அரசியல் வியாபாரத்தைத் தடுக்கும் ஒரே ஆயுதம்! - இது பொதுமக்களின் சாட்டை
Pablo Escobar-ன் 80 நீர்யானைகளைக் கொல்லும் கொலம்பியா அரசு - அதிரடி முடிவின் பின்னணி என்ன?!
கொலம்பியாவின் மறைந்த போதைப்பொருள் மன்னன் பாப்லோ எஸ்கோபார், 1980-களில் தனது பண்ணைக்காக ஆப்பிரிக்காவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்த ஓர் ஆண் மற்றும் மூன்று பெண் நீர்யானைகள், இன்று அந்த நாட்டின் சுற்றுச்சூழலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளனவாம்.
1993-ல் எஸ்கோபார் கொல்லப்பட்ட பிறகு, அங்கிருந்த யானைகள் மற்றும் ஒட்டகச்சிவிங்கிகள் மற்ற பூங்காக்களுக்கு மாற்றப்பட்டன. ஆனால் நீர்யானைகளின் எடை மற்றும் ஆக்ரோஷம் காரணமாக அவற்றை இடமாற்றம் செய்வது கடினம் என அதிகாரிகள் அப்படியே விட்டுவிட்டனர்.
அன்று விடப்பட்ட அந்த 4 நீர்யானைகள், இன்று சுமார் 170-க்கும் மேலாக பெருகியுள்ளன. இவற்றை வேட்டையாடப் பெரிய விலங்குகள் இல்லாததால் இவை மிக வேகமாக இனப்பெருக்கம் செய்கின்றன.
ஆய்வுகளின்படி, உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் 2035-ஆம் ஆண்டிற்குள் இவற்றின் எண்ணிக்கை 1,000-ஐத் தாண்டிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவை வெளியேற்றும் கழிவுகள் நீரில் வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்தி, ஆக்ஸிஜன் அளவைக் குறைக்கின்றன. இதனால் மீன் இனங்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இவை மேய்ச்சலுக்காகக் கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவதோடு, மனிதர்களையும் தாக்கத் தொடங்கியுள்ளன.
பல ஆண்டுகளாக இந்த நீர்யானைகளைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. கருத்தடை செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தது, ஏனெனில் ஒரு நீர்யானைக்குச் சிகிச்சை செய்ய சுமார் 10,000 டாலர் வரை செலவாகிறது மற்றும் அது மிகவும் ஆபத்தானது.

வேறு நாடுகளுக்கு இடமாற்றம் செய்யும் திட்டமும் செலவு மற்றும் நடைமுறைச் சிக்கல்களால் கைவிடப்பட்டது. இறுதியாக, வேறு வழியின்றி சுமார் 80 நீர்யானைகளை கருணைக்கொலை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக சுமார் 2 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவிற்கு விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. " இதில் விலங்குகளின் தவறு ஏதுமில்லை, மனிதர்களின் பிழையால் அவை இங்கு கொண்டு வரப்பட்டன, எனவே அவற்றைக் கொல்வது முறையல்ல" என்பது இவர்களின் வாதம். ஆனால், சூழலியல் நிபுணர்கள் கூறுகையில், ``ஒரு நாட்டின் ஒட்டுமொத்த பல்லுயிர் பெருக்கத்தைக் காப்பாற்ற இந்த ஓர் இனத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம்" என்கின்றனர்.
















