செய்திகள் :

SIR: ``யாரையெல்லாம் பட்டியலிலிருந்து நீக்கலாம் என்பதிலேயே கவனமாக இருக்கிறார்கள்" - டி.எம் கிருஷ்ணா

post image

இந்தியாவின் மாபெரும் சிக்கலுக்குரிய விஷமாக மாறியிருப்பது எஸ்.ஐ.ஆர். எதிர்க்கட்சிகள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு எதிராகக் குரலெழுப்பி வருகின்றனர். அதன் அடிப்படையில் கர்நாடக இசைக்கலைஞரும், சமூக ஆர்வலருமான டி.எம். கிருஷ்ணா எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு எதிராகப் பேசியிருக்கிறார்.

நேற்று சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ``வாக்களிப்பது ஒரு சாதாரண அதிகாரம் மட்டுமல்ல. அது நமது ஜனநாயகத்தின் சுதந்திரம், உரிமை சார்ந்த முக்கிய விஷயம். ஆனால், தற்கால தேர்தல் முறையில் யாருடைய குரலுக்கு அதிகாரம் கொடுக்கலாம், யாருடைய குரலை ஒடுக்கலாம் என்ற ரீதியில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. எஸ்.ஐ.ஆர் பின்னணியில் உள்ள மிகப்பெரிய சூழ்ச்சியும் இதுவே.

டி.எம். கிருஷ்ணா
டி.எம். கிருஷ்ணா

கடந்த ஒரு மாதமாக ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மூலம் ஒரு குழப்பமான சூழல் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொருவகையிலான தகவல்களை வழங்குகின்றன. எது உண்மை, எது பொய் என்ற குழப்பம் அனைவருக்கும் ஏற்படுகிறது. SIR நடவடிக்கைகளின் தொடக்கத்திலிருந்தே, படித்தவர்களுக்கே SIR படிவங்களைப் பூர்த்தி செய்வதில் கேள்விகள் எழும் வகையில்தான் அது வடிவமைக்கப்பட்டது.

உதாரணத்திற்கு, 2002-ல் எங்கு வாக்களித்தோம், பெற்றோர் மற்றும் தாத்தா-பாட்டி எங்கு வாக்களித்தார்கள் என்ற விவரங்களையெல்லாம் தேடிக் கண்டுபிடிப்பது சாதாரண மக்களுக்குச் சாத்தியமற்ற ஒன்று.

இத்தகைய கடினமான கேள்விகள் மக்களைக் குழப்புவதற்காகவே கேட்கப்படுகின்றன. யாரைச் சேர்க்க வேண்டும், யாரை நீக்க வேண்டும், யாரைக் குழப்ப வேண்டும் என்பதை முன்பே தீர்மானித்துச் செய்யப்படும் ஒரு விஷயமாகவே இது தெரிகிறது. எனவே, இந்தக் குழப்பம் நிர்வாகத்தின் தவறு கிடையாது. இது வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யப்படும் ஒரு செயல்முறை ஆகும்.

யார் அதிகமாகக் குரல் எழுப்புகிறார்களோ, அவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக ஒரு தற்காலிக அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, அவர்கள் என்ன செய்ய நினைக்கிறார்களோ அதைத் தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இந்தத் தெளிவின்மையே ஒரு திட்டமிடப்பட்ட சூழ்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

டி.எம். கிருஷ்ணா
டி.எம். கிருஷ்ணா

வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் முதன்மை நோக்கம் தகுதியுள்ள எந்தவொரு வாக்காளரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், தொடக்கத்திலிருந்தே தேர்தல் ஆணையம் 'சுத்தம் செய்தல்' (Cleanse / Clean) என்ற சொற்களையே பயன்படுத்தி வருகிறார்கள். அதாவது, யாரைச் சேர்க்க வேண்டும் என்பதற்குப் பதிலாக, யாரையெல்லாம் பட்டியலிலிருந்து நீக்கலாம் என்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள்.

