'பாஜகவும் தேர்தல் ஆணையமும் கைகோத்து ஒரு கட்சியைப் பிளவுபடுத்துகின்றன'- மம்தாவுக்...
அயலக மாணவர் விவகாரம்: ``இதோ ஆதாரம்; உங்க IT Wing மூலம் தவறான தகவல பரப்புறீங்க" - மாணவர் பாரதிதாசன்
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்ற பாரதிதாசன் என்ற மாணவர், கல்வி உதவித்தொகை கிடைக்காமல் தாம் மிகவும் சிரமப்படுவதாக ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.
இந்த விவகாரம் தற்போது பெரும் விவாதமாகியிருக்கிறது. இந்த நிலையில், சமூக நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த விளக்க அறிக்கையில், ``மாணவர் பாரதிதாசன் எக்ஸ் தளத்தில் காணொளி ஒன்றைப் பதிவுசெய்து உண்மைக்கு மாறான தகவல்களைப் பதிவு செய்துள்ளார். மாணவருக்கு இதுவரையில் முதலாமாண்டு படிப்பிற்கு ரூ.36 லட்சம் மற்றும் இரண்டாமாண்டிற்கு ரூ.12 லட்சம் ஆக மொத்தம் ரூ.48 லட்சம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாணவரது காணொளியில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகவும், அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடன் உள்ளது" எனத் தெரிவித்திருந்தது.
அரசின் குற்றச்சாட்டுக்கு மாணவர் பாரதிதாசன் பதிலளித்திருக்கிறார். அதில், ``சமூக நீதித் துறையிடமிருந்து மீண்டும் ஒரு அறிக்கை வந்திருந்தது. அதில், '20-ம் தேதி அனுப்பிய கட்டணச் சீட்டிற்கு (Bill) நீங்கள் இன்னும் பதில் அனுப்பவில்லை' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், நான் அதற்கு ஏற்கனவே பதில் அனுப்பிவிட்டேன். நான் பதில் அனுப்பவில்லை என்று கூறுவது தவறான தகவலாகும். நான் அனுப்பிய மின்னஞ்சல் (Email) ஒருவேளை உங்களின் 'ஸ்பேம்' (Spam) கோப்புறையில் உள்ளதா என்று சரிபார்க்கவும்.
நான் ஆகஸ்ட் 26-ம் தேதியே அதற்கான கட்டணச் சீட்டை அனுப்பிவிட்டேன். அதற்கான ஆதாரத்தை இதோ (திரையிலேயே) காட்டுகிறேன். ஆனால், 'நான் அனுப்பவே இல்லை' எனத் தவறான செய்தியை, உங்களது தகவல் தொழில்நுட்பப் பிரிவின் (IT Wing) மூலம் பரப்பி, என்னுடைய கனவைச் சிதைக்கிறீர்கள்.
மேலும், 'மாணவர் திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்' என்றும் கூறுகிறீர்கள். சமூக நீதித் துறைக்கு நான் ஒரு பணிவான கோரிக்கை வைக்கின்றேன். இந்தத் திட்டத்தின் கீழ் எத்தனை பேர் முனைவர் (Ph.D.) பட்டம் படிக்கிறார்கள் என்ற விவரத்தை அரசு வெளியிட்டால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.
ஏனெனில், பெரும்பாலானோர் முதுகலைப் பட்டமே (Master's Degree) படிக்கிறார்கள். முதுகலை என்பது ஓராண்டுப் படிப்பு மட்டுமே. அதற்கு ஓராண்டிற்கான கல்லூரிப் கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவுகளை (Living Expenses) வழங்கினால் போதுமானது. ஆனால், ஆராய்ச்சிப் படிப்பு (Research) என்பது அப்படிப்பட்டது அல்ல. அதற்குப் பயிற்சிக் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆராய்ச்சிக்குத் தேவையான உபகரணங்கள் (Equipments) வாங்க வேண்டும். கருத்தரங்குகளுக்குச் (Conferences) செல்ல வேண்டும். புத்தகங்கள் வாங்கிப் படிக்க வேண்டும். 24 மணி நேரமும் ஆராய்ச்சியைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும்.
சிலர் 'இந்தியாவிலேயே படித்திருக்கலாமே?' என்று கேட்டார்கள். இந்தியாவில் 'ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்' (JRF) எனப்படும் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை எனக்குக் கிடைத்தது. ஆனால், அதைவிட பெரிய வாய்ப்பு வெளிநாட்டில் கிடைத்தது என்பதற்காகவும், இங்கு படித்து முடித்தால் ஐ.ஐ.டி (IIT), ஐ.ஐ.எஸ்.சி (IISc) போன்ற உயர் நிறுவனங்களில் பேராசிரியராகலாம் என்ற நம்பிக்கையிலும்தான் இங்கு வந்து கல்வியைத் தொடர்கிறேன்.
JRF மூலம் கிடைத்திருக்க வேண்டிய ஊதியத்தைக் கைவிட்டுவிட்டு வந்ததால், என் பெற்றோரை மிகவும் கஷ்டப்படுத்திவிட்டேன். எந்தவித ஊதியமும் இல்லாமல், எனது முழு நேரத்தையும் இந்த ஆராய்ச்சிக்காகவே அர்ப்பணித்து உழைத்துக் கொண்டிருக்கிறேன்.
ஆனால், என் மீது மீண்டும் மீண்டும் தனிநபர் தாக்குதல் (Personal Attack) தொடுப்பது எனக்கு மிகவும் வேதனையளிக்கிறது. ஆம், நீங்கள் ரூ.36 லட்சம் கொடுத்தீர்கள். நான் ரூ.37 லட்சத்திற்கான கட்டணச் சீட்டுகளை ஜூன் 8-ம் தேதியே அனுப்பிவிட்டேன். அதன் பிறகு நீங்கள் கேட்ட விளக்கங்களையும், பல்கலைக்கழகத்தின் (University) மூலமாகவே அனைத்து விவரங்களுடன் அனுப்பி வைத்துவிட்டேன்.
நீங்கள் வழங்கியதாகக் கூறுவதெல்லாம் முதலாண்டிற்கு வழங்கிய பணத்தைப் பற்றியது. தற்போது நீங்கள் கொடுத்தது 6 மாத காலத்திற்கான வாழ்க்கைச் செலவுகளுக்கு மட்டுமே. அதுவும் முடிந்துவிட்டது.
ஆராய்ச்சிக்குத் தேவையான செல்ஸ் (Cells), ரியேஜென்ட்ஸ் (Reagents), மற்றும் பொருட்கள் (Consumables) வாங்குவதற்குக் கூடுதல் நிதி தருமாறு கேட்டிருந்தேன். ஆனால், இதுவரை இந்தப் பிரச்னைக்கு முடிவே வரவில்லை. 'நான் கட்டணச் சீட்டு அனுப்பவில்லை' என்ற தவறான பரப்புரையை சமூக நீதித் துறை என் மீது மீண்டும் மீண்டும் சுமத்துகிறது.
அப்படியென்றால், நான் காட்டும் இந்த ஆவணங்களுக்குப் பதில் என்ன? ஜூன் 8-ம் தேதி அனுப்பிய ஆவணங்களுக்கும், சமீபத்தில் பல்கலைக்கழகம் அனுப்பிய மின்னஞ்சலுக்கும் பதில் என்ன? நீங்கள் மீண்டும் விளக்கம் கேட்டபோதும், அதற்கான சரியான விளக்கத்தையும் அளித்துவிட்டேன்" எனக் குறிப்பிட்டு, அசல் ஆவணங்களை வீடியோவில் காண்பித்தார்.









