கரூர்: புல் அறுக்க போன 60 வயது மூதாட்டி... கழுத்தறுக்கப்பட்டு கொலையான அதிர்ச்சி ...
திண்டுக்கல் பயங்கரம்: ‘பழிக்கு பழிதீர்த்த கும்பல்'; வெளிவந்த 10 வது நாளில் தீர்த்து கட்டிய கொடூரம்
.
திண்டுக்கல் மாநகராட்சி ஒப்பந்ததாரரும் திமுக பிரமுகருமான 'பாத்ரூம்' முருகன், கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடத்தப்பட்டு ஓடும் காரிலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் முருகனின் கார் ஓட்டுநர் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்திருந்த நிலையில், அவர்கள் அனைவரும் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்த நிலையில், முருகனின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த மேட்டுப்பட்டியைச் சேர்ந்த வீரபத்திரன் என்பவரை சாலையில் ஓட ஓட விரட்டி பழிக்கு பழியாக கொலை செய்த சம்பவம் திண்டுக்கல் மாநகரையே உலுக்கியுள்ளது.
இது குறித்து திண்டுக்கல் போலீசார் கூறுகையில், “ வீரபத்திரன், பாத்ரூம் முருகன் இருவருமே மேட்டுபட்டியை சேர்ந்தவர்கள். பாத்ரூம் முருகன் சந்தை, லாட்ஜ், பொதுகழிப்பிடங்களை ஏலம் எடுத்து நடத்தி வருகிறார். முருகன் அந்த ஊரின் துணை நாட்டமையாகவும், அவருடைய சித்தப்பா ஊர் நாட்டமையாகவும் இருக்கிறார்கள். ஊர் கோவிலான காளியம்மன் கோவில் தன்னுடைய பாட்டி கொடுத்த நிலத்தில் தான் உள்ளது என சொல்லி வந்துள்ளார் வீரபத்திரன். காளியம்மன் கோவில் திருவிழா கணக்கு வழக்கின் போது வீரபத்திரனுக்கும், முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது முருகன் தரப்பினர் வீரபத்திரனை கோவிலில் இருந்து வெளியேற்றியுள்ளனர். இதனால் கோபத்தில் இருந்துள்ளார் வீரபத்திரன்.

அதே சமயம் முருகன் நிறைய டெண்டர் எடுத்துள்ளதால் ஒவ்வொரு இடத்திலும் வசூலாகும் பணத்தை தன்னுடைய கார் டிரைவர் ஷேக் பரீத் சென்று பெற்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அதிகளவில் பணம் வருகிறது என தெரிந்து கொண்ட டிரைவர் ஷேக் பரீத் பணத்தை திருட முயற்சியில் இறங்கியுள்ளார். அதற்காக முருகனுக்கு எதிரியாக உள்ள வீரபத்திரனுடன் கூட்டு சேர்ந்து கொண்டு அவரை தீர்த்து கட்டி பணத்தை திருட திட்டம் தீட்டியுள்ளார். அதன்படியே கடந்த வருடம் ஜூலை 23 அன்று முருகன் தனியாக இருக்கும் இடத்தை அவருடைய டிரைவர் வீரபத்திரனுக்கு சொல்லி அவரை காரில் கடத்தி சென்று அவருடைய குடும்பத்திடம் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். உடனே அவருடைய குடும்பத்தினர் போலீசிடம் தகவல் தெரிவிக்கவே கோபால்பட்டி அருகே ஜோத்தம்பட்டியில் வைத்து ஓடும் காரிலேயே முருகனை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி சென்று விடுகின்றனர்

இந்த வழக்கில் கார் டிரைவர் ஷேக் பரீத், வீரபத்திரன் உட்பட மொத்தம் 8 பேர் குற்றவாளிகளாக சேர்க்கபட்டு அவர்களை கைது செய்து கடந்த ஒரு வருடமாக சிறையில் இருந்தனர். இவர்களில் வீரபத்திரன் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். வீரபத்திரன் வெளியே வந்தது தெரிந்ததும் முருகனின் மகன்கள் மற்றும் அண்ணன் ரங்கராஜூம் அவரை தீர்த்து கட்ட திட்டம் தீட்ட தொடங்கியுள்ளனர்.
அதிலும் முருகனை நடுரோட்டில் வைத்து கொன்றது போலவே வீரபத்திரனையும் நடுரோட்டில் வைத்து கொல்ல வேண்டுமென்பதற்காகவே அவர் வெளியே செல்லும் நேரம் வரை காத்திருந்துள்ளனர். எதிர்பார்தது போலவே கடந்த 6 ஆம் தேதி தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் - நத்தம் நெடுஞ்சாலை, நொச்சி ஓடைப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ரங்கராஜ் உட்பட 15 பேர் கொண்ட கும்பல் நடுரோட்டில் வைத்தே வீரபத்திரனை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதனால் அந்த இடத்திலேயே வீரபத்திரன் உயிரிழந்துள்ளார். இத்தாக்குதலின் போது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த அவரது மனைவி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பழிக்கு பழியாக தான் இந்த கொலை நடந்துள்ளது" என்றனர்.

இது குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் பேசிய போது, “முன்விரோதம் மற்றும் தகராறு காரணமாக இப்படுகொலை நடந்துள்ளது. தற்போது வரை மூர்த்தி, பாலு, குமரேசன், தோட்டத்து பகுதியை சேர்ந்த சிறுவன் , நவீன் குமார், ராஜசேகர்,லிட்டில் பிரின்டஸ்ராஜ், தேவரூபன் டொனால்டோ, ஆரோக்கிய ஜெட்லி, கதிர்வேல் ஆகிய 11 பேரை கைது செய்துள்ளோம். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பாத்ரூம் முருகனின் அண்ணன் ரங்கராஜன் மற்றும் அவருடைய மகன்கள் தலைமறைவாக உள்ளனர் அவர்களையும் கூடிய விரைவில் கைது செய்து விடுவோம்” என்றார்.
திண்டுக்கல்லில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படுமா?


















