்க தகுதி இல்லை!'
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலர் டி ராஜா:
``நாட்டில் இவ்வளவு பிரச்னைகள் போய்க்கொண்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. டெல்லி காவல்துறை நேரடியாக மத்திய உள்துறை அமைச்சரின் கீழ் வருகின்றது. ஆனால் டெல்லி காவல்துறை எதற்கெடுத்தாலும் கைது நடவடிக்கை உள்ளிட்டவற்றைத்தான் செய்கிறது.
தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் இனி ஒரு நொடிகூட அவர் அந்த பதவியில் இருக்க தகுதியை கொண்டிருக்க வில்லை. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லையென்றால் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும்."
`ஆர்.எஸ்.எஸ்-க்கு ஆதரவாகச் செயல்படும் அமைப்பாக மாறிவிட்டது!'
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ்:
``தேர்தல் ஆணையத்தை கண்டித்து நாங்கள் நியாயமான வழியில் தான் போராட்டம் நடத்துகிறோம். ஆனால் எங்களை தடுத்து தெருவில் உட்கார வைத்து விட்டார்கள், டெல்லி காவல்துறையினர். தேர்தல்களில் முறைகேடு நடக்கிறது என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். தேர்தல் ஆணையம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி-க்கு ஆதரவாக செயல்படும் அமைப்பாக மாறிவிட்டது. இரண்டு தேர்தல் ஆணையர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும் தலைமை தேர்தல் ஆணையர் ஒரு விஷயத்தை செய்கிறார் என்றால், இது எந்த அளவிற்கு முறைகேடு நிறைந்தது என்பதை புரிந்து கொள்ள முடியும். இவர்கள் உச்ச நீதிமன்றம் வரையும் சென்று பொய் சொல்லி இருக்கிறார்கள்."
`இத்தகைய நபர்தான் இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையராக வந்திருக்கிறார்!'
நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ:
``இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இந்திய ஜனநாயகத்திற்கு எதிராகவும் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் செயல்பட்டு உள்ளார். அவர் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். ஞானேஷ் குமார் கேரளாவில் பணிபுரியும்போது அவருடைய தொல்லையால் பலரும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இத்தகைய நபர்தான் இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையராக வந்திருக்கிறார். அவர் சமூகத்துக்கு தொடர்ந்து எதிராகவே செயல்பட்டு வருகிறார். குறிப்பாக படிவம் 6-ஐ பயன்படுத்தி அவர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இந்த முறைகேட்டிற்கு உச்ச நீதிமன்றத்தையும் அவர் பயன்படுத்த பார்த்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் அவருடைய முயற்சியை முறியடித்து உள்ளது. அதேபோல உடன் இருந்த இரண்டு தேர்தல் ஆணையர்களையும் அவர் ஏமாற்றி இருக்கிறார்."
`பாஜக-வின் கைப்பாவை!'
நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி:
``தேர்தல் ஆணையம் பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்து அக்கட்சியின் கைப்பாவையாகச் செயல்படுகிறது. தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரது வாக்குகள் பாஜக-விற்கு கிடைக்காது என்பதால் திட்டமிட்டே இந்த வாக்காளர்களை அவர்கள் பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். இதற்காக எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் பயன்படுத்தி இருக்கிறார். நீக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களுக்கான ஆவணங்களை எல்லாம் கொடுத்து தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கேட்டால், அதை காலதாமதம் செய்கிறார்கள். இத்தகைய மனுக்களை விசாரித்து முடிக்க மட்டும் 21 ஆண்டுகள் ஆகும் என நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றன. அப்படி இருக்கும்போது இது ஒரு மிகப்பெரிய அநீதி. தமிழ்நாட்டிலும் நீக்கப்பட்டவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையைத்தான் நாங்கள் முன்வைக்கிறோம்."
`மோடி அமித் ஷாவின் பேச்சைக் கேட்டு தான் அனைத்தையும் செய்திருக்கிறார்!'
மதுரை எம்.பி சு.வெங்கடேசன்:
``இதே கோரிக்கைகளைத்தான் நாங்கள் ஒன்றரை வருடங்களாக முன்வைத்து வருகிறோம். நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் என்று தொடர்ந்து நாங்கள் பேசி வருகிறோம். ஆனால் தொடர்ந்து எங்களை பாஜக விமர்சித்து வந்தது. ஆனால் இன்று நாங்கள் பேசியதுதான் உண்மை என்று ஆகி இருக்கிறது. எங்களது உண்மையை தேர்தல் ஆணையத்தின் இரண்டு ஆணையர்களும் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே உடனடியாக காலம் தாழ்த்தாமல் தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அது மட்டும் இல்லாமல் அவர் மீது கிரிமினல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும். அவர் மோடி அமித் ஷாவின் பேச்சைக் கேட்டு தான் அனைத்தையும் செய்திருக்கிறார். இதுவரை மோடியோ அமித் ஷாவோ வாயை திறக்கவில்லை. உச்ச நீதிமன்றம் வரை இது குறித்து சொல்லிவிட்டார்கள்... ஒரு சர்வாதிகார ஆட்சி எப்படி நடக்கும் என்பதற்கு பாஜக ஆட்சி உதாரணமாக இருந்து வருகிறது. இந்திய ஜனநாயகம் ஒட்டுமொத்தமாக சீரழிக்கப்பட்டு இருக்கிறது."

`பாஜகவின் கைக்கூலி, தேர்தல் ஆணையம்!'
காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த்:
``ஜனநாயகத்திற்கு முழுமையாக விரோதமாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. பாஜக தான் இதை முன் நின்று நடத்துகிறது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கருவியாக செயல்பட்டு இருக்கிறார். அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். அவரது ராஜினாமா நடக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். தேர்தல்களில் முடிவுகளை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர தேர்தல் ஆணையம் கிடையாது. ஆனால் மக்களின் உரிமையை பறித்த தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கடுமையாக கண்டிக்கிறோம். எங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும். பாஜகவின் கைக்கூலியாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு உள்ளது என்பதைத்தான் உச்ச நீதிமன்றத்தின் கருத்துகளும் உறுதிப்படுத்துகிறது."















