செய்திகள் :

SIR: "விஜய் ஏன் போராட்டத்தில் பங்கேற்கவில்லை? சொரணை இருந்தால் கேளுங்கள்"- காங்கிரஸுக்கு திமுக பதில்!

post image

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் நடந்த எஸ்.ஐ.ஆர் விவகாரம் நாடுமுழுவதும் பெரும் விவாதமாகியிருக்கிறது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்ட அறிக்கையில், ``தமிழ்நாட்டில் வாக்காளர்கள் நீக்கப்படுவதைத் தடுத்துவிட்டதாகப் பேசிவிட்டு, இப்போது வாக்காளர்கள் நீக்கப்பட்டதே திமுகவின் தோல்விக்குக் காரணம் என்று கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். இப்போதுகூட எஸ்.ஐ.ஆரை எதிர்ப்பதாக திமுக செய்தித் தொடர்பாளர்கள் பேசி வருகிறார்களே தவிர, தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டத்தில் திமுக எம்பிக்கள் பங்கேற்கவில்லை.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

தமிழ்நாட்டில் உள்ள இடதுசாரிக் கட்சிகள், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் டெல்லிப் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானார்கள். ஆனால், திமுக சார்பில் ஒரு எம்பி கூட பங்கேற்கவில்லை. இதற்கு என்ன காரணம்? எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றால் பாஜகவை பகைத்துக்கொள்ள நேரிடும் என்ற அச்சம்தான் இதற்குக் காரணம்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக திமுக-வின் அதிகாரப்பூர்வ பக்கத்தில், ``கூட்டணியில் இல்லாத கழகத்தை நோக்கிக் கூவும் காங்கிரஸ் தலைவர் வாயை அடக்க வேண்டும்! இல்லையென்றால் அடக்கப்படும்!

சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன்பே, தனது திமிர்ப்பேச்சுகளால், தமிழ்நாட்டில் வலுவாக இருந்த பா.ஜ.க. எதிர்ப்புக் கூட்டணியைச் சீர்குலைத்த த.வெ.க. அடிமை மாணிக்கம் தாகூர் மீண்டும் தனது வாய்த்துடுக்கை வெளிப்படுத்தியுள்ளார்.

கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில், கழகச் செயல்வீரர்கள் களத்தில் ஆற்றிய பணியை அங்கீகரிக்கும் விதத்திலும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் பேசிய பேச்சை எடுத்து வைத்துக்கொண்டு, தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நேர்மையற்ற SIR நடவடிக்கைக்கு வக்காலத்து வாங்குகிறார். இதனைக் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை ஏற்கிறதா? SIR-இல் இதுதான் அவர்களது நிலைப்பாடா?

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் SIR-ஆல் மக்களின் வாக்குரிமை பறிபோகாமல் இருக்கத் தங்களால் இயன்றவரை தி.மு.க.வினர் பாடுபட்டனர். படிவங்களை நிரப்பிச் சமர்ப்பிக்க மக்களுக்கு உதவினர். எனினும், வரைவு வாக்காளர் பட்டியலிலும் பின்னர் இறுதி வாக்காளர் பட்டியலிலும் பலரது பெயர்கள் இடம்பெறாமல் போனது அனைவரும் அறிந்த உண்மை. இப்படி ஊரறிந்த உண்மையைத்தான் இந்தத் த.வெ.க. கால் அமுக்கி மாணிக்கம் மறைக்கிறார்.

உண்மையில், தி.மு.க.வின் தோல்விக்கு S.I.R.-உடன் சேர்த்து மற்றொரு காரணமும் இருக்கிறதுதான். அதனை மறுப்பதற்கில்லை. தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகித்துக் கொண்டே, தினமும் தி.மு.க. குறித்து மாணிக்கம் தாகூர், கிரிஷ் சோடங்கர், பிரவீன் சக்ரவர்த்தி போன்ற காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சில புல்லுருவிகள் தெரிவித்த கருத்துகளும் ஒரு காரணமாக அமைந்தன. இதனால், கூட்டணியின் நற்பெயரும் ஒற்றுமையும் பொதுவெளியில் கேள்விக்குள்ளானது. தி.மு.க. கூட்டணியிலும், காங்கிரஸ் கட்சியிலும் அங்கம் வகித்துக் கொண்டே, வேறு கட்சியின் ஸ்லீப்பர் செல்களாக இவர்கள் செயல்பட்டார்கள்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

இதனால், காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கூட்டணியின் வெற்றிக்காக உண்மையாக உழைத்தவர்களின் உழைப்பும் சேர்ந்து வீணானது. காங்கிரஸ் கட்சியில் இருந்த இத்தகைய அழுகிய பிணங்களின் சுமையைச் சேர்த்துச் சுமந்ததும் கழகத்தின் வாக்குகள் சரிய ஒரு காரணமாக அமைந்துவிட்டது. அந்தச் சுமையைத் தூக்கி எறிந்தபின்னர் மக்களிடம் கழகத்துக்கான ஆதரவு தற்போது பன்மடங்கு பெருகியிருக்கிறது. கழக உடன்பிறப்புகள் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறார்கள். நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகளும் அதைத்தான் சொல்கின்றன.

தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலகக் கோரி நடைபெறும் போராட்டத்தில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை என்று கூற மாணிக்கம் தாகூருக்கு முதலில் என்ன தகுதி இருக்கிறது? தமிழ்நாட்டில் SIR-க்கு எதிராகப் போராடிய இளைஞர்கள் தவெக அரசால் கைது செய்யப்பட்டபோது, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களை விடுவிக்கக் கோரிப் போராட்டம் நடத்தினர். அப்போது காங்கிரஸ் என்ன செய்துகொண்டிருந்தது? முதலமைச்சர் விஜய் அவர்களோடு காபி குடித்துக்கொண்டிருந்தவர்கள் கழகம் குறித்துப் பேசலாமா?

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த கட்டுரை வெளியானதும், ஞானேஷ் குமார் அவர்களைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் இருந்து முதல் ஆளாக அறிக்கை விட்டவர் எங்கள் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்.

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

தொடர்ந்து இடைத்தேர்தல் பரப்புரைகளிலும் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசினார். அதுமட்டுமின்றி, கடந்த ஏப்ரல் மாதமே, ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் சார்பில் அளிக்கப்பட்ட நோட்டீசிலும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

பதவிப் பிச்சைக்காக கூட்டணி தர்மத்திற்கு எதிராக காங்கிரஸ் புல்லுருவிகள் தி.மு.க.வுக்குச் செய்த துரோகத்தையடுத்து இந்தியா கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறிவிட்டோம். இந்தியா கூட்டணியில் இல்லாத தி.மு.க. இனி அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களில் இணைய வேண்டிய அவசியம் இல்லை. இணைய வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமையும் அவர்களுக்கு இல்லை. இனி எங்கள் வழி, தனி வழி!

மாணிக்கம் தாகூர் சூடு, சொரணையுள்ள மனிதராக இருந்தால் காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் த.வெ.க.வின் தலைவர் விஜய் ஏன் போராட்டத்தில் இணையவில்லை என்று கேட்க வேண்டும். ஞானேஷ் குமார் குறித்தோ, பா.ஜ.க. குறித்தோ, பிரதமர் மோடி குறித்தோ ஒரு வார்த்தை கூட உதிர்க்காத தொடைநடுங்கிதான் விஜய். அப்படிபட்ட தொடைநடுங்கியின் காலைக் கழுவிக் குடிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்களுக்கு தி.மு.க.வின் பா.ஜ.க. எதிர்ப்பு குறித்துப் பேசத் துளியும் அருகதை இல்லை.

கடந்த இரு நாட்களாக டெல்லியில் இந்தியாவின் இளைஞர் பட்டாளம் ஒன்றுதிரண்டு ஞானேஷ் குமார் அவர்களின் பதவிநீக்கத்தை வலியுறுத்திப் போராடி வருகிறார்கள். அவர்கள் மீது கடும் அடக்குமுறைகளும் வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

பல முன்னாள் முதலமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட இந்த அடக்குமுறையில் இருந்து தப்பவில்லை. இவற்றை எதிர்த்து தொடர்ந்து கடும் கண்டனங்களைக் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்து வருகிறார்.

திரிணாமூல் காங்கிரஸ், SFI அமைப்பினர், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரே கூட இதற்காக மனப்பூர்வமாக நன்றி தெரிவித்து, கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் கண்டன அறிக்கையைப் பகிர்ந்து வருகின்றனர். இப்படிப்பட்ட எங்களைப் பார்த்துதான், “எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றால் பாஜகவை பகைத்துக்கொள்ள நேரிடும் என்று தி.மு.க. அஞ்சுகிறது” என்று மாணிக்கம் தாகூர் வார்த்தை வாந்தி எடுத்திருக்கிறார்.

எவரையும் கண்டு அஞ்சும் இயக்கம் அல்ல தி.மு.க.! தேர்தல் பரப்புரைக்கு இடையிலும், கருப்புடை தரித்து தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொளுத்தி பா.ஜ.க.வின் முயற்சியை வீழ்த்திய வீரர் எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள்.

