GuidanceTN விவகாரம்: "ஆந்திரா ஆளுங்கட்சிக்கு வேலை பார்த்த கீர்த்தனாதான் துரந்தரா...
30 ஆண்டுகளில் 436 தீவிர வானிலை நிகழ்வுகள், 78000 இறப்புகள்- `காலநிலை பாதிப்பில்' இந்தியா 10வது இடம்!
ஒரு பக்கம் கடும் வெப்பம்... இன்னொரு பக்கம் எதிர்பாராத கனமழை... சில இடங்களில் புயலின் தாக்கம்... வேறு சில பகுதிகளில் நீடிக்கும் வறட்சி. இயற்கையின் இந்த மாற்றங்கள், உலக நாடுகளின் எதிர்காலம் குறித்த பல கேள்விகளை எழுப்பி வருகின்றன.
காலநிலை மாற்றம் என்பது இனி எதிர்காலத்தில் வரப்போகும் பிரச்னை மட்டுமல்ல. அது ஏற்கெனவே மக்களின் வாழ்க்கை, விவசாயம், பொருளாதாரம் என பல தளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் உலக நாடுகள் சந்தித்த தீவிர வானிலை நிகழ்வுகளின் தாக்கத்தை ஆய்வு செய்துள்ளது, ஜெர்மனியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி அமைப்பான Germanwatch வெளியிட்டுள்ள Climate Risk Index 2027 அறிக்கை.
1996 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் ஏற்பட்ட தீவிர வானிலை நிகழ்வுகளின் மனித மற்றும் பொருளாதார தாக்கங்களை ஆய்வு செய்த இந்த அறிக்கையில், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 10-வது இடத்தில் இடம்பெற்றுள்ளது.
30 ஆண்டுகள் சொல்லும் இந்தியாவின் காலநிலை பாதிப்பு
கடந்த மூன்று தசாப்தங்களில் இந்தியா வெள்ளம், புயல், வெப்ப அலை, வறட்சி உள்ளிட்ட 436 தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொண்டுள்ளது.

இந்த நிகழ்வுகளின் தாக்கத்தால் சுமார் 78,000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்தியா சந்தித்த பொருளாதார இழப்பு சுமார் 170 பில்லியன் அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கைகள் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. ஒவ்வொரு எண்ணிக்கையின் பின்னாலும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், சேதமடைந்த வீடுகள், பாதிக்கப்பட்ட விவசாயம் மற்றும் மீண்டும் கட்டமைக்க வேண்டிய பல்வேறு விஷயங்கள் உள்ளன.
உலக அளவில் பார்க்கும்போது, 1996 முதல் 2025 வரை ஏற்பட்ட சுமார் 10,000 தீவிர வானிலை நிகழ்வுகளால், 9.16 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 5.5 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டதுடன், 4.7 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான நேரடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த தரவரிசை எப்படி கணக்கிடப்பட்டது?
Climate Risk Index என்பது எதிர்காலத்தில் எந்த நாடு பாதிக்கப்படும் என்பதை கணிக்கும் பட்டியல் அல்ல. கடந்த காலங்களில் ஏற்பட்ட தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்படுத்திய உண்மையான தாக்கங்களை மதிப்பிடும் ஆய்வாகும்.

உயிரிழப்புகள், பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை, பொருளாதார இழப்புகள் போன்ற மனித மற்றும் பொருளாதார தாக்கங்கள் இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
இந்த ஆய்வுக்காக EM-DAT சர்வதேச பேரிடர் தரவுத்தளம், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) உள்ளிட்ட தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன.
காலநிலை பாதிப்பு நாடுகளின் முன்னணியில் யார்?
கடந்த 30 ஆண்டுகளின் தாக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த தரவரிசையில், டொமினிகா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து மியான்மர் இரண்டாவது இடத்திலும், ஹோண்டுராஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
அடுத்தடுத்த இடங்களில் லிபியா நான்காவது இடத்திலும், ஹைட்டி ஐந்தாவது இடத்திலும், கிரெனடா ஆறாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளன. பிலிப்பைன்ஸ் ஏழாவது இடத்திலும், நிகரகுவா எட்டாவது இடத்திலும், தி பஹாமாஸ் ஒன்பதாவது இடத்திலும் உள்ளன.

