பஞ்சாங்கக் குறிப்புகள் : நவ 23 முதல் 29 வரை #VikatanPhotoCards
புதிய மா., செ-க்ககள் லிஸ்ட்: பரிந்துரைத்த உதயநிதி, கனிமொழி; அதிருப்தியில் ஸ்டாலின் - பின்னணி என்ன?
திமுக-வில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என கட்சிக்குள் மாற்றம் கொண்டு வருவதற்கு பேசப்பட்டது. இந்த மாற்றம் தேர்தல் சமயத்தில் தேவையில்லாத சலசலப்புகளை கிளப்பும் என கட்சிக்குள் கருத்து எழுந்ததால் தேர்தல் முடிந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என திமுக தலைமை அந்த திட்டத்தை தள்ளிப்போட்டது. மீண்டும் திமுக தான் ஆட்சி பொறுப்பில் அமரும் என பலரும் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில், தவெக ஆட்சி அமைந்தது ஜோசப் விஜய் முதல்வரானார். இந்த தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் தோற்றனர். எதிர் கட்சியாக இருந்தாலும் எப்போதும் போல் களத்தில் இருக்கும் திமுக, இந்த தேர்தல் தோல்வியால் சற்று துவண்டிருந்தாலும் தவெக அரசு செய்கின்ற தவறுகளை அசுர வேகத்தில் சுட்டிக்காட்டி வருகின்றனது. தலைமை அளவிற்கு மாவட்டச் செயலாளர்களாக இருப்பவர்கள் ஆளும் தவெக அரசை எதிர்ப்பதில்லை என்கிற குறையும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இருப்பதாக சொல்கிறார்கள்.
பல மாவட்டங்களில் பல ஆண்டுகளாக ஒரே நபரே தொடர்ந்து மாவட்டச் செயலாளராக இருக்கிறார்கள். இதனால் கட்சி வளர்ச்சி பாதிக்கப்படுகிறது, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டால் கட்சியின் வளர்ச்சியில் அக்கறை காட்டுவார்கள் என்கிற பேச்சும் கட்சிக்குள் நிலவி வந்தது. தேர்தல் தோல்விக்கு உட்கட்சியில் இருந்த பூசலும் முக்கிய காரணம் என பேசப்பட்டது. குறிப்பாக திமுக கோட்டை என அறியப்பட்ட தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சண்.இராமநாதன் தோல்வியை சந்தித்ததற்கு கோஷ்டி பூசலே காரணம்.
இந்நிலையில் தான் தேர்தலுக்கு பிறகு இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்கிற மாற்றத்தை கொண்டு வருவதற்கான நேரம் நெருங்கி விட்டதாக திமுக தலைமை கருதியதுடன் அதற்கான செயல்களில் இறங்கியது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த செயற்குழுவில் இதனை செயல்படுத்துவதற்காக தீர்மானத்தை நிறைவேற்றி அதற்கான பணிகளில் இறங்கியது. சுமார் 72 மாவட்டச் செயலாளர்கள் உள்ள நிலையில் அதனை 110 மாவட்டச் செயலாளர்கள் கொண்ட லிஸ்டாக ரெடி செய்து கடந்த வாரம் அறிவிக்க இருந்ததாக சொல்கிறார்கள்.
புதிய மாவட்டச் செயலாளர்கள் லிஸ்டில் திருப்தி இல்லாததால் ஸ்டாலின் அறிவிப்பை நிறுத்தி வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இதில் உதயநிதி, கனிமொழி ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் கொண்ட லிஸ்டையும் கொடுத்திருப்பதாகவும் இதிலும் ஸ்டாலினுக்கு திருப்தி இல்லாததால் அறிவிப்பு தள்ளி போயிருப்பதாக சொல்கிறார்கள். இது குறித்து விபரம் அறிந்த தரப்பில் பேசினோம். ``தமிழகம் முழுக்க கிட்டத்தட்ட திமுக-வில் 70க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். இதனை 110 மாவட்டச் செயலாளர்களாக உயர்த்த வேண்டும் என்பது திமுக தலைவர் ஸ்டாலின் எண்ணம். அதற்கான முன்னெடுப்பை செயற்குழுவில் பேசி தொடங்கி வைத்தார் ஸ்டாலின்.

