'பெரும் மனநிறைவை கொடுத்த படம்' - 'டோரதி' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்
`பதிவு போட்டேன்ல அதுபோதும் புரியறதுக்கு... அதிருப்தியிலதான் இருக்கேன்!' – நாஞ்சில் சம்பத் பேட்டி
தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து நாஞ்சில் சம்பத் எந்த நேரமும் வெளியேறலாமெனத் தெரிய வருகிறது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு கட்சியில் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி தந்தார் விஜய்.
தேர்தலில் தவெகவுக்கு ஆதரவாக சம்பத்தும் பிரச்சாரம் செய்தார்.
இந்த நிலையில் தேர்தலுக்குப் பிறகு மதிமுக, தவெக பக்கம் வந்தது. அப்பபோதே சம்பத்திடம் அது குறித்துச் செய்தியாளர்கள் கேட்டனர்.
’வைகோ ஏறுகிற மேடையில் இந்த சம்பத் ஏற மாட்டான்’ எனச் சொல்லியிருந்தார்.
தற்போது தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக சார்பில் பிரச்சாரம் செய்யும் பேச்சாளர்களின் பட்டியல் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டது. அதில் சம்பத்தின் பெயர் இடம்பெறவில்லை.

அதேநேரம் வைகோ பெயர் இடம்பிடித்திருந்தது. ஒரு கட்சியின் சார்பில் தரப்படும் பெயர் பட்டியலில் அடுத்த கட்சியின் தலைவர் பெயர் எப்படி இடம் பெறலாம் என திமுக சார்பில் விமர்சனம் வைக்கப்பட்டதும் அந்தப் பெயர் நீக்கப்பட்டது.
இருப்பினும் தவெகவின் பிரசாரக் கூட்டத்தில் வைகோ பேசினார்.
கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரான தன்னை பிரச்சாரத்துக்கே அழைக்கவில்லை என நாஞ்சில் சம்பத் கடும் அதிருப்தியில் இருபப்தாகக் கூறப்பட்ட நிலையில் இரு தினங்களுக்கு முன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார் சம்பத்.
‘என்னுடைய பகலை யாரும் இருட்டாக்க முடியாது. என் வெளிச்சத்தை யாரும் அணைக்க முடியாது’ என அவர் பதிவிட்டிருந்தது, தவெக மீதான தன் அதிருப்தியை வெளிப்படுத்தவே என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

’கட்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், ஏன் அமைச்சர்கள் பலருக்கே சரியாகத் தமிழில் சர்வ சாதாரணமாக பேசவே வரவில்லை. இந்தச் சூழலில் சிறந்த பேச்சாளரான இவர் கட்சியில் சேர்ந்த போது பிரச்சார பீரங்கி கிடைத்து விட்டார்’ என நினைத்தோம்.
சொல்லப் போனால் இன்றைய தேதிக்கு தவெகவில் இருக்கும் ஒரே பேச்சாளர் இவர் மட்டுமே. எனவே இவரைத் தேர்தலுக்குப் பயன்படுத்தியிருக்கலாம்.
திமுக அதிமுக இரண்டு கட்சியிலயும் இருந்திருக்கிறதால இரண்டையும் சம தூரத்தில் வைத்து விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்திருப்பார். ஆனால் கட்சித் தலைமை என்ன நினைச்சதுனு தெரியலை" என தவெகவில் சிலரே ஆதங்கப்படுவதைக் காண முடிகிறது.
அரசியல் அறிந்த மேலும் சிலரோ, `வைகோ தவெகவுக்கு ஆதரவு தர்றப்பவே சம்பத் முக்கியத்துவம் குறையும்கிறது எல்லாரும் எதிர்பார்த்ததுதான். மதிமுக திமுக கூட்டணியில இருந்தப்ப கட்சியில இருந்து பிரிந்து போன மல்லை சத்யாவை திமுக கூட்டணியில் சேர்க்கக் கூடாதுனு திமுகவுக்கு அழுத்தம் தரப்பட்டதாப் பேசப்பட்டது. வைகோ திமுக அணியில இருந்து போன பிறகே சத்யா திமுக மேடைகள்ல தட்டுப்படறார். அதேபோலத்தான் இதையும் எடுத்துக்கணும்’ என்கின்றனர்.
நாஞ்சில் சம்பத்திடமே கேட்டு விடலாமென அவரைத் தொடர்பு கொண்டு ’தவெகவில் நீங்கள் ஒருவித அதிருப்தியுடனேயே இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறதே’ என்றோம்.

‘’அதான் பதிவு போட்டன்ல்ல. பார்த்திருப்பீங்க தானே, அதான் அர்த்தம். அது போதும் புரியறதுக்கு. வேறென்ன சொல்றது’ என்றார்.
’இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு’ என நாம் முடிப்பதற்குள்
‘கூப்பிடலை, போகலை’ என்றார்.
’கட்சியில் இருக்கும் ஒரே பேச்சாளர் நீங்க’ என்றதும்,
``அது உங்களுக்குத் தெரியுது, ஊருக்குத் தெரியுது, யாருக்குத் தெரியணுமோ அவங்களுக்குத் தெரியலையே, பார்க்கலாம் தம்பி, பார்த்துக்கலாம்’ என முடித்துக் கொண்டார்.