இந்தப் பட்டியலில் இந்தியா 10-வது இடத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளில் பெரும்பாலானவை குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளாக உள்ளன. காலநிலை மாற்றத்துக்கு குறைவாக பங்களித்த நாடுகளே அதன் தாக்கத்தை அதிகமாக எதிர்கொள்கின்றன என்பதையும் இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.
இந்தியா ஏன் தொடர்ந்து பாதிப்பைச் சந்திக்கிறது ?
இந்தியாவின் புவியியல் அமைப்பு, மக்கள் தொகை, பருவமழையை சார்ந்த விவசாயம் மற்றும் நீண்ட கடற்கரைப் பகுதி ஆகியவை காலநிலை பாதிப்பை அதிகரிக்கும் காரணிகளில் சில.
கடலோரப் பகுதிகள் புயல்களின் தாக்கத்தை எதிர்கொள்கின்றன. சில பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மற்றொரு புறம், அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக வெப்ப அலைகளும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கின்றன.

குறிப்பாக, ஒரே ஒரு பெரிய பேரிடர் மட்டுமல்லாமல், தொடர்ந்து ஏற்படும் பல்வேறு தீவிர வானிலை நிகழ்வுகளும் இந்தியாவின் காலநிலை பாதிப்பை அதிகரிக்கும் காரணிகளில் ஒன்றாக உள்ளன.
காலநிலை மாற்றத்துக்கும் தீவிர வானிலை நிகழ்வுகளுக்கும் என்ன வித்தியாசம் ?
காலநிலை மாற்றம் என்பது பூமியின் சராசரி வெப்பநிலை, மழைப்பொழிவு உள்ளிட்ட காலநிலை அமைப்புகளில் நீண்ட காலமாக ஏற்படும் மாற்றம்.
ஆனால், வெள்ளம், புயல், வெப்ப அலை, வறட்சி போன்றவை குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் தீவிர வானிலை நிகழ்வுகள்.
காலநிலை மாற்றம் தீவிரமடையும் போது, இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும் வாய்ப்பும், அவற்றின் தாக்கமும் அதிகரிக்கலாம் என்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Climate Risk Index-ம் கடந்த கால பாதிப்புகளை பதிவு செய்வதன் மூலம் இந்த அபாயங்களை புரிந்துகொள்ள உதவுகிறது.

இந்தியா இனி கவனம் செலுத்த வேண்டியவை
இந்த அறிக்கை ஒரு தரவரிசையை மட்டும் காட்டவில்லை; எதிர்காலத்துக்கான எச்சரிக்கையையும் வழங்குகிறது.
வெள்ளம், புயல், வெப்ப அலை போன்ற பேரிடர்களை முன்கூட்டியே கணித்து மக்களை எச்சரிக்கும் அமைப்புகளை வலுப்படுத்துவது, காலநிலையைத் தாங்கக்கூடிய கட்டமைப்புகளை உருவாக்குவது, நகரத் திட்டமிடலில் காலநிலை அபாயங்களை கருத்தில் கொள்வது போன்ற நடவடிக்கைகள் முக்கியமாகின்றன.
இயற்கை நிகழ்வுகளை முழுமையாகத் தடுக்க முடியாது. ஆனால், அவை ஏற்படுத்தும் பாதிப்புகளை குறைக்கும் வகையில் தயாராக இருப்பது சாத்தியம்.
கடந்த 30 ஆண்டுகளின் தரவுகள் சொல்லும் செய்தி ஒன்றுதான்... காலநிலை மாற்றம் என்பது நாளைய பிரச்னை அல்ல; அது இன்றே எதிர்கொள்ள வேண்டிய சவால்.



















