NZ v IND: `அவர்களால் எப்படி இது முடிந்தது? எனக்குப் புரியல.!" - பாராட்டிய ஷ்ரேயா...
7 நாள்களில் 7 கொலைகள்; கொலை நகரமாகிறதா தூத்துக்குடி? - காவல்துறை கூறும் விளக்கம் என்ன?
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவான கடந்த 21-ம் தேதி பெண்ணிடம் பாலியல் சில்மிஷ விவகரத்தில் வேல்முருகன் என்ற இளைஞர் கல்லால் தாக்கிக் கொலைசெய்யப்பட்டார். மறுநாளான 22-ம் தேதி இரவில் சாத்தான்குளம் அருகேயுள்ள பன்னம்பாறையில் கொம்பையா என்ற விவசாயி, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். 23-ம் தேதி அதிகாலையில் சாத்தான்குளம் அருகிலுள்ள முதலூரில் காதல் விவகாரத்தில் வீட்டுக்குள் புகுந்த காதலன், சிறுமியின் தாய் மேரி ரெஜிலாவை அரிவாளால் வெட்டிக் கொலைசெய்தார். அரிவாளால் சரமாரியாக தாக்கப்பட்டதில் சிறுமியின் தந்தை, தம்பி ஆகியோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதே நாளில் இரவில் நாசரேத் அருகில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் சாமுவேல் என்பவரை அவரது சகோதரர் இஸ்ரவேல் என்பவர் அடித்துக் கொலைசெய்தார். அதே நாளில் மதுபோதையில் ஏரல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்த கர்ப்பிணிக்குக் கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரெளடி தனுஷ்கோடி, கிராம மக்களால் தாக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 25-ம் தேதி ஆழ்வார்கற்குளத்தில் வீட்டின் முன்பாக கழிவுநீர் ஓடுவதில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இசக்கிராஜா என்ற கல்லூரி மாணவர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.
இன்று 27-ம் தேதி கோவில்பட்டியில் தனியார் காய்கறிச்சந்தையில் உருவகேலி செய்த சுமைதூக்கும் தொழிலாளியை சக தொழிலாளியே கோடரியால் தாக்கி கொலைசெய்தார். இப்படியாக 7 நாள்களில் 7 கொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இது குறித்து மாவட்ட எஸ்.பி., சிவபிரசாத்திடம் பேசினோம், “தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 7 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த கொலைச் சம்பவங்கள் சிவில் பிரச்னைகள், மதுபோதையில் ஏற்பட்ட தகராறுகள், தனிப்பட்ட முன்விரோதங்கள் காரணமாகவே நடைபெற்றுள்ளன. கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி வரை மாவட்டத்தில் 65 கொலை வழக்குகள் பதிவாகி இருந்தன. நிகழாண்டில் இதே கால கட்டத்தில் 59 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் கடந்த ஆண்டைக் காட்டிலும் 6 கொலை வழக்குகள் குறைந்துள்ளது.

இது 9.2 சதவிகிதம் குறைவாகும். கொலைச் சம்பவங்களைத் தடுக்க காவல்துறை ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கிராமங்களில் மக்கள் பிரச்னைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதுடன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 6 மணி நேரத்திற்குள் 4 குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 6 மாதங்களில் மாவட்டத்தில் ரெளடிகள் கொலை, சாதியக் கொலை போன்றவை நிகழவில்லை. கஞ்சா வழக்குகள் தொடர்பான ரெளடிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாகத் தேடி வருகிறோம். சிங்கப்பெண் படையினர் போக்சோ உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளி, கல்லூரிகளில் தொடர்ந்து நிகழ்த்தி வருகின்றனர்” என்றார்.




















