ஈரான் போருக்கு முக்கியமான Pete Hegseth! கார்னர் செய்யும் US நாடாளுமன்றம்; ட்ரம்ப...
ஈரான் போருக்கு முக்கியமான Pete Hegseth! கார்னர் செய்யும் US நாடாளுமன்றம்; ட்ரம்ப் 'விடாப்பிடி' ஆதரவு
பீட் ஹெக்செத் - ஈரான் போரில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு எவ்வளவு பங்குண்டோ, அதை விட ஒரு படி அதிகமாக இவருக்கு உண்டு. யார் இவர் என்று கேட்கிறீர்களா? இவர்தான் அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர்.
ஈரான் போர் சம்பந்தமாக இவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்டு. ஈரான் போரில் எந்தளவிற்கு அமெரிக்காவிற்கு நிதிச் செலவு ஆனதோ, அதே அளவிற்கு அமெரிக்காவின் ஆயுதக் கிடங்கில் ஆயுதங்களின் இருப்பும் குறைந்தது.
இதை ட்ரம்பிடம் மறைத்து, பீட் ஹெக்செத் போரைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறார் என்று இவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதில் அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸிற்குக் கூட அதிருப்தி என்றும் கூறப்பட்டது.

ஈரான் போர் - அமெரிக்கா அதிருப்தி
கடந்த வாரம் நடந்து முடிந்த அமெரிக்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் குடியரசுக் கட்சி (ட்ரம்ப் கட்சி) பெரும் பின்னடைவைச் சந்தித்தது. இதற்கு ஈரான் போர்தான் முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.
ஜனநாயகக் கட்சியினர் ஏற்கெனவே ஈரான் போரை விரும்பவில்லை. நேற்று (நவம்பர் 10) பீட் ஹெக்செத்திற்கு எதிரான மசோதாவை நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகளின் சபையில் கொண்டு வரப்பட்டது..
இந்த மசோதாவைக் கொண்டு வந்ததே, ட்ரம்பின் சொந்தக் கட்சியைச் சேர்ந்த தாமஸ் மேஸி. ஈரான், ஏமன், வெனிசுலா, கரீபியனில் நடந்த அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி இந்த மசோதாவைக் கொண்டு வந்தார் தாமஸ் மேஸி.
மசோதா
ஆனால், இந்த மசோதா 211-204 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. தற்போது அமெரிக்க பிரதிநிதிகள் சபை குடியரசுக் கட்சியினரால் நிரம்பியிருப்பதால் இந்த மசோதா தோற்கடிக்கப்பட்டுள்ளது. (புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள் வருகிற ஜனவரி மாதம்தான் பதவியேற்பார்கள்).
பீட் ஹெக்செத்திற்கு எதிரான இந்த நடவடிக்கைக்கு எதிராகத் த ன்னுடைய ட்ரூத் சமூக வலைதளத்தில் கொதித்திருக்கிறார் ட்ரம்ப்...

“போர்ச் செயலாளர் பீட் ஹெக்செத் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து அவரைப் பதவிநீக்கம் செய்யப் பார்த்த ஜனநாயகக் கட்சியினரின் முயற்சி படுதோல்வியில் முடிந்தது!
தோற்றுப்போன தாமஸ் மேஸியைத் தவிர, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினரும் பீட்டிற்கு ஆதரவாகவே வாக்களித்தனர்.
வெனிசுலா மற்றும் ஈரானில் பெற்ற வெற்றிகள், ராணுவ வரலாற்றிலேயே இல்லாத அளவிற்குப் புதிய ஆட்களைச் சேர்த்த சாதனை (ராணுவத்தில் சேரப் பெரிய காத்திருப்போர் பட்டியலே இருக்கிறது!),
மற்றும் இதுவரை பார்க்காத அளவிலான மன உறுதி ஆகியவை இந்த மகத்தான அமெரிக்க தேசபக்தரின் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யென நிரூபித்து, அவரை விடுதலை செய்ய வழிவகுத்துள்ளன.ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்காவைத் தொடர்ந்து தங்கள் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தித் துஷ்பிரயோகம் செய்து வருகிறார்கள்.
அவர்களை உடனடியாகத் தடுத்தாக வேண்டும்! அமெரிக்காவை மீண்டும் பெருமைமிக்க நாடாக்குவோம்” என்று பதிவிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகை...
பீட் ஹெக்செத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக வெள்ளை மாளிகையின் சமூக வலைதளப் பக்கத்தில், “47 ஆண்டுகாலமாக ஈரான் அப்பாவி மக்கள், போராட்டக்காரர்கள், அமெரிக்கர்களைக் கொன்று குவித்துள்ளதோடு,

