தீபாவளி நேரம்: '5 நாள்களில் ரூ.3,080' ஏறும் தங்கம் விலை! அடுத்து தங்கம் விலை ஏறு...
பொன்னமராவதி: தேங்கும் கழிவுநீர்; நோய் பரவல் அபாயத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட்! - தீர்வு காணப்படுமா?
வரலாற்றுச் சிறப்புமிக்க புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பழைய பேருந்து நிலையத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தற்காலிகமாகப் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.
சென்னை, சிதம்பரம், சேலம்,தெற்கே இராம்நாடு, மேற்கே திருப்பூர், கோயம்புத்தூர் எனப் பல்வேறு மாவட்டங்களை இணைக்கும் முக்கியப் புள்ளியாக இந்தப் பேருந்து நிலையம் செயல்படுவதால், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த பஸ் ஸ்டாண்ட், தற்போது சாக்கடைக் குளமாக உருமாறி வருகிறது. பேருந்து நிலையத்தின் வலது மற்றும் இடதுபுறம் என இரண்டு பக்கங்களிலும் கழிவுநீர் பெருக்கெடுத்து நிற்கிறது.
சாக்கடை கால்வாய் முழுவதும் வீசப்பட்ட பழைய ஃப்ரிட்ஜ் அட்டைகள், பாட்டில்கள்,பிளாஸ்டிக் குப்பைகள் என அடைத்துக் கிடக்கின்றன.
தற்போது மழைக்காலம் என்பதால், நிலைமை இன்னும் மோசமாகி கழிவுநீர் வெளியே செல்ல வழியின்றி நிரம்பி வழிகிறது. இதனால் பஸ் ஸ்டாண்ட் முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.

தேங்கி நிற்கும் இந்த கழிவுநீரால் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி மொய்ப்பதால், பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சுற்றியுள்ள கடைக்காரர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தொற்றுநோய்கள் வேகமாகப் பரவி வருகிறது.
இதுகுறித்து பயணிகளிடம் பேசிய போது "ரொம்ப நாளாவே சாக்கடை சுத்தம் பண்ணாமலே தான் இருக்கு, பஸ் வர்ற வர பத்து நிமிஷம் கூட நிக்க முடியல, கொசுவும் ஈயும் மொச்சிக்கிட்டே இருக்கு. டெங்கு, டைப்பாடுனு காய்ச்சல் வந்துருமோன்னு பயமா இருக்கு, மழை பேஞ்சா பஸ் ஸ்டாண்ட் முழுக்க சேரும் சகதியுமாயிடுது. நடக்கவே முடியாது. சீக்கிரம் அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுத்தா நல்லா இருக்கும்" என்றனர்.

இதற்கிடையே, தேங்கி நிற்கும் இந்தக் கழிவுநீரைக் கண்ணுக்குத் தெரியாமல் மறைத்தபடி சில ஃப்ளெக்ஸ் பேனர்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. தனிநபர்கள் வைத்த இந்த பேனர்களால் பயணிகளுக்குத் தங்களுக்கு அருகிலேயே ஒரு சாக்கடைக் குளம் இருப்பது கூடத் தெரிவதில்லை. இதனால், 'எங்கிருந்து இவ்வளவு கொசுக்கள் வருகின்றன?' என சில பயணிகள் குழம்பும் அளவுக்கு, இந்த ஃப்ளெக்ஸ் பேனர்கள் ஆபத்தை மறைக்கும் திரையாக மாறிவிட்டன.
பொன்னமராவதி தற்போது பேரூராட்சியிலிருந்து நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த புதிய பேருந்து நிலையம் அமைந்திருக்கும் பகுதி தொட்டியம்பட்டி கிராம ஊராட்சிக்கு உட்பட்டதாக வருகிறது. இது குறித்து விளக்கம் கேட்க, தொட்டியம்பட்டி ஊராட்சியின் வட்டார வளர்ச்சி அலுவலரை (BDO) தொலைபேசியில் தொடர்புகொண்டோம். ஆனால், அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஊரின் மையப்பகுதியில், அதுவும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் ஒரு பேருந்து நிலையத்தில் அடிப்படைச் சுகாதாரக் கட்டமைப்பு இல்லாதது பெரும் வேதனையளிக்கிறது.
நிர்வாக எல்லைகள் எதுவாக இருந்தாலும், பொதுமக்களின் சுகாதாரமே இங்கு முதன்மையானது.
பெரும் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதால், எல்லைச் சிக்கல்களைத் தாண்டி புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, இந்தச் சாக்கடைப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக இருக்கிறது.














