செய்திகள் :

"பொருளாதார வளர்ச்சியா? மக்கள் வாழ்வாதாரமா?" - கனிம அகழ்வாராய்ச்சி விதிகளில் அதிரடி விலக்கு|அலசல்

post image

இந்தியாவில் காணப்படும் 24 வகையான முக்கிய கனிமங்களையும், 6 வகையான அணுக் கனிமங்களையும் அகழ்ந்தெடுக்கும் பணிகளைப் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தாமலே மேற்கொள்ளலாம் என ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உள்ளூர் மக்களின் உரிமைகளைவிட, தொழில் வளர்ச்சிக்கும் தேசிய பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகத் தோன்றும் இந்த முடிவு, தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மாற்றம் கனிம அகழ்வாராய்ச்சிப் பணிகளை விரைவுபடுத்துமா அல்லது சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதிக்குமா என்பதை விரிவாக தெரிந்துகொள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜனிடம் பேசினோம்.

மோடி
மோடி

அவர், ``ஒன்றிய சுரங்கங்கள் அமைச்சகம் லித்தியம், கிராபைட், தாமிரம், கோபால்ட் உள்ளிட்ட 24 வகையான கனிமங்களை 2023-ம் ஆண்டு முக்கிய கனிமங்கள் என வகைப்படுத்தி அறிவிப்பு வெளியிட்டது. சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (Mines and Minerals (Development and Regulation) Act of 1957) தோரியம், யுரேனியம், மோனசைட் உள்ளிட்ட 6 வகையான கனிமங்கள் அணுக் கனிமங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்தல் சட்டம் கடந்த 2023-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. இதன்படி லித்தியம், பெரிலியம், நியோபியம், டைட்டானியம், டான்டலம், சிர்கோனியம் என ஆறு அணுக்கனிமங்களைக் கண்டுபிடிப்பதில் தனியார் நிறுவனங்களும் ஈடுபடலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

முக்கியமான கனிமங்களைக் கண்டுபிடித்து, அகழ்ந்தெடுத்து, பதனிட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது ஒன்றிய அரசின் நோக்கங்களாக உள்ளன. இந்தியா 2070-ம் ஆண்டுக்கு முன்னர் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைய சூரிய உற்பத்தி, காற்றாலை உற்பத்தி, மின்சார வாகனங்கள், மின்கல அமைப்புகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு இக்கனிமங்களை வேகமாக அகழ்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டியதாக ஒன்றிய அரசு கூறுகிறது.

பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன்
பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன்

இதுவரை 48 கனிமத் தொகுதிகள் ஏலத்திற்குக் கொண்டு வரப்பட்டு அதில் 24 நிறுவனங்களுக்குக் கனிமத் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 4-ம் தேதி ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதியது. அதில், `இந்தியாவின் பாதுகாப்புத் துறை வாகனங்கள், கண்காணிப்பு மற்றும் வழிகாட்டிக் கருவிகள் மற்றும் தொலைத் தொடர்புக் கருவிகளை உருவாக்க அரிய வகை கனிமங்கள் அதிகம் தேவைப்படுவதால் முக்கியக் கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்கத் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் நடைமுறையிலிருந்து விலக்களிக்க வேண்டும்' எனக் கோரப்பட்டுள்ளது.

மேலும் ஆகஸ்ட் 29-ம் தேதி ஒன்றிய அணுசக்தித் துறை சுற்றுச்சூழல் துறைக்கு ஒரு கடிதம் எழுதியது. அதில், 'மூன்றாம் நிலை அணுமின் உற்பத்திக்குத் தேவையான தோரியம் எரிபொருளைக் கொண்டிருக்கும் மோனசைட், யுரேனியம் காணப்படும் கடற்கரைத் தாது மணலை அகழ்ந்தெடுக்கும் திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவதிலிருந்து விலக்களிக்க வேண்டும்' எனக் கோரியுள்ளது.

இக்கோரிக்கைகளைப் பரிசீலித்த ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம், மேற்குறிப்பிட்ட கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் திட்டங்களுக்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

கனிமவளக் கொள்ளை
கனிம வளக்கொள்ளை

மேலும் அகந்தெடுக்கப்படும் நிலப்பரப்பு சிறிய பகுதியாக இருந்தாலும் இத்திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதிக்கான பரிசீலனையை ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம்தான் மேற்கொள்ளும் என அறிவித்துள்ளது.

இது கனிமங்கள் மீதான மாநில அரசின் உரிமையைப் பறிப்பதாகும். ஏற்கெனவே 24 வகையான கனிமங்களை ஏலம் விடும் உரிமை ஒன்றிய அரசிடம்தான் உள்ளது. ஆகவே கனிமத் தொகுதிகளை ஒன்றிய அரசே ஏலம் விடும், அதில் மாநில அரசு தலையிட முடியாது, பொதுமக்கள் கருத்தும் கேட்கப்படாது, சுற்றுச்சூழல் அனுமதியினையும் ஒன்றிய அரசே வழங்கும் என்றாகிவிட்டது.

