செய்திகள் :

பிசினஸில் இந்த ஒரு `சிம்பிள் விஷயம்' இருந்தால் போதும்... நீங்களும் வெற்றிகரமான பிஸினஸ்மேன் ஆகலாம்!

post image

மிளகாய், புளி, பருப்பு வகைகள், கம்பு, திணை, சோளம், கடும், சீரகம், பூண்டு என தானியங்களையும் மளிகைப் பொருள்களையும் வேனில் கொண்டு வந்து, பல்வேறு ஊர்களில் தெருமுனைகளில் கடைவிரித்து விற்பனை செய்துவருகிறார் சேலத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர். வெற்றிகரமாக பிசினஸ் செய்து வருகிறார் அவர். வியாபாரத்தில் பின்பற்றிய ஒரு முக்கியமான விஷயம்தான் அவருடைய வெற்றிக்குக் காரணம் எனச் சொல்லலாம்.

அது ஒன்றும் மிகவும் சிரமமான காரியம் அல்ல. மிகச் சுலபமாகப் பின்பற்றக்கூடிய ஒரு பழக்கமே.

அதாவது, ஒரு ஏரியாவில் இந்த மாதம் 3-ம் தேதி கடை போடுகிறார் என்றால், அடுத்தடுத்து ஒவ்வொரு மாதமும் அதே 3-ம் தேதியே தவறாமல் கடை போடுகிறார். எந்த ஊரில் என்ன தேதியில் ஒரு மாதம் கடை போடுகிறாரோ, அந்தத் தேதியை மாற்றாமல் வியாபாரம் செய்கிறார். அந்தந்தப் பகுதி மக்களின் மனதில் இந்தத் தேதி பதிந்துவிடுவதாகச் சொல்கிறார் அவர்.

‘‘புளி தீர்ந்துபோய் இரண்டு நாள் ஆச்சு. சரியா 5-ம் தேதி கடை போடுவீங்கன்னுதான் வெயிட் பண்ணி உங்ககிட்ட வாங்குறேன்’’ என்று அந்தப் பகுதி மக்கள் பலரும் சொல்வதாகச் சொல்கிறார்.

மாடல் படம்

இதே போல்தான் இடியாப்பம் விற்பனை செய்யும் 30 வயது இளைஞர் ஒருவர், ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு, தொடர்ந்து சரியாக காலை 7 மணிக்கு வருகிறார். அடுத்த ஏரியாவுக்கு 7.15-க்குச் செல்கிறார். அதற்கு அடுத்த ஏரியாவுக்கு 7.30-க்குச் செல்கிறார்.

அவரிடம் இந்த டைம் மேனேஜ்மென்ட் பற்றி கேட்டபோது, “வியாபாரத்தில் டைமிங் ரொம்ப முக்கியம் சார். 7 மணி ஆச்சுன்னா இடியாப்பம் வாங்கலாம்ன்னு மக்கள் மனசுல ஆணி அடிச்ச மாதிரி பதிஞ்சுடும். காலையில 6.30 மணில இருந்து 8.30 மணிக்குள்ளதான் இந்த பிசினஸ். காத்து மழை அடிச்சாலும் இந்த டைம் மாறக்கூடாது. நம்ம இஷ்டத்துக்கு நேரத்தை மாத்தினா வியாபாரம் சரியா போகாது...” என்றார்.

அம்பானிகளின் கார்ப்பரேட் நிறுவனம் முதல் உப்பு, புளி, மிளகாய் விற்கும் அண்ணாச்சி கடைகள் வரை வெற்றிக்கு இந்த டைமிங் மிகவும் காரணமாக இருப்பதைக் கவனித்துப் பார்த்தால் தெரியும்.

பிசினஸ் வெற்றிக்கு டைம் மேனேஜ்மென்ட் மிக முக்கியம் என பிசினஸ் ஆலோசகர்களும், வெற்றி பெற்ற பிசினஸ்மேன்களும் வலியுறுத்துகிறார்கள். எல்லோரும் எளிதாகப் பின்பற்றக்கூடிய பொதுவான கருத்தாக அவர்கள் என்ன சொல்கிறார்கள் எனப் பார்ப்போம்.

‘‘வாடிக்கையாளரின் மனதில் ‘சரியான நேரத்தை’ பதிவு செய்வது மிக முக்கியம். ஏரியாவாரியாக பிசினஸ் செய்கிறவர்கள் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து கடை நடத்தினாலோ, சேவை வழங்கினாலோ அந்த நேரம் வாடிக்கையாளரின் மனதில் நன்றாகப் பதிந்துவிடும். மாதத்தின் குறிப்பிட்ட சில நாள்களில் இந்தப் பகுதியில் இவருடைய கடை இருக்கும், சேவை கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உருவாகும். இதேபோல நிரந்தரமாக ஒரு ஏரியாவில் பிசினஸ் செய்கிறவர்களும் காலையில் சரியான நேரத்தில் கடையைத் திறப்பதும், இரவு சரியான நேரம் வரை கடையை மூடாமல் வைத்திருப்பதும் மிக அவசியம்.

