Jailer 2: ஷீலா கதாபாத்திரத்தை படத்தில் உருவக்கேலி செய்தார்களா? - விளக்குகிறார் ந...
Driving Licence Rules: தேர்ச்சி மதிப்பெண் 60%லிருந்து 75%-ஆக உயர்வா? மத்திய அமைச்சகம் சொல்வது என்ன?
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்(MoRTH), டிரைவிங் லைசென்ஸ் விதிகளில், புதிதாக வண்ணக் குறியீடு கொண்ட அட்டைகளை அறிமுகம் செய்துள்ளது. மேலும், பாதுகாப்பான ஓட்டுதல் பயிற்சிக்கான தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
மத்திய மோட்டார் வாகன விதிகள் (Central Motor Vehicles Rules) தொடர்பான வரைவுத் திருத்தங்களில், ஓட்டுநர் உரிமத்தில் உரிமம் பெற்றவரின் இரத்த வகை, அலைபேசி எண் மற்றும் அவசர காலத் தொடர்பு எண்களைக் குறிப்பிடுவதைக் கட்டாயமாக்க முன்மொழிந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் ஓட்டுநர் உரிமங்களுக்கும் தனித்தனி வடிவங்களை அறிமுகப்படுத்தவும், உரிமத்தில் இரத்த வகை மற்றும் அவசர காலத் தொடர்பு விவரங்களைப் பதியவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அறிமுகப்படுத்தப்பட்ட இந்த விதிகள், மத்திய மோட்டார் வாகன விதிகள் தொடர்பான வரைவுத் திருத்தங்களின் ஒரு பகுதியாகும். இதில் ஆதார் அங்கீகாரத்தைப் பயன்படுத்தி இணைய வழியில் மேற்கொள்ளப்படும் சில ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகளுக்குக் கட்டண விலக்கு அளிக்கவும், பெயர் மற்றும் முகவரி போன்ற தனிப்பட்ட விவரங்களில் செய்யப்படும் மாற்றங்களுக்கான கட்டணங்களை நீக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவு அறிவிப்பில், உரிமம் வழங்கும் அதிகார அமைப்பால் வழங்கப்படும் அல்லது புதுப்பிக்கப்படும் ஒவ்வொரு ஓட்டுநர் உரிமமும், 'படிவம் 7'-இன் கீழ் லேமினேட் செய்யப்பட்ட அல்லது பாலிவினைல் குளோரைடு (PVC) அட்டையாக இருக்க வேண்டும்.
முன்மொழியப்பட்ட திருத்தங்களின்படி, உரிமம் வழங்கும் அதிகாரிகளால் வழங்கப்படும் அல்லது புதுப்பிக்கப்படும் ஓட்டுநர் உரிமங்களில், உரிமதாரரின் இரத்த வகை, கைபேசி எண் மற்றும் அவசரத் தொடர்பு எண்கள் இடம்பெற வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தங்களின் அடையாளம், வயது மற்றும் வசிப்பிடச் சான்றுகளாகப் பயன்படுத்தக்கூடிய ஆவணங்களை வரைவு விதிகள் இதில் குறிப்பிடுகின்றன. ஆதார், கடவுச்சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை, மின்-ரேஷன் அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ் போன்றவையும் இதில் அடங்கும்.
தவறான பயன்பாட்டைத் தடுப்பதற்காக, வயது மற்றும் முகவரிச் சான்றுகளாகப் பிரமாணப் பத்திரங்கள் மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை ஏற்றுக்கொள்ளவும் அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. அதே சமயம், நிர்வாக நீதிபதி அல்லது நோட்டரி முன்னிலையில் வயது மற்றும் முகவரிச் சான்றுகளாகப் பெறப்பட்ட பிரமாணப் பத்திரங்கள் நீக்கப்பட்டுள்ளன.
பயிற்சித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண் வரம்பு 75 % !
வாகன ஓட்டுதல் பயிற்சி தேர்வில் தேர்ச்சி வரம்பு 60 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக உயர்த்தப்பட்டதை அடுத்து, இந்தப் பயிற்சி குறைந்தது 30 நிமிடங்கள் நடைபெற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஓட்டுநர் உரிம விதிகளில் கொண்டுவரப்படவுள்ள இந்த மாற்றங்கள், மதிப்பீட்டு நடைமுறைகளை மேலும் கடுமையாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆதார் அங்கீகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சில குறிப்பிட்ட ஆன்லைன் ஓட்டுநர் உரிமச் சேவைகளுக்குக் கட்டண விலக்கு அளிக்கவும் இந்த வரைவுத் திருத்தங்கள் வழிவகை செய்கின்றன.

15 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட வேண்டும் !
ஓட்டுநர் உரிம விவரங்களில் செய்யப்படும் மாற்றங்கள் 15 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட வேண்டும். இந்த முன்மொழிவின்படி, ஓட்டுநர் உரிமத்தில் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை மாற்றக் கோரும் விண்ணப்பங்களை, உரிமம் வழங்கும் அதிகாரிகள் 15 நாட்களுக்குள் அங்கீகரிக்க வேண்டும் அல்லது நிராகரிக்க வேண்டும். விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால், அதற்கான உரிய காரணத்தையும் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களில் செய்யப்படும் மாற்றங்களுக்கான கட்டணத்தை நீக்கவும் அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இந்த வரைவு அறிவிப்பு குறித்த ஆட்சேபனைகள் அல்லது ஆலோசனைகளை, அது வெளியிடப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட தரப்பினர் சமர்ப்பிக்கலாம்.

