இதற்கான லிஸ்ட் தயாரிப்பு பணிகளில் தலைமையில் உள்ள நிர்வாகிகள் செய்து வந்தனர். இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர், ஒரு மாவட்டத்தில் மூன்று தொகுதிகள் இருந்தால் அதற்கு ஒரு மாவட்டச் செயலாளர் என லிஸ்ட் தயார் செய்யப்பட்டது. தஞ்சாவூர், ஒரத்தநாடு தொகுதிகளை உள்ளடக்கி மாவட்டத்துக்கு டாக்டர் அஞ்சுகம் பூபதி, கும்பகோணம், திருவிடைமருதூர் கொண்ட மாவட்டத்துக்கு கோவி.செழியன், பாபநாசம், திருவையாறு தொகுதிகளுக்கு முத்துசெல்வம் போன்றவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக சொல்கிறார்கள்.
இதே போல் 110 மாவட்டச் செயலாளர்கள் கொண்ட பட்டியலை ரெடி செய்து ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்டதாம். கடந்த வாரம் மாவட்டச் செயலாளர்கள் அறிவிப்பு வர இருப்பதாக வெளியில் தகவல்கள் கசிந்தன. இந்நிலையில் பட்டியலில் இருக்கும் பெயர்களில் பெரிய அளவில் ஸ்டாலினுக்கு திருப்தி இல்லை என்கிறார்கள். மன்னார்குடி, திருத்துறைப்பூண்டிக்கு மாநில இளஞரணி துணை செயலாளர் இளையராஜா பெயர் இடம் பெற்றுள்ளது, இதே போல் மதுரையில் ஜி.பி.ராஜா பெயர் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. உதயநிதி ஸ்டாலின், இளைஞரணியைச் சேர்ந்தவர்கள் மற்றும் தன்னுடைய ஆதரவாளர்கள் என 38 நபர்கள் பெயருடன் லிஸ்ட் கொடுத்தாராம்.

கனிமொழியும் 25 நபர்களின் பெயரை குறிப்பிட்டு லிஸ்ட் கொடுத்திருக்கிறாராம். லிஸ்டில் இருப்பதை செயல்படுத்தினால் பல சீனியர்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி பறிபோகும் என்கிறார்கள். திருவையாறு தொகுதி எம்.எல்.ஏ-வான தஞ்சாவூர் மத்திய மாவட்டச் செயலாளராக இருக்கும் துரை.சந்திரசேகரனுக்கு பதவி பறிபோகிறது. இதை கேள்விபட்டதும் அப்செட் ஆனவர் நேருவிடம் சொல்லி கலங்கியிருக்கிறார். `தலைவருக்கு இந்த லிஸ்ட்ல திருப்தி இல்லன்னு சொல்றாங்க.. இருய்யா உன்ன மட்டும் காப்பாத்த பாக்குறேன்' என்று சொல்லியும், சந்திரசேகரன் தூக்கமில்லாமல் தவித்து வருகிறாராம்.
தவெக அரசை கடுமையாக அட்டாக் செய்து வருகிறது திமுக. இதுவரை அதிமுகவில் இருந்து பலர் தவெக-வில் சேர்ந்துள்ளனர். இனி திமுக-வினரை தவெகவுக்குள் இழுக்க வேண்டும் என விஜய் சொன்னதாக பேசப்படுகிறது. சில திமுக எம்.எல்.ஏக்களுக்கு தவெக வலை விரித்துள்ளது. இந்த சூழலில் புதிய மாவட்டச் செயலாளர்களை அறிவித்தால் கட்சிக்குள் சலசலப்புகள் கிளம்பும். தவெக இந்த சூழலை பயன்படுத்தி கொள்வதற்கான வாய்ப்புள்ளது என்பதால் ஸ்டாலின் புதிய மாவட்டச் செயலாளர் அறிவிப்பை தள்ளிப்போட்டிருக்கிறார்" என்கிறார்கள்.

மேலும் சர்ச்சைக்குள்ளாகி ஏற்கனவே மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டவர்களும் இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளனராம். பதவியை பறித்தவர்களுக்கு மீண்டும் ஏன் வாய்ப்பு கொடுத்தீர்கள் என்ற கேள்வி எழும். புதிய மாவட்டச் செயலாளர்கள் குறித்த மாற்றத்தில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி போன்ற சீனியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனராம். இது போன்ற சலசலப்புகளை தவிர்க்க தற்போதைக்கு இந்த மாற்றத்தை ஸ்டாலின் ஒத்தி வைத்திருக்கிறார் என்கின்றனர்.


