இந்தப் பழக்கம் வாடிக்கையாளர்களை உங்களைத் தேடி வர வைக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். நீங்கள் வாடிக்கையாளர்களை விளம்பரம் மூலமோ, துண்டு பிரசுரங்கள் மூலமோ தேடிச் செல்ல வேண்டியதில்லை. உங்கள் வருகை நேரம் அவருக்குத் மனதில் பதிந்துவிட்டால், உங்களுக்காக வாடிக்கையாளர்கள் காத்திருப்பார்கள். இதுதான் நிரந்தர வாடிக்கையாளர்களை உருவாக்கும் ரகசியம் என்றே சொல்லலாம்.

‘இவர் வருவாரா, இன்றைக்குக் கடை திறப்பாரா’ என்ற மக்களின் சந்தேகத்தைத் தவிர்க்க, டைம் மேனேஜ்மென்ட் மிக அவசியம். இன்று 7 மணி, நாளை 7.30, மறுநாள் 8 மணி என்று நேரத்தை மாற்றிக்கொண்டே இருந்தால், வாடிக்கையாளர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை குறையும். அடிக்கடி அறிவிப்பு இல்லாமல் கடையை மூடி வைத்தாலும் மக்களின் நம்பிக்கை குறைந்து போகும். வேறு கடைகளைத் தேடிச் சென்றுவிடுவார்கள்.

போட்டியாளர்களைவிட தனித்துவமான பொருளை பலரும் விற்பனை செய்யலாம். ஆனால், இந்த நேரத்தில், இந்த நாளில் பொருள் வாங்கலாம் என்ற அடையாளத்தை உருவாக்குவதுதான் உங்களை மற்ற வியாபாரிகளிடமிருந்து ஸ்பெஷலாகப் பிரித்துக் காட்டும்.

மாடல் படம்

ஒரு வாடிக்கையாளர் தொடர்ந்து குறிப்பிட்ட நேரத்தில் உங்களிடம் பொருள் வாங்க ஆரம்பித்துவிட்டால், அது அவருடைய தினசரி அல்லது மாதாந்தர பழக்கமாக மாறிவிடும். மக்களின் இந்த உளவியலை சரியாகப் புரிந்துகொண்டவர்களே பிசினஸில் அடுத்தடுத்த படிகளில் ஏற முடியும்.

இன்னொரு முக்கியமான விஷயம்... நேரம் சரியாகப் பின்பற்றப்படும்போதுதான் பொருள்கள் தேக்கம் இல்லாமல் விற்பனை ஆகும். இடியாப்பம், இட்லி, பால், காய்கறி போன்றவற்றுக்கு காலையில் தேவை அதிகம் இருக்கும். அதேபோல் மளிகைப் பொருள்களுக்கு மாதத்தின் ஆரம்ப நாள்களில் மக்களிடம் வாங்கும் பழக்கம் இருக்கலாம். வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ற நேரத்தைத் தேர்ந்தெடுத்து, அதற்கேற்ப பொருள்களின் இருப்பை உறுதிசெய்ய வேண்டியது மிக முக்கியம்.

சம்பளம் கைக்கு வரும் மாதத்தின் முதல் வாரத்தில் முக்கியமான பொருள்கள் இல்லை என்றால் வியாபாரம் பாதிப்படையும். அதேபோல ஏரியா வாரியாக கடை போடுகிறவர்களும் மாதத்தின் ஆரம்ப நாள்களைத் தேர்வு செய்வது லாபத்தை அதிகரிக்க உதவும்.

பெரிய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளுக்கு மட்டுமல்ல; சேவை கிடைக்கும் நேரத்துக்கும் ஓர் ஒழுங்கை வைத்திருக்கின்றன. சிறிய, தெருவோர வியாபாரிகளும் இதைப் பின்பற்றும்போது, அவர்களின் வியாபாரத்துக்கும் ஒரு பிராண்ட் இமேஜ் மக்களிடம் உருவாகி விடும்.

நேர மேலேண்மையைக் கடைப்பிடிப்பதன் இன்னொரு சாதகமான விஷயம்... எப்போது கிளம்ப வேண்டும், எவ்வளவு பொருள் எடுத்துச் செல்ல வேண்டும், எந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட முடியும். தேவையில்லாமல் நேரமும் வீணாகாது.

மழை, வெயில், சின்னச் சின்ன பிரச்னைகள் என்று ஒவ்வொரு நாளும் நேரத்தை மாற்றாமல், முடிந்தவரை சரியான நேரத்தைப் பின்பற்றும் வியாபாரிகள் மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்கள். வியாபாரத்தில் இந்த நம்பிக்கைதான் மீண்டும் மீண்டும் உங்களைத் தேடி வாடிக்கையாளர்கள் வர முக்கியக் காரணமாக அமையும்’’ என்கிறார்கள் பிசினஸ் வெற்றியாளர்கள்.

பிசினஸ் சிறியதோ பெரியதோ... நேரத்தைக் கடைப்பிடிக்கும் ஒழுங்கு இருந்துவிட்டால் நீங்களும் நிச்சயம் பிசினஸில் அம்பானி ஆகலாம்!

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4