இறந்துபோனவர்களின் பெயர்களை நீக்குவது என்பது வழக்கமாக நடக்கும் ஒரு நடைமுறைதானே தவிர, அதுவே முதன்மை நோக்கமாக இருக்க முடியாது. ஆனால், தேர்தல் ஆணையம் தனது முதன்மை நோக்கத்தையே தலைகீழாக மாற்றி, வாக்காளர்களை நீக்குவதையே பிரதான வேலையாகச் செய்கிறது.

அடுத்ததாக, 2002-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலை ஒரு முக்கியமான அளவுகோலாக வைத்துள்ளார்கள். கடந்த தேர்தலில் ஒருவர் வாக்களித்திருந்தாலும், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும் அதற்கு எந்த மதிப்பும் இல்லாத சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. 2025-ல் நடைபெற்ற தேர்தல்களில் வாக்களித்திருந்தாலும் கூட, 2002-ல் பெயர் இருந்ததா என்ற கேள்வியையே முதன்மைப்படுத்துகிறார்கள்.

இதன் மூலம் கடந்த கால வாக்காளர் விவரங்களையும், மக்களின் வாக்களிக்கும் உரிமையையும் முற்றிலும் முடக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். SIR நடவடிக்கைகளின் மூலம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 72 முதல் 74 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டிருக்கிறது.

டி.எம். கிருஷ்ணா
டி.எம். கிருஷ்ணா

இவ்வளவு பெரிய பாதிப்பு குறித்து நாம் ஏன் தீவிரமாகப் பேசவில்லை என்பதும் நமது மனசாட்சியை உருத்தும் கேள்வி. வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 74 லட்சம் பேரும் ஏதோ வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல. இவ்வளவு பெரிய பாதிப்பு குறித்து இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் ஏன் உரிய முறையில் குரல் எழுப்பவில்லை?

இப்போது பேசத் தொடங்கினாலும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். தமிழ்நாட்டில், இத்தகைய ஜனநாயகப் பிரச்னை குறித்துப் பேசாமல் மெளனம் காப்பது மாநிலத்திற்கே ஒரு மிகப்பெரிய கரும்புள்ளி. மக்கள் குரல் எழுப்பாததால், இங்கு எல்லாமே சரியாக நடப்பது போன்ற ஒரு போலி பிம்பத்தைச் செய்தி ஊடகங்கள் கட்டமைத்து வருகின்றன.

எனவே, இதற்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறைக்கு மாற்றாக, ஒவ்வொரு பூத்திலும் யார் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன, யார் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்பதைப் பகிரங்கமாக அறிவிக்கும் 'பொதுத் தணிக்கை முறை' கொண்டுவரப்பட வேண்டும்.

இது எந்தவொரு தனிப்பட்ட அரசியல் கட்சியின் நலனுக்கானது அல்ல. அமைப்பையே ஜனநாயகப்படுத்துவதற்கான முயற்சியாகும். எந்தத் தவறு செய்தாலும் வாழ்நாள் முழுவதும் கேள்வி கேட்கவே முடியாது என்ற சிறப்புப் பாதுகாப்பை ஒரு பொறுப்பில் உள்ளவர்களுக்கு மட்டும் வழங்கியிருப்பது வேதனையான விஷயமாகும்.

டி.எம். கிருஷ்ணா
டி.எம். கிருஷ்ணா

என்னென்னவோ சட்டவிரோத அல்லது ஜனநாயக விரோதச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களைக் கேள்வி கேட்கவே முடியாது என்ற நிலை ஜனநாயகத்திற்கே அச்சுறுத்தலாகும். இத்தகைய ஜனநாயக விரோத விதிகளையும், பொறுப்புணர்வற்ற அதிகார அமைப்பையும் எதிர்த்து நாம் இதுவரை தீவிரமாகப் பேசாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழவில்லையா?