பாசிசம், பாயாசம் என பஞ்ச் பேசிய பக்கா பொடிமாஸ் முதலமைச்சர் விஜய் ஏன் இதுவரை SIR மற்றும் ஞானேஷ் குமார் குறித்துப் பேசவில்லை? அவர் காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கிறாரா இல்லையா? அவரைக் கேள்வி கேட்க மாணிக்கம் தாகூருக்கு ஏன் வக்கு வகையில்லை? காங்கிரஸ் கட்சியிலேயே சில சுயமரியாதை உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் விஜய்யின் கள்ள மவுனம் குறித்தும், தமிழ்நாட்டில் அவரது அரசு போராட்டங்களை அடக்குவது குறித்தும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

ஆனால், கட்சியின் தலைவராக இருக்கும் மாணிக்கம் தாகூரோ பனையூர் பண்ணையாரின் காலடியில் மண்டியிட்டு, திமுகவை நோக்கிக் கூவுகிறார்.

இவர்களெல்லாம் பா.ஜ.க. எதிர்ப்பு குறித்து கழகத்துக்குப் பாடம் எடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் இல்லை. அதிலும், பா.ஜ.க. எதிர்ப்பில் இந்தியாவிலேயே மிக வலிமை வாய்ந்த கூட்டணியைக் கட்டமைத்து, தொடர்ந்து இரு நாடாளுமன்றத் தேர்தல்களில் முழு வெற்றியைக் குவித்த தி.மு.க. குறித்து, அடுத்தவர் உழைப்பை உறிஞ்சி வாழ்க்கையை ஓட்டும் மாணிக்கம் தாகூர் போன்ற அட்டைப்பூச்சிகள் பேசக் கூடாது. த.வெ.க. போடும் பிஸ்கட்டுக்காக தி.மு.க. குறித்து இனிப் பேச வேண்டாம் என எச்சரிக்கிறோம். அவதூறு தொடர்ந்தால் அதற்குரிய விளைவை எதிர் கொண்டே ஆக வேண்டும்.” எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறது.

பினராயி விஜயன் மீது விஜிலென்ஸ் வழக்கு - தீவிரமடையும் விசாரணை; FIR-ல் உள்ளது என்ன?

கேரள மாநிலம் ​கொச்சியைச் சேர்ந்த தனியார் கனிம நிறுவனமான சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திற்கும், முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்குச் சொந்தமான ‘எக்சாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ தகவல் தொழில்நுட்ப நி... மேலும் பார்க்க

``ம.ச.வெ கூட்டணிக்கு விசிக ஒரு முக்கியத் தூண்" - விசிகவுக்கு அமைச்சர் ராஜ் மோகன் பதில்!

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் சென்னை புரசைவாக்கம் பகுதியில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சமூக வளைகாப்பு விழா நடைபெற்றது.... மேலும் பார்க்க

``தலைமைச் செயலகத்தில் மின்வெட்டுக்கு காரணம் இதுதான்" - மின்வாரியம் விளக்கம்

தவெக அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து தொடர்ந்து மின்வெட்டு பிரச்னைகள் நீடிக்கின்றன. ஆரம்பத்தில் கிராமங்களில் தொடங்கிய மின்வெட்டு, நகரங்களுக்கும் நீண்டது. அதைத் தொடர்ந்து, அமைச்சர் ஆய்வு செய்யும் இடங்கள், ம... மேலும் பார்க்க

"இனி இந்த நாடே ஜந்தர் மந்தராக மாறிவிடும்.!"- CJP நிறுவனர் அபிஜித் தீப்கே

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, 10ம் தேதி டெல்லியில் கரப்பான்பூச்சி அமைப்பினர் போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போராட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள... மேலும் பார்க்க

டெல்லி: `ஜந்தர் மந்தரில் போராட்டங்களுக்குத் தடை' - மத்திய அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!

டெல்லியில் இதுவரை முதன்மைப் போராட்டக் களமாக இருந்த மத்திய டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதி இனி போராட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படாது எனமத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்ட பரிந்துரைக் குழுவின்... மேலும் பார்க்க

"இன்ஸ்டாவில் தவெக அரசுக்கு எதிரான விமர்சனங்கள் முடக்கப்படுகிறது"- மத்திய அமைச்சருக்கு கனிமொழி கடிதம்

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், " தவெக அரசுக்கு எதிராக இன்ஸ்டாகிராம... மேலும் பார்க்க