செய்திகள் :

”ரெண்டு பேரும் ஒண்ணா வேலை செய்யுங்க" - வாழ்த்திய என்.ஆனந்த்; தவெக-வில் தஞ்சை அதிமுக புள்ளி

post image

அதிமுக-வின் தஞ்சாவூர் மாநகரச் செயலாளராக இருந்தவர் என்.எஸ்.சரவணன். சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு உட்கட்சியில் எழுந்த சில பிரச்னைகளால் மாநகரச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் என்.எஸ்.சரவணன்தான் எனப் பரவலாகப் பேசப்பட கடைசி நேரத்தில் கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பே, 'தஞ்சாவூர் தொகுதியில் நீதான் வேட்பாளர். தேர்தலை வேலையைத் தொடங்கிடு' என சரவணனிடம் உறுதியளித்தாகச் சொல்கிறார்கள்.

என்.ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்த சரவணன்
என்.ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்த சரவணன்

சரவணனும் தேர்தல் வேலையைத் தொடங்கினார். வீடு தவறாமல் ஹாட்பாக்ஸ் கொடுத்தார். சரவணன் நின்றால் டப்பாக இருக்கும் எனத் திமுக தரப்பில் பேசப்பட்டது. இப்படியான சுழலில் சரவணுக்கு சீட்டும் கிடைக்கவில்லை.

''என்னுடைய தந்தை தீவிரமான அதிமுக விசுவாசி. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரையும் இதயத்தில் ஏந்தி என்னையும் அந்த வழியில் வளர்த்தார். ஒரு சிலரால் கட்சியில் தனக்கு சறுக்கல் வந்த போதும் எனக்கு கட்சிதான் முக்கியம்'' என சரவணன் பேசியிருக்கிறார்.

சீட் கிடைக்காத அதிருப்தியை வெளிகாட்டாமல் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தத்திற்கு வேலை செய்தார். இந்நிலையில், தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சண்.இராமநாதன் தோல்வியைத் தழுவினார். 30 வருடங்களுக்காக மேலாக ஒரு ரசிகனாக விஜய்யைப் பின்தொடர்ந்து, மக்கள் இயக்கப் பணிகளில் செயல்பட்ட விஜய் சரவணன் வெற்றி பெற்று தஞ்சாவூர் தொகுதி எம்.எல்.ஏ-வானார்.

இந்நிலையில் தேர்தல் முடிந்த பிறகு ஆட்சி அமைப்பது மற்றும் ஆதரவளிப்பது தொடர்பாக அதிமுகவிற்குள் பிரச்னை ஏற்பட்டது. அப்போது, சி.வி.சண்முகம், வேலுமணி அணியில் இருந்த அதிமுக நிர்வாகிகளின் பதவி பறிக்கப்பட்டது. இதில் சரவணன் பதவியும் பறிபோனது. பின்னர் தவெக ஆட்சி அமைத்து விஜய் முதல்வரானார்.

அதிமுக நிகழ்ச்சிகளில் அதிகம் தலைகாட்டாமல் அமைதியானார் சரவணன். இப்படியான சூழலில் அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் தவெக-வில் தன்னை இணைத்துக் கொண்டார். இவரைத்தொடர்ந்து, இவருடைய ஆதரவாளர்கள் பலரும் கட்சியில் இணைய இருப்பதாகச் சொல்கிறார்கள். சரவணன் தவெக-வில் இணைந்தது தஞ்சாவூர் அரசியல் வட்டத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

தவெக-வில் இணைந்த என்.எஸ்.சரவணன்
தவெக-வில் இணைந்த என்.எஸ்.சரவணன்

இதுகுறித்து உள்விபரங்கள் அறிந்த பலரிடம் பேசினோம், ''அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை எழுந்த போது சோழமண்டல தளபதி என அழைக்கப்பட்ட வைத்திலிங்கம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கோலோச்சினார். அந்தச் சமயத்திலேயே சரவணன், முதல் ஆளாக எடப்பாடி ஆதரவாளராக மாறினார்.