இது மிகவும் ஆபத்தான போக்கு. கனிமங்களை அகந்தெடுக்கப் பயன்படுத்தப்படும் சுரங்க  நடைமுறை மற்றும் கடற்கரை தாது மணலிலிருந்து கனிமங்களைப் பிரித்தெடுக்கும் பணிகள் மிகுந்த சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பணிகளாகும். இப்பணிகளால் சுற்றுச்சூழல் நாசமாகும், கடலரிப்பு மேலும் தீவிரமடையும், வாழ்விடப் பாதிப்புகள் அதிகரிக்கும், கனிமங்களை அகழ்ந்தெடுக்கும்போது எழும் கதிரியக்க அபாயத்தால் நோய்கள் பல்கிப் பெருகும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும், கேரளாவின் கொல்லம், ஆலப்புழா மாவட்டங்களிலும் வி.வி. மினரல் போன்ற தனியார் நிறுவனங்களும், கேரளா மினரல்ஸ் மற்றும் மெட்டல்ஸ் நிறுவனமும் (KMML), இந்திய அரியவகை மணல் நிறுவனமும் (IRE) கார்னெட், ரூட்டைல், சிர்கான், லூக்கொக்சின், சிலிமனைட், இல்மனைட், மோனோசைட் போன்ற கனிம வளங்களை அள்ளித்தோண்டி விற்று, கொள்ளை லாபம் அடைந்தன. இவற்றால் பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்பட்ட பாதிப்புகள் ஏராளம்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

கன்னியாகுமரியில் இயங்கிவரும் indian Rare Earths Limited நிறுவனம் கிள்ளியூர் தாலுகாவிற்குட்பட்ட கீழ்மிடாலம், மிடாலம், இனையம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் அணுக் கனிம சுரங்கங்களை அமைக்கத் திட்டமிட்டிருந்தது. இதற்காக 1.10.2024 அன்று இத்திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அப்போதே இந்த திட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் இக்கருத்துக் கேட்புக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், தற்போது 'கருத்துக் கேட்புக் கூட்டம் அவசியமில்லை' என ஒன்றிய அரசு அறிவித்துவிட்டதால் இத்திட்ட்டம் செயல்பட எவ்விதத் தடையுமில்லாமல் போய்விட்டது.

மேலும் சுற்றுச்சூழலிலும், பொதுமக்கள் ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவல்ல இம்முடிவை ஒன்றிய அரசு வெறும் அலுவல் உத்தரவு வாயிலாக வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இம்முடிவை எடுப்பதற்கான சட்டத் திருத்தங்களை மேற்கொண்டால் நாடாளுமன்ற நடைமுறை, பொதுமக்கள் கருத்துக் கேட்பு உள்ளிட்டவற்றைப் பின்பற்ற வேண்டியிருக்கும் என்பதால் சட்டத்திற்குப் புறம்பாக அலுவல் உத்தரவாக இம்முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

பூவுலகின் நண்பர்கள்
பூவுலகின் நண்பர்கள்

OA. No. 74 of 2021 என்கிற வழக்கில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்தத் தீர்ப்பில் `அலுவல் உத்தரவுகள் சட்டமியற்றப்பட்ட விதிகள் கிடையாது. அலுவல் உத்தரவுகள் எவ்வித அறிவியல் ஆய்வுகளும், மதிப்பீடுகளுமின்றி வெளியிடப்படுகின்றன. நிர்வாக அளவில் மட்டுமே சட்டத் தன்மையைக் கொண்ட அலுவல் உத்தரவுகளின் தாக்கம் சட்ட ஆணைகளிலிருந்து விலக்குகளை உருவாக்குகிறது. அலுவல் உத்தரவுகள் வாயிலாக ஒழுங்குமுறை வரம்புகளில் உருவாக்கப்படும் இம்மாற்றம் சட்டப்பூர்வ கோட்பாட்டிற்கு முரணானது.

நடைமுறையில் சுற்றுச்சூழல் சட்டம் பெரும்பாலும் அறிவிக்கைகள், வழிகாட்டுதல்கள், அலுவல் உத்தரவுகள், குறிப்பாணைகள் மற்றும் சுற்றறிக்கைகளால் இயக்கப்படுகிறது. இவை எதுவும் சட்டமன்ற மேற்பார்வையின் கீழ் வராது என வேதனை தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் விதிமுறைகள் பலவீனப்படுத்தப்படும்போது, நிறுவன பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் இல்லாமல் போவதாகத் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அலுவல் உத்தரவு ஒன்றை தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரத்து செய்திருந்தது.

