Messi: "நன்றியுடனும், பெருமையுடனும் விடைபெறுகிறேன்" - கண்ணீருடன் பிரியாவிடை கொடு...
Messi: "நன்றியுடனும், பெருமையுடனும் விடைபெறுகிறேன்" - கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்த மெஸ்ஸி
கால்பந்து விளையாட்டின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து கண்ணீருடன் விடை பெற்றிருக்கிறார்.
கடந்த 21 ஆண்டுகளாக கால்பந்து விளையாட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெஸ்ஸி, நேற்று பெனின் அணிக்கு எதிரான அர்ஜென்டினாவின் நட்பு ரீதியான போட்டியில் கடைசியாக விளையாடினார்.
39 வயதான மெஸ்ஸி, இந்தப் போட்டியில், 85 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் தனது 126-வது சர்வதேச கோலை அடித்தார். இதனைத்தொடர்ந்து அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில், வெற்றி பெற்றது.

போட்டிக்குப் பிறகு மானுமென்டல் மைதானத்தில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் மத்தியில் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டிக்குப் பிரியா விடை கொடுத்தார்.
போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் பேசிய மெஸ்ஸி, ''இந்த ஜெர்சிக்கு நன்றி சொல்வதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியவில்லை.
20 வருடங்களாக, மிக மோசமான தருணங்களை நான் அனுபவித்திருந்தாலும் அர்ஜென்டினா அணிக்காக மைதானத்தில் விளையாடுவதை நான் ஒருபோதும் நிறுத்தியதில்லை. இனி விளையாட முடியாமல் போவது மிகவும் வேதனையாக இருக்கிறது.
2022- ஆம் ஆண்டு எனது கனவை மட்டுமல்ல, ஒரு முழு நாட்டின் கனவையும் நிறைவேற்றும் ஆசை எங்களுக்கு இருந்தது. மீண்டும் உலக சாம்பியன்களாக வேண்டும் என்பதுதான் அது. அதை நாங்கள் செய்து காட்டினோம். நாங்கள் உலகக் கோப்பை, கோபா அமெரிக்கா, ஃபைனலிசிமா என அனைத்தையும் வென்றோம்.
பல சக வீரர்கள் இந்த ஜெர்சிக்காக என்னுடன் இணைந்து போராடினார்கள். அவர்களில் ஒவ்வொருவரும் அர்ஜென்டீனாவிற்காக எவ்வளவு போராடினார்கள், தங்களை அர்ப்பணித்தார்கள் என்பது எனக்கு தெரியும்.
தங்களின் அனைத்து உழைப்பையும் மைதானத்திலேயே விட்டுச் செல்லத் தயாராக இருக்கும் போர்வீரர்கள் எனது பக்கத்தில் இருந்தார்கள்.
மிகப்பெரிய சாதனைகளைப் படைக்க, உங்களுக்கு ஒரு வலுவான குழு தேவை. அது எங்களிடம் இருந்தது.
என்னுடைய அணிக்கு மிக்க நன்றி. சிறுவயதிலிருந்தே எனக்கு இருந்த கனவை நிறைவேற்ற இவர்கள் எனக்கு உதவினார்கள். நான் உலக சாம்பியனாவதற்கு இவர்கள் உறுதுணையாக இருந்தார்கள்.

இந்த ஜெர்சியை அணிந்து விளையாடுவது எப்போதும் எனக்கு மிகப்பெரிய பெருமையாகவும், கனவாகவும் இருந்திருக்கிறது. இத்தனை வருடங்களாக எனக்கு ஆதரவளித்த எனது குடும்பத்தினர், சக வீரர்கள் மற்றும் அர்ஜென்டீனா ரசிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்தத் தருணம் என் வாழ்நாளில் என்றும் நிலைத்திருக்கும்.
அர்ஜென்டீனாவின் பல நகரங்களில் விளையாடும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. நான் சென்ற இடமெல்லாம் அளப்பரிய அன்பைப் பெற்றேன். இன்றுடன் நான் விடைபெறுகிறேன்.
உங்கள் எல்லோரையும் மிஸ் பண்ணுவேன். ஆனால் நான் எப்போதும் உங்கள் பக்கமே இருப்பேன். இந்த இளைஞர்களுக்கும், அவர்களுக்குப் பின்னால் வரும் ஒவ்வொருவருக்கும் நான் தொடர்ந்து ஆதரவளிப்பேன்.
இந்தத் தருணத்தில் எனக்குள் எத்தனையோ உணர்வுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அர்ஜென்டீனியனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.
நன்றியுடனும், பெருமையுடனும், நிம்மதியுடனும் நான் விடைபெறுகிறேன். எல்லாவற்றிற்கும் நன்றி" என்று கண்ணீருடன் பிரியா விடை கொடுத்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...












