சவூதி விமான நிலையத்தைத் தாக்கிய ஹவுதி அமைப்பு; 12 பேர் கொல்லப்பட்டதற்கு இந்தியா ...
"Reels பாக்காமல் புத்தகம் படிக்கின்றனர்”- பார்வையாளர்கள் அறையில் நூலகம்; தஞ்சாவூர் ஆட்சியர் அசத்தல்!
செல்போனின் ஆதிக்கத்தால் புத்தகம் வாசிப்பது வெகுவாகக் குறைந்து விட்டது. புத்தகம் படித்தால் நல்ல சிந்தனைகள் விரிவடையும், பொது அறிவு வளரும், பயனுள்ள பல நல்ல விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
நம்முடைய ஒவ்வொருவர் கையிலும் செல்போன் வந்த பிறகு அதிலேயே பெரும்பாலான நேரங்களைச் செலவிடுகிறோம். இதனால் புத்தகம் வாசிக்கும் பழக்கம் என்பதே மறையத் தொடங்கி விட்டது. காலத்தின் வளர்ச்சிக்கேற்ப செல்போனும் அவசியமாகி விட்ட சூழலில் புத்தகம் வாசிப்பையும் மறந்து விடக்கூடாது.

மாணவர்கள் மற்றும் அனைவரிடத்திலும் புத்தகம் படிக்கும் பழக்கத்தை விதைப்பதற்காக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதில் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொள்கின்றனர். இலக்கியவாதிகள் புத்தகம் படிப்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். செல்போனில் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் அதிகரித்து விட்ட சூழலில் புத்தகம் வாசிப்பு குறித்து பலரும் ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ரேவதியைச் சந்திக்க வருபவர்களுக்காக ஆட்சியர் அலுவலகத்தில் அவரது அறைக்கு எதிரே பார்வையாளர்கள் அறை உள்ளது. ஆட்சியர் ரேவதியைச் சந்திக்க அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் வருவதுண்டு. ரேவதி மீட்டிங் உள்ளிட்ட பணிகளில் இருக்கும்போது பார்வையாளர்கள் காத்திருக்கும் சூழல் ஏற்படுவதுண்டு.

அப்படியான சமயங்களில் அந்த நேரத்தை பார்வையாளர்களுக்குப் பயனுள்ளதாக மாற்றும் வகையிலும், புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தவும் மினி நூலகம் ஒன்றை அமைத்திருக்கிறார். இதில் 200க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. மாவட்ட ஆட்சியர் ரேவதியின் இந்தச் செயல் பலராலும் பாராட்டப்படுகிறது.
இதுகுறித்து ஆட்சியர் அலுவலகத்தில் விபரம் அறிந்த தரப்பில் பேசினோம், ''கலெக்டர் ரேவதி மேடம் புத்தகம் வாசிப்பில் ஆர்வம் கொண்டவர். பிஸியான வேலைகளுக்கு மத்தியில் கிடைக்கும் நேரங்களில் புத்தகம் படிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். வீக் எண்டில் ஒரு புத்தகமாவது படித்து விடுவார். புத்தகம் வாசித்தல் குறித்தும் பேசி வருகிறார்.

கலெக்டரைச் சந்திக்க வரும் பார்வையாளர்களைக் காத்திருக்க வைப்பதில்லை. சூழல் காரணமாகக் காத்திருக்கும்போது அந்த நேரத்தை வீணடிக்காமல் எல்லோரையும் புத்தகம் படிப்பதற்காக நூலகம் அமைத்து தன்னுடைய சொந்த புத்தகங்கள் வைத்திருக்கிறார்.
தான் படித்து பயன்பெற்ற புத்தகங்கள் மற்றவர்களுக்கும் பயன் தர வேண்டும் என்கிற நோக்கத்தில் புத்தகங்களை வைத்துள்ளார். கலெக்டரைப் பார்க்க வருபவர்கள் நினைவு பரிசாக புத்தகம் தருகின்றனர். அந்தப் புத்தகங்களையும் நூலகத்தில் சேகரிக்கிறார்.
நேரமும், புத்தகமும் பொன் போன்றது என்பார் கலெக்டர். பார்வையாளர்களை புத்தகம் படிக்க வைக்க வேண்டும். இதன் மூலம் அவர்களின் நேரம் வீணாகாமல் பொன்னாக மாறும் என்பதற்காக நூலகம் அமைத்து பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய சிறப்புமிக்க பல புத்தகங்களை வைத்துள்ளார். புத்தகம் வாசிப்பை ஊக்கப்படுத்தும் நோக்கத்திலும் கலெக்டர் இதை முன்னெடுத்திருக்கிறார். பெரும்பாலான பார்வையாளர்கள் செல்போனில் ரீல்ஸ் பாக்காமல் புத்தகம் படிக்கின்றனர்'' என தெரிவித்தனர்.














