`ஏ.சி அறையில் நவீன விவசாயம்; 7 நாள்களில் அறுவடை..!' - மைக்ரோ கிரீன்ஸ் விற்பனையில...
Tata Sons தலைவராக N.சந்திரசேகரன் நியமனம் செல்லாது! - நோயல் டாடா அடுக்கும் காரணங்கள் என்ன?
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரனை நீட்டிக்கக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளார் டாடா அறக்கட்டளையின் தலைவர் நோயல் டாடா.
ஆனால், டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் என்.சந்திரசேகரனே அந்தப் பதவியில் தொடர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் கிட்டத்தட்ட 66 சதவிகிதப் பங்கு டாடா அறக்கட்டளையிடம் இருப்பதால், டாடா நிறுவனத்தின் சட்டப்படியே, டாடா அறக்கட்டளைத் தலைவரின் முடிவு முக்கியப் பங்கு வகிக்கிறது.

நோயல் டாடா கடிதம்
இந்த நிலையில், என். சந்திரசேகரனின் பதவி நீட்டிப்பை எதிர்த்து டாடா சன்ஸ் நிறுவனத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் நோயல் டாடா.
அந்தக் கடிதத்தில் நோயல் டாடா, “டாடா சன்ஸ் நிறுவனம் செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற்ற இயக்குநர் குழுக் கூட்டத்தின் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளைப் பகிரவில்லை.
கூட்டக் குறிப்புகளின் வரைவு பல முக்கியமான அம்சங்களில் இருந்து முரண்பட்டுள்ளது.
செப்டம்பர் 17-ம் தேதி கூட்டத்தின் அசல் நிகழ்ச்சி நிரலில் தலைவரை மீண்டும் நியமிப்பது குறித்த எந்தவொரு முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை.
அசல் நிகழ்ச்சி நிரலின் 7-வது அம்சம், நியமனம் மற்றும் ஊதியக் குழுவின் ஆலோசனைக் கூட்டப் பகிர்வு என்றே விவரிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், கூட்டத்தின் போது செயல் தலைவரை மீண்டும் நியமிப்பதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
என். சந்திரசேகரன் மேலும் ஐந்தாண்டுகளுக்கு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
எனக்கு வழங்கப்படவில்லை...
டாடா சன்ஸ் நிறுவனம் தலைவர் மறுநியமனம் தொடர்பான தீர்மானத்தைப் பதிவாளரிடம் தாக்கல் செய்துள்ளதாக ஊடக அறிக்கைகள் காட்டுகின்றன. ஆனால், தலைவரை மீண்டும் நியமிப்பதற்கான தீர்மானத்தின் உண்மையான நகல் எனக்கு வழங்கப்படவில்லை.
செப்டம்பர் 17-ம் தேதி, கூட்டத்தின் குறிப்புகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இறுதி செய்யப்பட்ட அல்லது கையொப்பமிடப்பட்ட கூட்டக் குறிப்புகள் எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை.

என்.சந்திரசேகரன் மறுநியமனம் செல்லாது
தேர்வுக் குழு எதுவும் அமைக்கப்படவில்லை. ஆனால், நிறுவனமே இந்த விவகாரத்தில் முடிவு எடுத்துள்ளது. நியமனத்திற்கான சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாமலே இந்த மறுநியமனத் தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டிருக்கிறது.
எனவே, சந்திரசேகரனை மீண்டும் தலைவராக நியமிக்கும் தீர்மானம் செல்லாது.மேலும், சந்திரசேகரன் மற்றும் வேணு சீனிவாசனின் வணிகப் பரிவர்த்தனைகள் குறித்த வெளிப்படைத் தகவல்கள் அளிக்கப்பட வேண்டும்.
சிறாபானோஜி ராவ் டாடா அறக்கட்டளையின் (SDTT) விதிமுறைகளின்படி தேர்வுக் குழுவை அமைக்க வேண்டும்.
தலைவர் மறுநியமனத் தீர்மானத்தை ‘நிறைவேற்றப்படாத ஒன்றாகவே’ தான் நான் கருதப்போகிறேன்.
டாடா சன்ஸ் கூட்டக் குறிப்புகளிலும் இதையே பதிவு செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.


















