செய்திகள் :

Oskar Klein Medal: பிரபஞ்சத்தின் ரகசியங்களைத் தேடும் இந்தியர்... அஷோக் சென்னுக்கு சர்வதேச விருது!

post image

“பிரபஞ்சத்தில் பதில் தெரியாத கேள்விகள்தான் அறிவியலின் அடுத்த தேடலுக்கான தொடக்கம்!”

நாம் பார்க்கும் இந்தப் பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது? கண்ணுக்கே தெரியாத நுண்ணிய துகள்களுக்கும் ஈர்ப்பு விசைக்கும் என்ன தொடர்பு? இத்தகைய சிக்கலான கேள்விகளுக்கு விடை தேடும் இந்திய விஞ்ஞானிதான் அஷோக் சென். 2026-ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க ஓஸ்கார் கிளைன் பதக்கத்தைப் பெற்றதன் மூலம், இந்த விருதைப் பெறும் முதல் இந்திய இயற்பியலாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

யார் இந்த அஷோக் சென்?

1956-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்த ஆஷோக் சென், கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical Physics) நிபுணத்துவம் பெற்றவர். பிரெசிடென்சி கல்லூரி, ஐஐடி கான்பூர் ஆகியவற்றில் கல்வி பயின்ற இவர், அமெரிக்காவின் ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தற்போது பெங்களூருவில் உள்ள கோட்பாட்டு அறிவியலுக்கான சர்வதேச மையத்தில் (ICTS–TIFR) பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

கண்ணுக்குத் தெரியாத கயிறுகளா? ஸ்ட்ரிங் தியரி!

அஷோக் சென்னின் முக்கிய ஆராய்ச்சித் துறை ஸ்ட்ரிங் தியரி (String Theory). இதன்படி, அடிப்படைத் துகள்கள் மிக நுண்ணிய கயிறு போன்ற அமைப்புகளாக இருக்கலாம்; அவற்றின் வெவ்வேறு அதிர்வுகள் வெவ்வேறு துகள்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம். வீணையின் கம்பி வெவ்வேறு விதமாக அதிர்ந்து வெவ்வேறு ஒலிகளை உருவாக்குவதைப்போல. இந்தக் கோட்பாடு இன்னும் பரிசோதனைகளால் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.

S-duality மற்றும் கருந்துளைகளின் மர்மங்கள்:

இயற்பியல் உலகை வியக்க வைத்த அஷோக் சென்னின் மிகச்சிறந்த பங்களிப்பு 'S-duality' கோட்பாடாகும். மிகவும் சிக்கலான மற்றும் சக்திவாய்ந்த ஈர்ப்பு விசை சமன்பாடுகளை, எளிதில் கையாளக்கூடிய எளிய சமன்பாடுகளாக மாற்றிக் கணக்கிட இந்தக் கோட்பாடு உதவுகிறது. குறிப்பாக, பிரபஞ்சத்தின் விளிம்பில் எதையும் தப்பவிடாமல் ஈர்க்கும் கருந்துளைகளின் (Black Holes) குவாண்டம் என்ட்ரோபியை மிகத் துல்லியமாக விளக்கி, உலக அறிவியல் சமூகத்தை இவர் வியப்பில் ஆழ்த்தினார்.

எதற்காக இந்த விருது?

ஸ்ட்ரிங் தியரியின் வளர்ச்சிக்கான அவரது முக்கியப் பங்களிப்புகளுக்காக இந்தப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, S-duality, கருந்துளைகளின் என்ட்ரோபியைக் கணக்கிடுதல், ஸ்ட்ரிங் ஃபீல்டு தியரி ஆகிய துறைகளில் அவர் செய்த ஆராய்ச்சிகள் குறிப்பிடத்தக்கவை. இவை பிரபஞ்சத்தின் அடிப்படை இயற்பியல் விதிகளைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.

1988-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஓஸ்கார் கிளைன் பதக்கம், கோட்பாட்டு இயற்பியலில் சிறந்த பங்களிப்புகளுக்காக வழங்கப்படும் சர்வதேச விருதாகும். ஸ்டீபன் ஹாக்கிங், பீட்டர் ஹிக்ஸ் போன்ற புகழ்பெற்ற விஞ்ஞானிகளும் இந்தப் பதக்கத்தை பெற்றுள்ளனர். இது நோபல் பரிசு அல்ல; தனித்துவமான அறிவியல் அங்கீகாரம். 2012-ஆம் ஆண்டு பிரேக்த்ரூ பரிசு, 2014-ஆம் ஆண்டு டிராக் பதக்கம், பத்மஸ்ரீ, பத்ம பூஷண் உள்ளிட்ட பல விருதுகளையும் அஷோக் சென் பெற்றுள்ளார்.

பிரபஞ்சத்தின் எல்லா ரகசியங்களுக்கும் இன்னும் விடை கிடைக்கவில்லை. ஆனால், அந்த விடைகளைத் தேடும் பயணத்தில் இந்திய விஞ்ஞானி அஷோக் சென்னின் பங்களிப்பு உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கேள்விகள் எவ்வளவு சிக்கலானதாக இருந்தாலும், அவற்றை ஆராயத் துணிவதே அறிவியலின் உண்மையான பலம்.

நோபல் பரிசு அறிவிப்பு; `குழந்தைகளுக்கு பசிக்கும்ல...'- மதிய உணவு தயாரித்துவிட்டு கொண்டாடிய விஞ்ஞானி!

உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு கிடைத்த மகிழ்ச்சியில் பலரும் கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். ஆனால், 2026-ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்ற அமெரிக்க விஞ்ஞானி Karl Deisseroth-ன் வெ... மேலும் பார்க்க

நீங்க எடுக்கும் முடிவு உலகத்தையே மாற்றுமா? | Multiverse Explained in Tamil | The Logic Show

சினிமாவில் நாம் பார்க்கும் 'Multiverse' மற்றும் 'Alternate Reality' நிஜமாகவே சாத்தியமா? அறிவியல் என்ன சொல்கிறது? Spider-Man, Doctor Strange போன்ற படங்களில் வரும் பல பிரபஞ்சங்கள் (Many-Worlds Theory) வ... மேலும் பார்க்க