Trisha: 'அன்பு அக்கா த்ரிஷாவுக்கு முதல் சங்கம்' - மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால்...
”பிரச்னை வரும்போது ரீல்ஸ் போட்டு மக்களை டைவர்ட் செய்கிறார் முதல்வர்” - உதயநிதி ஸ்டாலின் சாடல்
விவசாயக் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யவும், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தியும், மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுக்க தவறிய தவெக அரசைக் கண்டித்தும் திமுக சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தவெக-வுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பட்டன. பின்னர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, ''ஆடி 18 விழா அன்று காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும். ஆனால் இன்று காவிரி ஆறுகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இதுவே திமுக ஆட்சியில் இருந்தால் இந்த நிலமை ஏற்பட்டிருக்குமா? நம்ம தலைவர் இதை நடக்க விட்டிருப்பாரா.

குறுவையைக் காப்பாத்த முடியலை. சம்பா என்ன ஆகுமோனு விவசாயிகள் தவிச்சு நிற்கின்றனர். இது சாதாரணமாக நடந்த விஷயம் கிடையாது. நிர்வாக திறனற்ற டம்மி முதலச்சரால்தான் இது நடந்திருக்கு. திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை அப்போதையை முதலமைச்சர் நேரடியாகத் திறந்து வைத்தார். ஆனால் தற்போதைய தவெக ஆட்சியில் ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கவில்லை.
ஆகஸ்ட் மாதமும் வந்துவிட்டது. இன்னும் தண்ணீர் வரவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுபடி ஜூன், ஜூலை மாதங்களில் 42 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகாவில் இருந்து வந்திருக்க வேண்டும். இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. ஆனால் தமிழக முதலமைச்சர் வாய் திறந்து பேசவில்லை.
அவரது கவலையெல்லாம் திமுக மீது என்னென்ன பொய் வழக்கு போடலாம் என்பதிலேயே உள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சி நடத்துவதற்கு காங்கிரஸ் ஆதரவு வேண்டும். அதனால் கர்நாடக காங்கிரஸ் அரசை கேள்வி கேட்பதற்குத் துப்பில்லை. எதிர்த்து கேள்வி கேட்கப் பயபடுகிறார். ஒன்றிய அரசைப் பகைத்துக் கொண்டால் பிரச்னை வந்துரும் என்பதால் ஆட்சி அமைத்து மூன்று மாதங்கள் ஆக நிலையிலும் இது வரை பாஜக என்ற ஒரு வார்த்தை கூட வந்ததில்லை. முதல்வர் அவ்வளவு பெரிய தைரியசாலி.

மேகதாது பிரச்னையில் ஒன்றிய பாஜக அரசு ஒரு தலைபட்சமாகச் செயல்படுவதாகக் கூறி தமிழ்நாட்டு விவசாயிகள் டெல்லியில் போராடுவதற்கு ரயிலில் சென்றனர். மகாராஷ்டிரா போலீஸ் வழி மறித்து திருப்பி அனுப்பி விட்டனர். இதைக் கண்டித்து அறிக்கை விட்டோம். ஆனால் முதலமைச்சர் வாய்திறக்கவில்லை. மகாரஷ்டிராவில் பாஜக ஆட்சி நடக்கிறது. அதை எதிர்த்து கேட்பதற்கு முதல்வருக்குத் திராணி இல்லை. விவசாயிகளின் உரிமையை விட ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்கான சுயநலம்தான் அவருக்கு முக்கியம்.
ஒட்டு மொத்த விவசாயிகளும் இந்த அரசுக்கு எதிராகத் திரும்பியதும் கர்நாடக செல்வதாக ரீல் விட்டார். நாம் உட்பட அனைவரும் சொன்னோம். தயவு செய்து கர்நாடகா போக வேண்டாம் என்றோம். ஏன் அவர்களுடன் கூட்டணியில் இருப்பவர்கள் கூட சொன்னார்கள். கர்நாடக முதல்வர் தயவு செய்து இந்தப் பக்கம் வந்துடாதீங்க ஒரு சொட்டு தண்ணீர்கூட தர முடியாது என்றார். கர்நாடக முதல்வரைச் சந்திப்பது இருக்கட்டும், தமிழக விவசாயிகளைச் சந்தித்து கோரிக்கையைக் கேட்டாரா? அதை முதல்வர் செய்யவில்லை.