அவரைத்தொடர்ந்தே வைத்திலிங்கம் முகாமில் இருந்த பலரும் எடப்பாடி அணிக்குச் சென்றனர். எடப்பாடி, தஞ்சாவூர் வரும்போதெல்லாம் பெரிய அளவில் செலவு செய்து வரவேற்பு கொடுத்தார். சரவணின் நுணுக்கமான பணிகளையும், விசுவாசத்தையும் கவனித்த எடப்பாடி, சரவணனை மாநகரச் செயலாளராக்கினார்.

தஞ்சாவூர் தொகுதியில் சரவணுக்குத்தான் சீட் என அப்போதிருந்தே பரவலாகப் பேசப்பட்டது. சரவணன் வளர்வதை விரும்பாத சிலர் அவருக்கு சீட் கிடைத்து விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர். எடப்பாடியின் குட்புக்கில் இருந்த சரவணன், அதையும் மீறி தனக்கு தான் சீட் என எடப்பாடியைச் சொல்ல வைத்து வேலையையும் தொடங்கினர்.

சுதாரித்து கொண்ட எதிர் தரப்பினர், சரவணன் வேலுமணி ஆதரவாளர் என்பதைச் சுட்டிக் காட்டினர். வேலுமணி மீது சந்தேகத்துடன் இருந்த எடப்பாடி பழனிசாமி சரவணனையும் கை கழுவினார். 'நீங்கதான், தேர்தல் வேலையைப் பார்க்க சொன்னீங்கண்ணே, இப்ப எனக்கு சீட் இல்லன்னா எப்படி வெளியில் தலைக்காட்ட முடியும்' என்று கேட்டிருக்கிறார். நாம் எடுத்த சர்வேயில் தஞ்சாவூர் நமக்கு சாதகமாக இல்லைனு எடப்பாடி சால்சாப்பாகச் சொல்லியிருக்கிறார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அந்தச் சமயத்தில் மனமுடைந்திருந்த சரவணன், விசுவாசமாக இருந்த எனக்கு எடப்பாடி கொடுத்த பரிசு இதான் என நெருக்கமானவர்களிடத்தில் புலம்பியிருக்கிறார். தேர்தலுக்குப் பிறகு நடந்தவை அனைவருக்கும் தெரிந்ததே. கட்சிப் பதவி நீக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி தஞ்சாவூர் வந்தார். அப்போது சிலர் சரவணனைத் தொடர்பு கொண்டு, அண்ணனை வந்து பாருங்கள் எல்லாம் நல்லதாக நடக்கும் என்றுள்ளனர்.

இனிமேல் இது சரிவராது என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். சரவணன் தவெக-வில் இணையப்போவதாகப் பரவலாகப் பேச்சுக்கள் கிளம்ப திமுக-விலும் இவரை இழுக்க முயற்சி நடந்தன. எதுவாக இருந்தாலும் நிதானமா யோசிச்சி நல்ல முடிவா எடுங்க என்றும் சொன்ன லோக்கல் முக்கிய திமுக. திமுக-வுக்கு வந்தால் உரிய அங்கீகாரம் கொடுக்கப்படும் என்றும் சொன்னதாகச் சொல்கிறார்கள்.

கையில் இரட்டை இலை சின்னத்தை பச்சைக் குத்தியிருக்கிறேன், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் மனதில் நிறைந்திருக்கின்றனர், எப்போதும் திமுக எதிர்ப்பு அரசியல் செய்து பழகியவன், என் வழி தனி வழி என்று நிராகரித்து விட்டார்.

அதன் பிறகும் பொறுமையாக இருந்தவர் வேலுமணி ஆதரவாளர் என்கிற அடையாளத்தில் இருந்தும் வெளிபட நினைத்தார். இந்நிலையில், விஜய் சரவணன், சில முறை சரவணனைச் சந்தித்து எங்க கட்சிக்கு வாங்க எனக்கும் பலமாக இருக்கும் என்றிருக்கிறார். இருவருக்கும் நெருக்கமான சிலர் பாலமாக இருக்க இது கைகூடி விட்டது. எதிர்பார்த்ததைப் போலவே சரவணன் தவெக-வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

எம்.எல்.ஏ விஜய் சரவணன் கைபிடிச்சி அழைத்துச் சென்றார். சரவணனுக்கு தவெக கட்சி துண்டை போத்திய என்.ஆனந்த் ரெண்டு சரவணனும் ஒண்ணா வேலை செய்யுங்க, உள்ளாட்சித் தேர்தல் தான் நமக்கான குறி என்று வாழ்த்தினாராம்'' என்றனர்.

