"அண்ணன் திருமாவளவனுக்கு இருப்பது வன்மம், பொறாமை" - இடும்பாவனம் கார்த்திக் காட்ட...
விழுப்புரம்: மாயமான செஞ்சி சிறுமியைத் தேடும் 100 போலீஸார்! - கதறும் பெற்றோர்; திணறும் காவல்துறை
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஆலம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 11-ம் தேதி தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். அதன்பிறகு இரவு தன்னுடைய பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த அவர், மறுநாள் 12-ம் தேதி அதிகாலையில் மாயமானார்.
பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் முதல் நாள் மகிழ்ச்சியாக பிறந்தநாளைக் கொண்டாடிய சிறுமி மறுநாளே காணாமல் போனதால், அதிர்ச்சியில் உறைந்தது கிராமம். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சத்தியமங்கலம் போலீஸார், சிறுமியைத் தேட ஆரம்பித்தனர்.
ஆனால் முதல் நாள், இரண்டாவது நாள் என அடுத்தடுத்த நாட்களிலும் சிறுமி மாயமான விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், அலெர்ட் ஆனார் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி மதிவாணன்.

அதையடுத்து நான்கு டி.எஸ்.பிக்கள் தலைமையில் 100 போலீஸார்கள் கொண்ட 8 தனிப்படைகளை அமைத்த அவர், சிறுமியைத் தேடும் பணியை தீவிரப்படுத்தினார். கடந்த 11-ம் தேதி இரவு 11 மணி முதல் 12-ம் தேதி அதிகாலை 3 மணி வரை அந்தப் பகுதியில் இருக்கும் செல்போன் டவர்களில் பதிவான சுமார் 500-க்கும் மேற்பட்ட அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.
அதேபோல கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் உதவியுடன், அந்த கிராமங்களைச் சுற்றியிருக்கும் கிணறு உள்ளிட்ட நீர் நிலைகளில் சிறுமி சிக்கியிருக்கிறாரா என்று ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் இன்றுடன் 5 நாட்கள் ஆன நிலையில் சிறுமி குறித்த எந்தத் தகவலும் கிடைக்காமல் திணறி வருகிறது காவல்துறை. இதுகுறித்து எஸ்.பி மதிவாணனிடம் கேட்டபோது, ``சிறுமியின் வீடு மிகவும் சிறியது.
வீட்டின் வெளி வாசலில் சிறுமியின் பாட்டி படுத்திருந்திருக்கிறார். வீட்டிற்குள் சிறுமியும் அவரது பெற்றோரும் படுத்திருக்கின்றனர். இரவு தங்களுடன் தூங்கிக் கொண்டிருந்த மகள் அதிகாலை 5.30 மணிக்கு காணாமல் போனதாகக் கூறும் சிறுமியின் தாய், அப்போது இரண்டு கதவுகளில் ஒரு கதவு திறந்திருந்ததாகத் தெரிவித்திருக்கிறார்.
அந்தப் பகுதி மற்றும் அந்த கிராமத்தைச் சுற்றியிருக்கும் போக்சோ வழக்குகள் உள்ளிட்டக் குற்றப் பின்னணி கொண்டவர்களின் பட்டியலை எடுத்து ஆய்வு செய்து வருகிறோம். அதேபோல சிறுமி மாயமான சம்பவத்திற்குப் பிறகு, கிராமத்திலிருந்து யாராவது தலைமறைவாகியிருக்கிறார்களா என்றும் விசாரணை செய்து வருகிறோம். சிறுமியின் வீட்டிற்கு அருகில் இருக்கும் முட்புதர்கள், மலைப் பகுதியில் மோப்ப நாய்களின் உதவியுடன் தேடும் பணியை மேற்கொண்டு வருகிறோம்.

அந்தப் பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமராக்கள், கிணறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தொடர்ச்சியாகத் தேடி வருகிறோம். ஏ.டி.எஸ்.பி தலைமையில் 5 தனிப்படைகள் மற்றும் மூன்று சிறப்புப் புலனாய்வு தனிப்படையினர் என 100 போலீஸார் சிறுமியை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
சந்தேகத்துக்கு இடமான பத்துக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை செய்திருக்கிறோம். அதேசமயம் யாரும் குற்றவாளிகள் என இதுவரை உறுதி செய்யப்படவில்லை. சிறுமியின் புகைப்படத்துடன் கூடிய நோட்டீசை தமிழகத்தின் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்திருக்கிறோம். எளிதில் கண்டுபிடிக்கும் வழக்காக இந்த வழக்கு இல்லை. அதனால் இது சவாலான வழக்குதான். ஆனாலும் விரைவில் கண்டுபிடித்து விடுவோம்" என்றார்.