அரசு கூப்பிடவில்லை நாங்கள் போய் முதல்வரைப் பார்க்கிறோம் என கோட்டைக்குப் போன விவசாயிகளைக் குண்டுகட்டாகக் கைது செய்த அரசுதான் இந்தக் குதிரை பேர அரசு. அந்த அளவிற்கு விவசாயிகள் மீது முதல்வருக்கு வன்மம். நீர்வளத்துறைக்கு ஒரு அமைச்சர் இருக்கிறார். அவர் பத்திரிகையாளரைப் பார்த்தலே திருடன் மாதிரி தலைதெறித்து ஓடுகிறார். எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை. வேளாண்மை துறைக்கு ஒரு அமைச்சர் இருக்கிறார். பட்ஜெட்டை திருப்பதில் பூஜை போட்டு எடுத்து வந்துள்ளார். இதுதான் இந்த அரசின் லட்சணம்.
திருட்டு லாட்டரி விற்கிற ஒரு அமைச்சர், திருட்டு விசிடி விற்ற அமைச்சர், ப்ளாக் டிக்கெட் விற்ற அமைச்சர், உருடுகட்டையுடன் திரியும் அமைச்சர், போதைப்பவுடர் அமைச்சர் என மொத்த கேபினட்டும் ஒரு ஜோக்கர் கூட்டமாக உள்ளது. இந்த ஆட்சியில் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ரீல்ஸ் போடுகின்றனர்.
ஸ்கூல், ஹாஸ்பிட்டல் டாய்லெட்டைக் கூட விட்டு வைக்காமல் ரீல்ஸ் போடுகின்றனர். இரண்டு அமைச்சர்கள் அவர்கள் மாவட்டத்தின் உள்ள பள்ளிகளுக்குச் சென்று கட்சி பெயரைக் கோஷம் போடச் சொல்லி ரீல்ஸ் போட்டுள்ளனர். இதுமாதிர் கேடுகெட்ட ஆட்சியை தமிழ்நாடு இதுவரை பார்த்ததில்லை.
சென்ற மாதம் தென்காசியில் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தீபிடித்து எரிந்துள்ளது. ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர் நான்கு கேமராவுடன் சென்று செட் செய்து படம் பிடித்து பேக்ரவுண்ட் மியூசிக் போட்டு ரீல்ஸ் போட்டார்.
இப்படி ரீல்ஸ் போடுற ஆட்சியை தமிழ்நாடு இல்ல, இந்தியாவே பார்த்தது கிடையாது. அமைச்சர்கள் மட்டுமல்ல அவர்களின் அண்ணன் தம்பிகள் ஆய்வுக்குச் செல்கின்றனர். அதிகாரிகளுக்கு மட்டுமல்ல முதல்வருக்குக்கூட யார் அமைச்சர் என்று தெரியவில்லை.
அந்தளவுக்கு ரீல்ஸ் வெறி இந்த அரசுக்கு முற்றியுள்ளது. விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். ஆனால் அமைச்சர்கள் சினிமா பார்த்துட்டு கண்ணீர் வடிக்கின்றனர். காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவின் படி இரண்டு மாசத்துக்கு 42 டி.எம்.சி தண்ணீர் கர்நாடக தந்திருக்க வேண்டும் தரவில்லை. 4 டி.எம்.சி தண்ணீர் திறக்க சொல்லி உத்தரவு போட்டதையும் கர்நாடக முதல்வர் தர முடியாதுனு சொல்லிட்டார். இதைபற்றியெல்லாம் இந்த ஆட்சியாளர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.