கனிமங்கள்

இத்தீர்ப்பைத் துளியும் மதிக்காமல் மீண்டும் அலுவல் உத்தரவு வாயிலாகச் சுற்றுச்சூழலை சீரழிக்கும் ஒரு அறிவிப்பை ஒன்றிய பா.ஜ.க அரசு வெளியிட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

முக்கிய மற்றும் அரிய வகைக் கனிமங்கள் என்னும் கருத்து அமெரிக்காவால் 2019-ம் ஆண்டு முன்மொழியப்பட்டது. எதிர்காலப் பொருளாதார உற்பத்தியைக் கருத்தில் கொண்டு சுமார் 300 வகையான கனிமங்களை முக்கியக்  கனிமங்கள் என்று அமெரிக்கா வகைப்படுத்தியுள்ளது.  இதனைத் தொடர்ந்து இந்தியா அமெரிக்கா இடையே 2021-ம் ஆண்டு முக்கியக் கனிமங்களுக்கான ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டது.

இந்தியாவின் கனிம் வளத்தைத் தனியாருக்குத் தாரை வார்த்து, அணுக் கனிமங்கள் உள்ளிட்ட கனிமங்களை அமெரிக்காவுக்கு அனுப்பும் தனது திட்டத்திற்கு இடையூறாக மாநில அரசுகளோ, பொதுமக்களோ வந்துவிடக் கூடாதெனும் நோக்கத்தோடு இவ்வுத்தரவை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.

மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கும் ஒன்றிய சுற்றுச்சூழல் துறையின் இந்த அலுவல் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக நீதிமன்றத்தை நாட வேண்டும் எனக் கோருகிறோம். பேரழிவை உண்டாக்கும் திட்டங்கள் மீது பொதுமக்கள் முடிவை உறுதி செய்யும் கருத்துக் கேட்புக் கூட்டங்களை ரத்து செய்யும் இவ்வுத்தரவு மிகவும் அபாயகரமானது. ஒன்றிய அரசு இம்முடிவை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் இயக்கங்களும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்." என்றார்.

சஹாரா பாலைவனத்தை வென்ற 54 வயது சென்னைவாசி: ‘மாரத்தான் டெஸ் சேபிள்ஸ்’ சாதனையும் சமூக சேவையும்!

உலகின் மிகக் கடினமான ஓட்டப்பந்தயமாகக் கருதப்படுவது ‘மாரத்தான் டெஸ் சேபிள்ஸ்’ (Marathon des Sables - MDS). வெறும் ஓட்டம் மட்டுமல்ல, சுட்டெரிக்கும் சஹாரா பாலைவனத்தில், மணல் குன்றுகளுக்கு இடையே ஏழு நாட்க... மேலும் பார்க்க

Pablo Escobar-ன் 80 நீர்யானைகளைக் கொல்லும் கொலம்பியா அரசு - அதிரடி முடிவின் பின்னணி என்ன?!

கொலம்பியாவின் மறைந்த போதைப்பொருள் மன்னன் பாப்லோ எஸ்கோபார், 1980-களில் தனது பண்ணைக்காக ஆப்பிரிக்காவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்த ஓர் ஆண் மற்றும் மூன்று பெண் நீர்யானைகள், இன்று அந்த நாட்டின் சு... மேலும் பார்க்க

`இனி 10 மாதங்கள் வெயில்?'- தமிழ்நாட்டைச் சுட்டெரிக்க வரும் 'சூப்பர் எல் நினோ' - தப்பிக்க வழி என்ன?

பசிபிக் பெருங்கடலில் மிக வேகமாக உருவாகி வரும் 'சூப்பர் எல் நினோ', இந்த நூற்றாண்டின் மிக வலிமையான இயற்கை நிகழ்வாக மாறக்கூடும் என சர்வதேச வானிலை அமைப்புகள் எச்சரித்துள்ளன. பசிபிக் பெருங்கடலின் மத்திய மற... மேலும் பார்க்க

கூடங்குளம் முதல் கல்பாக்கம் வரை: அணுக்கழிவுகளின் குப்பைத் தொட்டியாக மாறுகிறதா தமிழ்நாடு?

கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் மின்னுற்பத்தித் திறன் கொண்ட மாதிரி வேக ஈனுலை, ஏப்ரல் 6-ம் தேதி அன்று இரவு 08:25 மணிக்கு முதலாவது அணுப்பிளவு செயல்பாட்டு நிலையை எட்டியுள்ளது. `இந்தியாவின் அணுசக்தி திட்... மேலும் பார்க்க

AI: தொழில்நுட்ப வளர்ச்சியின் இருண்ட பக்கம்; ஏஐ டேட்டா சென்டர்கள் வெளியிடும் வெப்பமும் ஆபத்தும்!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் உலகை மாற்றியமைத்து வரும் வேளையில், அதன் செயல்பாட்டிற்கு ஆதாரமாக விளங்கும் பிரமாண்ட தரவு மையங்கள் (Data Centers) சுற்றுச்சூழலுக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரு... மேலும் பார்க்க