ஜிஹாதி பயங்கரவாதத்தின் மூலம் மேலை நாடுகளுக்கு எதிராகப் போரையும் நடத்தி வந்துள்ளது.
வேறு எந்த அதிபருக்கும் இல்லாத துணிச்சல் அதிபர் ட்ரம்பிற்கு இருந்தது — ஈரானின் அச்சுறுத்தலைத் தன் முழுப் பலத்தோடு அவர் எதிர்கொண்டார். அவர் பிரச்னையைத் தள்ளிப்போடவில்லை.
மாறாக அவர்களின் பல்லை உடைக்கும் அளவிற்குத் தகுந்த பதிலடி கொடுத்தார்!” என்று முன்பு பீட் ஹெக்செத் பேசியிருந்ததை மேற்கோள் காட்டியிருக்கிறது.
ஜே.டி.வான்ஸ் ஆதரவு
ஜே.டி. வான்ஸும் தனது எக்ஸ் பக்கத்தில் பீட் ஹெக்செத்திற்குப் பரிந்து, “போர்ச் செயலாளர் பீட் ஹெக்செத் பதவிநீக்கம் செய்யப்படக்கூடிய அளவுக்குக் குற்றங்கள் ஏதும் செய்துள்ளாரா? என்ற கேள்வியே மிகவும் வினோதமானது. அதற்கு ‘கண்டிப்பாக இல்லை’ என்பதே வெளிப்படையான பதில்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் (காங்கிரஸ்) பல செயல்பாடுகளைப் போலவே, இந்தத் தகுதிநீக்க முயற்சியும் உண்மையான கொள்கை முடிவுகளை எடுப்பதற்குப் பதிலாக நடத்தப்படும் ஒரு வேடிக்கையான நாடகமாகவே மாறிவிட்டது.
கொள்கை ரீதியிலான கருத்து வேறுபாடுகளைப் பதிவு செய்ய நாடாளுமன்றத்திடம் எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. ஆனால் அவற்றைச் சரியாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் பீட் ஹெக்செத்தைப் பதவிநீக்கம் செய்ய முயற்சிக்கிறார்கள்.

டொனால்ட் ட்ரம்பிற்கும் அவர்கள் இதையேதான் செய்தார்கள். சட்டங்களை இயற்றுவது கடினம். ஆனால் பதவிநீக்கத் தீர்மானங்களைக் கொண்டு வருவது மிகவும் எளிதானது (இறுதியில் அதனால் எந்தப் பெரிய விளைவும் ஏற்படப்போவதில்லை என்றாலும்).
இங்கே வேடிக்கை என்னவென்றால், எந்தெந்த விவகாரங்களில் பீட் மிகவும் சரியான முடிவை எடுத்திருக்கிறாரோ — அதாவது ஐரோப்பா/உக்ரைனிலிருந்து படைகளைத் திரும்பப் பெற்று மாற்றி அமைப்பது மற்றும்
உயர் ராணுவ அதிகாரிகளின் அமைப்பை மறுசீரமைப்பது — அதே விவகாரங்களில்தான் மக்கள் பிரதிநிதிகள் அவர் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள்.
உண்மையில் இது ஈரான் பற்றிய விஷயம் அல்ல; பென்டகனில் (அமெரிக்க பாதுகாப்புத் துறை) உள்ள அதிகாரத்துவத்தை எதிர்த்து பீட் துணிச்சலாகக் களமிறங்கியுள்ளார் என்பதே இதன் பின்னணியில் உள்ள உண்மை” என்று பதிவிட்டுள்ளார்.
பீட் ஹெக்செத்திற்கு எதிராக வாக்குகள் விழுந்துவிடக் கூடாது என்பதற்காக சில ஜனநாயகக் கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றனர். இது குறித்து அவர்கள் தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.













