Vijay: "படங்களில் மீனவர்களைக் காப்பது போல் நடித்துவிட்டு, நிஜத்தில்..."- நயினார்...
யூ.பி.ஐ சிக்கல்... எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்காதீர்கள்!
யூ.பி.ஐ பணப் பரிவர்த்தனை அறிமுகமாகி பத்தாண்டுகளாகி விட்டது. ஒரு ரூபாய் சாக்லெட் தொடங்கி பல லட்ச ரூபாய் தங்கம் வரைக்கும் அனைத்தையும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் வாங்கிவிட முடிகிறது. பெரும்பாலானோருக்கு பாக்கெட்டில் பணம் வைத்திருக்கும் வழக்கமே மாறிவிட்டது. யூ.பி.ஐ இந்தியாவின் அன்றாடப் பொருளாதாரத்தின் முக்கியமான டிஜிட்டல் கட்டமைப்பாகிவிட்டது. வெளிப்படைத்தன்மை, உடனுக்குடன் நடக்கும் பரிவர்த்தனை போன்ற இதிலிருக்கும் பலன்கள் மக்களை ஈர்த்துவிட்டன.
இந்தச் சூழலில், அக்டோபர் 15-ம் தேதி முதல் ரூ.2,000-க்கு அதிகமான வணிக பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது மத்திய அரசு. இது பெரும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. ‘யூ.பி.ஐ மூலம் மக்களை கேஷ்லெஸ் முறைக்குப் பழக்கப்படுத்திவிட்டு, இப்போது அதை வைத்து வருவாய் ஈட்டப் பார்க்கிறது அரசு’ என்று ஒரு பக்கம் விமர்சனங்களும், ‘அமெரிக்க நிதி நிறுவனங்கள், வங்கிகள் லாபம் ஈட்டுவதற்காக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்று இன்னொரு பக்கம் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
‘இந்தக் கட்டணம் வணிகர்களுக்கு மட்டும்தான், நுகர்வோருக்கு அல்ல. சிறு வணிகர்களுக்கு மாதத்துக்கு ரூ.1 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் ஏதும் இல்லை. இக்கட்டணம் அரசின் வருவாய்க்காக அல்ல; யூ.பி.ஐ ஈகோசிஸ்டத்தை இயக்கும் வங்கிகள் உள்ளிட்ட பங்கேற்பாளர்களுக்கான கட்டணம்’ என்கிறது மத்திய அரசு. மேலும், ‘வணிகர்கள் வாடிக்கையாளரிடம் இந்தக் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது’ என்றும் கூறியுள்ளது.
ஆனால், வணிகர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணம், மக்கள் தலையில் விழாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? எப்படி அதைக் கண்காணிப்பீர்கள்? ஏற்கெனவே கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கே பல வணிகர்கள் மக்களிடமிருந்து கட்டணம் வசூல் செய்கிறார்கள். இப்போது அவர்கள், யூ.பி.ஐ கட்டணத்தையும் நுகர்வோர் மீதே மறைமுகமாக வைப்பார்கள் என்ற அச்சம் நியாயமானது.
யூ.பி.ஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிப்பதில் பல குழப்பங்களும், கேள்விகளும் நீடிக்கும் நிலையில் மத்திய அரசு விடாப்பிடியாக அதைச் செயல்படுத்த துடிப்பதற்கு என்ன காரணம்? ‘ஆகஸ்டில் மட்டுமே 24.5 பில்லியன் பரிவர்த்தனைகள் யூ.பி.ஐ மூலம் நடந்திருக்கின்றன. அரசின் கணக்குப்படி இதில் 4% பரிவர்த்தனைகள் மட்டுமே கட்டணத்துக்கு உள்ளாகும் என்றாலும் கூட, ரூ.15,000 கோடி வசூலாகும்’ என்கிறார்கள் வங்கித் துறை நிபுணர்கள்.
ஏற்கெனவே ஜி.எஸ்.டி, மினிமம் பேலன்ஸ், அபராதம் என பல பெயர்களில் மக்கள் பணத்தை வங்கிகள் சுரண்டிக்கொண்டிருக்கின்றன. ‘எல்லோருக்கும் வங்கிக் கணக்கு, பண மதிப்பிழப்பு, யூ.பி.ஐ’ என ஒட்டுமொத்த மக்களையும் டிஜிட்டல் இந்தியாவின் கீழ் கொண்டுவந்தது, இப்படி வசூலை அதிகரிக்கத்தானா?
மக்களைப் பாதிக்கும் எந்தவொரு முடிவையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எடுக்கக்கூடாது. வருமானம் ஈட்ட அரசுக்கு பல வழிகள் உள்ளன. எளிய மக்களின் வாழ்வாதாரத்தில் இருந்து அதைச் செய்யக்கூடாது!
- ஆசிரியர்