ஆனால் திமுக சும்மா இருக்குமா, விவசாயிகளுக்காக உச்ச நீதிமன்றத்தில் நம் தலைவர், காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவை நிறைவேற்றணும் எனச் சட்டப்போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளின் ஏன் திமுக வழக்கு தொடுக்கவில்லை என ஒரு அமைச்சர் பேசியிருக்கிறார். தண்ணீர் வந்தது வழக்கு தொடுக்கவில்லை. இப்போது தண்ணீர் வரவில்லை, வழக்கு தொடுக்கிற வக்கு உங்களுக்கு இல்லை. அதனால் நாங்கள் தொடர்ந்திருக்கிறோம்.
பிரச்னை வந்தால் அதற்கு தீர்வு காண்பதுதான் நல்ல அரசு. அதை இந்த அரசு செய்யவில்லை. எதிர்மாறாகப் பிரச்னை வந்தால் மக்களை டைவர்ட் செய்கிறார்கள். தினமும் நான்கு மணிக்கு ஒரு ரீல்ஸ் போடுகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு காவிரி பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு கொந்தளித்தது. ஆனால் முதல்வர் நம் ஆட்சியில் நாம் கட்டிய 101 அடி உயர பாலத்தில் ஏறி ஆய்வு செய்கிறார், நாம் கொண்டு வந்த மெட்ரோ ரயிலில் போய் அதை ரீல்ஸ் போடுகிறார்.
இன்று ஆர்ப்பாட்டம் நடப்பதால் இதை டைவர்ட் செய்வதற்கு காஞ்சிபுரம் சிப்காட்டில் ஆய்வு செய்கிறார். சொந்தமாக ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து ஆய்வு செய்தால் நல்லது. பார்க்கவும் அழகாக இருக்கும். நாம் திறந்து வைத்ததை ஆய்வு செய்கிறார். 101 அடி உயர பாலத்தில் அவர் ஆய்வு செய்த போது அவருடைய மைண்ட் வாய்ஸ், 'ஏம்பா எனக்கு ஓட்டு போட்டீங்க நல்லாதானே ஆட்சி செய்திருக்கிறார்கள்' என்பது போல் இருந்திருக்கும்.
அவர் பாஷையில் ஊரான் வீட்டு நெய்யில் அவர் வீடுக்கு ஸ்வீட்ஸ் செய்கிறார். டேஷ், கொத்து பரோட்டா என்றெல்லாம் பேசுகிறார். இந்தியா முழுக்க இப்படி ஒரு முதல்வரைப் பார்க்கவில்லை எனப் பேசுகிறார்கள். தேர்தல் பிரசாரத்தில் அடுத்த ஜென்மத்தில் விவசாயியாக இருக்க வேண்டும் என்றார். இதற்கு ஏன் அடுத்த ஜென்மம் இப்போதே விவசாயம் செய்யலாம். இந்த ஆட்சி அமைந்ததில் இருந்து அதிக ஏமாற்றங்களை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். தேர்தல் வாக்குறுதியில் சொன்னது ஒன்று, அறிவித்தது ஒன்று ஆனால் செயல்படுத்துவது ஒன்று என வாயில் வடை சுடுகிற ஆட்சிதான் நடக்கிறது.

காவிரி பிரச்னையில் கர்நாடக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தையும் கூட்டி அவர்களின் ஒற்றுமையைக் காட்டியுள்ளனர். ஆனால் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுவதை இங்குள்ள முதல்வர் அவமானமாகப் பார்க்கிறார். குறுவையில் 14 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரூ,2,500 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவேதான் ஏக்கருக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்கிறோம். ஆனால் இந்த அரசு இதைக் கேட்கவில்லை. அதனால்தான் வீதிக்கு வந்து போராடுகிறோம்.
டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும். மேகதாதுவில் அணைகட்ட ஒருபோதும் அனுமதிக்க கூடாது. இன்னும் இரண்டு நாட்களில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. அதில் கண்டிப்பாக இந்தப் பிரச்னை குறித்து வலுவாகப் பேசுவோம். நாங்கள் சும்மா விடமாட்டோம். காவிரி பிரச்னையில் உரிமையை நில நாட்டுவோம்'' என்றார்.













