"மாநில உரிமைகளுக்காக கடந்த காலங்களில் மிக வலுவாகக் குரல் கொடுத்த கட்சி திமுக, ஆன...
"மாநில உரிமைகளுக்காக கடந்த காலங்களில் மிக வலுவாகக் குரல் கொடுத்த கட்சி திமுக, ஆனால்.!"- சசி தரூர்
மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) மசோதாவிற்கு திமுக நிபந்தனையுடன் கூடிய ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாக வெளியான தகவல்களுக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இதுதொடர்பாக நேற்று (நவ. 28) திருவனந்தப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " நான் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளேன். மாநில உரிமைகளுக்காகக் கடந்த காலங்களில் மிக வலுவாகக் குரல் கொடுத்த கட்சி திமுக.
சொல்லப்போனால், இந்த ஆண்டு வரை ஆட்சியிலிருந்த திமுக, தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க டெல்லியை அனுமதிக்கக் கூடாது என்பதற்காக, ஜவஹர் நவோதயா பள்ளிகளைக்கூட மாநிலத்திற்குள் அனுமதிக்கவில்லை.
அப்படிப்பட்ட ஒரு கட்சி, 'விகிதாச்சார அடிப்படையில்தான் தொகுதிகள் அதிகரிக்கப்படுகின்றன' என்ற மேலோட்டமான காரணத்தை நம்பி, அதன் பின்னணியில் இருக்கும் பாஜகவின் மெகா அஜெண்டாவைப் பார்க்காமல் சரணடைவது, எந்த மக்களுக்காகக் குரல் கொடுப்பதாகச் சொல்கிறார்களோ, அந்த மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையிலிருந்து தவறுவதாகும்.
எனக்குப் பெரும் ஏமாற்றம்தான். திமுகவில் எனக்குப் பல நண்பர்கள் இருக்கிறார்கள். பல ஆண்டுகளாக அவர்களுடன் இணைந்து பணியாற்றிய நல்ல அனுபவமும் உண்டு. ஆனால், இப்போது அவர்கள் எடுப்பதாகச் சொல்லப்படும் இந்த நிலைப்பாட்டை, திமுகவின் எந்தவொரு உண்மையான திராவிடத் தொண்டரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்.
இன்னொரு விஷயத்தையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். இந்த 'விகிதாச்சார உயர்வு' என்ற வாதமே மிகவும் போலியானது. உதாரணத்திற்கு, ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (MD) தனக்கு 2 லட்சம் ரூபாய் சம்பளமும், தன் கார் ஓட்டுநருக்கு 20,000 ரூபாய் சம்பளமும் நிர்ணயித்துக் கொள்கிறார் என வைத்துக்கொள்வோம்.
இது 10:1 என்ற விகிதாச்சாரம். இப்போது அனைவருக்கும் 50% சம்பள உயர்வு என அறிவித்தால், எம்.டி-யின் சம்பளம் 3 லட்சமாகவும், ஓட்டுநரின் சம்பளம் 30,000 ரூபாயாகவும் உயரும். இங்கேயும் 10:1 என்ற அதே விகிதாச்சாரம்தான் இருக்கிறது.

ஆனால், உண்மையில் அதிக லாபம் யாருக்கு? கையில் கூடுதல் பணமும், அதிகாரமும் எம்.டி-க்குத்தானே கிடைக்கிறது? பாஜகவும் இதையேதான் சாதிக்கப் பார்க்கிறது. திமுக இந்த வலையில் விழுந்திருந்தால், அவர்கள் சுயமாகச் சிந்திக்கத் தவறிவிட்டார்கள் என்றே அர்த்தம்" என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb
