வாக்காளர் பட்டியலிலிருந்து 74 லட்சம் மக்களின் பெயர்கள் விடுபட்டுள்ளனர் என்ற மிக முக்கியமான விவகாரத்தை, இத்தனை காலமாக ஊடகவியலாளர்கள் ஏன் ஆழமாக ஆய்வு செய்யவில்லை.

அதிகாரத்திடம் சரியான கேள்விகளை எழுப்புவதும், உண்மைகளை ஆராய்ந்து வெளிக்கொண்டுவருவதும் ஊடகவியலாளர்களின் முதன்மையான பொறுப்பாகும். ஆனால், ஊடகங்கள் செய்ய வேண்டிய பணியைச் செய்யாமல், அந்தப் பொறுப்பை அப்படியே பொதுமக்கள் மற்றும் சிவில் சமூகத்தின் மீது சுமத்துவது ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு அழகல்ல.

இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டுவரத் தவறியதன் மூலம், தமிழ்நாட்டின் ஊடகவியலாளர்கள் இங்குள்ள குடிமக்களுக்குச் செய்ய வேண்டிய கடமையிலிருந்து தவறிவிட்டார்கள் என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்" என்றார்.

ஈரான் போருக்கு முக்கியமான Pete Hegseth! கார்னர் செய்யும் US நாடாளுமன்றம்; ட்ரம்ப் 'விடாப்பிடி' ஆதரவு

பீட் ஹெக்செத் - ஈரான் போரில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு எவ்வளவு பங்குண்டோ, அதை விட ஒரு படி அதிகமாக இவருக்கு உண்டு. யார் இவர் என்று கேட்கிறீர்களா? இவர்தான் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர்.ஈரான் போ... மேலும் பார்க்க

``TVK MLA அருள் விக்னேஷ் பாவம்... வதந்திகளை வைத்து கேள்வி எழுப்புவது சரியல்ல" - மாணிக்கம் தாகூர்

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம், துணை சபாநாயகர் ரவிசங்கர் விவகாரம் உள்ளிட்ட... மேலும் பார்க்க

'சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கு டாஸ்மாக் மதுக்கடைகளே காரணம்!' - அமைச்சர் ஷாஜகான் பேட்டி

த.வெ.க அரசு பொறுப்பேற்று 6 மாதங்களே முடிவடைந்திருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் தொடர்து நடப்பதற்கு மது மற்றும் போதை பழக்கமே முக்கிய காரணியாக உள்ளது என அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்... மேலும் பார்க்க

"கூட்டணியில் இருந்துக்கொண்டே தவெக அரசை விமர்சிக்கிறார்கள்!" - வைகோ குற்றச்சாட்டு; பெ.சண்முகம் பதிலடி

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்று கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகிவிட்டன.தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை பெறவில்லை. அந்தக் கட்சிக்கு 108 இடங்களை மட்டுமே வழங்கியிர... மேலும் பார்க்க

"ஓ, ஏதோ கொலைப் பந்தயம் நடக்கிறது போல..!" - ராஜ்மோகன் பதிலுக்கு சுப.வீரபாண்டியன் காட்டம்

தீபாவளி (நவம்பர் 8) அன்று, தமிழ்நாட்டில் 17 கொலைகள் நடந்துள்ளன. இது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களையும், கேள்விகளையும் எழுப்பி வருகின்றன.இந்தக் கொலைச் சம்பவங்கள் குறித்து அமைச்சர் ராஜ்மோக... மேலும் பார்க்க

'நம்பிக்கையில்லா தீர்மானம்! - முன்னெச்சரிக்கையாக ரெசார்ட்டில் எம்.எல்.ஏக்களை திரட்டும் CM விஜய்?

சென்னை தனியார் விடுதியில் இன்று காலை 11 மணிக்கு தவெகவின் 109 எம்.எல்.ஏக்களையும் நேரில் அழைத்து முக்கிய ஆலோசனையில் ஈடுபடவிருக்கிறார் முதல்வர் விஜய். நவம்பர் 13 ஆம் தேதிக்குப் பிறகு ஆட்சியின் மீது எதிர்... மேலும் பார்க்க