என்.எஸ்.சரவணன், தவெக-வில் இணைந்தது குறித்து பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தஞ்சாவூர் அரசியலில் பேசு பொருளாகவும் இருந்து வருகிறது.

எம்.எல்.ஏ விஜய் சரவணன், என்.எஸ்.சரவணன்
எம்.எல்.ஏ விஜய் சரவணன், என்.எஸ்.சரவணன்

இது குறித்து சரவணன் கூறுகையில், ''எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு எளிய பின்னணி கொண்டவர்களையும் எம்.எல்.ஏ, அமைச்சர்களாக்கியவர் வெற்றி தளபதி முதல்வர் விஜய். கட்சி பெயர்தான் வேறே தவிர கொள்கை ஒன்றுதான். மாற்றுக்கட்சியான அதிமுக-வில் இருந்து வந்தாலும் அவர்கள் எப்போதும் போல் இருக்க அனுமதித்திருக்கும் மனப்பாங்கு போதும்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா-வுக்கு உரிய மரியாதை தருகிறார். என்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகே பிரசாரம் செய்கிறார். எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சியில் இருப்பவர் கூட இதைச் செய்யவில்லை. எதுவாக இருந்தாலும் மனம் ஒத்தவர்களுடன் பயணிப்பதே நல்லது, அதுவே சிறந்த வழியாகவும் இருக்கும்.

நல்லாருப்போம், நல்லாருப்போம் எல்லோரும் நல்லாருப்போம் என்கிற மனப்பாங்கு கொண்ட தலைவர் முதல்வர் விஜய், தலைமையில் அடுத்த அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளேன்'' என்றார்.

கேரள திருவோணம் பம்பர் லாட்டரி குலுக்கல்: கண்ணூரில் விற்ற லாட்டரிக்கு ரூ.30 கோடி பம்பர் பரிசு!

கேரள அரசின் லாட்டரித்துறை சார்பில் சித்திரை விஷூ, ஆயுதபூஜை, திருவோணம் உள்ளிட்ட பண்டிகைகளுக்குபம்பர் பரிசுகளுடன் கூடிய லாட்டரி வெளியிட்டு விற்பனை செய்வது வழக்கம். கடந்தமுறை வரை ஓணம் பண்டிகைக்கு 25 கோடி... மேலும் பார்க்க

"இப்படி ஆப்பிரிக்காவில் கூட நடக்காது" - திரிணாமுல் எம்எல்ஏ காரை சுற்றிவளைத்து முட்டை வீசி தாக்குதல்

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு அக்கட்சி தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. முட்டை மற்று... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: விவசாய மின் கட்டணம் ரத்து; மாநிலத்தின் 75% பகுதியை 'வறட்சி பகுதி'யாக அறிவித்த அரசு

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு பருவ மழை பெய்யவில்லை. சோலாப்பூர் உட்பட சில மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே மழை பெய்து இருக்கிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் போதிய அளவ... மேலும் பார்க்க

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: "FIR பதிவு செய்ததே பேரம் பேசுவதற்காகத்தான்" - அமைச்சர் நிர்மல் குமார்

மதுரையில் வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து காந்தி அருங்காட்சியகத்தில் இன்று அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு... மேலும் பார்க்க

மின்வாரிய விவகாரம்: "தனியாருக்கு தாரை வார்ப்பதில் முதல்வருக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?" - டிடிவி தினகரன்

மின் கணக்கீட்டாளர் பணிக்கு தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் ஊழியர்களை நியமிக்கும் அரசின் முடிவு குறித்து அமமுக தலைவர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தன் எக்ஸ் பக்கத்தில்,... மேலும் பார்க்க

"விஜய்யின் தாயாரை பாஜக தலைவர்கள் தவறாகப் பேசினார்கள்; ஆனால்."- மதுராந்தகம் திமுக வேட்பாளர் பரந்தாமன்

மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரையில் தமிழ்நாடு முதல்வர் விஜய் ஆற்றிய உரையில் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக மதுராந்தகம் திமுக வேட்பாளர் பரந்த... மேலும் பார்க்க