செய்திகள் :

தேர்தல் ஆணையம் Vs காங்கிரஸ்: 'ஜனநாயகக் காவலா? அரசியல் லாபத்திற்கா?' - ஓர் அலசல்

post image

வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஒருபுறம் நீட் தேர்வு விவகாரத்தில், தொடர் போராட்டம் மூலம் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதானை ராஜினாமா செய்ய வைத்த கரப்பான் பூச்சி கட்சி அமைப்பும், இன்னொருபுறம் SIR நடவடிக்கை தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து எதிர்த்து வரும் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸும் பா.ஜ.க அரசுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றன.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி அக்டோபர் 8-ம் தேதியை 'கருப்பு தினம்' என அறிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தியது. போராட்டத்தின்போது ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

அப்போது நடைபெற்ற தள்ளுமுள்ளு, சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியது மற்றும் ராகுல் காந்தியின் நகர்வுகள் தொடர்பான நிகழ்வுகள் சமூக வலைத்தளங்களில் விவாதமாகின.

பா.ஜ.க ஆட்சியில் ஜனநாயக நிறுவனங்கள் தாக்குதலுக்கு உள்ளாவதாகக் குற்றம்சாட்டி, இப்போராட்டம் அரசியல் அரங்கிலும், மக்கள் மன்றத்திலும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

அதே நேரம், இன்னும் சில மாதங்களில் பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

எனவே, இந்தப் போராட்டத்துக்குப் பின்னணியில் காங்கிரஸின் அரசியல் குறித்துப் பேச மூத்த ஊடகவியலாளர் அய்யநாதனைத் தொடர்புகொண்டோம்.

அவர், ``இப்போராட்டம் என்பது வெறும் அரசியல் லாப நஷ்டங்களுக்கானது அல்ல. மாறாக, மக்களின் அடிப்படை வாக்குரிமை பறிக்கப்படுவதற்கு எதிரான மக்களின் கோப வெளிப்பாடாகும். EVM இயந்திரங்களுக்குப் பிறகு நாட்டில் நடக்கும் மிகப்பெரிய முறைகேடாக இந்த எஸ்.ஐ.ஆர் பார்க்கப்படுகிறது.

அய்யநாதன்

இதில் சாதாரண மற்றும் எளிய மக்களின் பெயர்கள் திட்டமிட்டு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுகின்றன. உதாரணமாக, தமிழ்நாட்டிலேயே சுமார் 74 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் தடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு உள்ளது. ஒருவேளை இவர்கள் வாக்களித்திருந்தால் இப்போதிக்கும் ஆட்சியில் மாற்றமே கூட நிகழ்ந்திருக்கலாம்.

எனவே, இந்நிலை மாற்றப்பட்டு, முறைகேடுகளுக்குக் காரணமான தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும், எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் மற்றும் வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதே முதன்மையான கோரிக்கையாகும்.

பா.ஜ.க தோல்வியடைந்த மாநிலங்களைச் சுட்டிக்காட்டி 'முறைகேடு நடக்கவில்லை' எனப் பா.ஜ.க தலைவர்கள் வைக்கும் வாதம் ஏற்புடையதல்ல. தமிழ்நாட்டில் பா.ஜ.க-வுக்கு வெறும் 5% வாக்குகள் மட்டுமே உள்ளன. அதை வைத்துக்கொண்டு அவர்கள் ஆட்சியைப் பிடித்தார்கள் என்றால் மாட்டிக்கொள்வார்கள்.

கேரளாவிலும் அவர்களுக்கு அதிகபட்சமாக 14% வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. அதை வைத்துக்கொண்டு அவர்கள் ஆட்சியைப் பிடித்தால் யாராவது நம்புவார்களா?
ஆனால், கர்நாடகாவில் பா.ஜ.க-விற்கு 20% முதல் 25% வாக்குகள் உள்ளன. அதனால் அங்கு ஒரு 10% முறைகேடு செய்து அதிகாரத்திற்கு வந்துவிடலாம். அதனால்தான் இங்கு விஜய்யை ஜெயிக்க வைத்திருக்கிறார்கள்.

மோடி

தேர்தல் ஆணையம் 2013-ல் நீதிமன்றத்தில் தெரிவித்தபடி, வாக்கு எண்ணிக்கையின்போது, VVPAT சீட்டுகளை முழுமையாக எண்ணி ஒப்பிட்டு ஏன் முடிவுகளை அறிவிப்பதில்லை என்ற கேள்விக்கு தேர்தல் ஆணையத்திடம் பதில் இருக்கிறதா? EVM முறையைக் காங்கிரஸ் கொண்டு வந்திருந்தாலும், அது இன்று தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதே இங்கு முக்கியமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சி இப்போராட்டத்தில் ஈடுபடுவது, அவர்களுக்கு என்ன அரசியல் பலனைத் தரும் என்ற கேள்விக்கு அப்பாற்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராகப் பல்வேறு அமைப்புகளும், சிவில் சமூகத்தினரும் பல மாதங்களாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். மக்களுக்கான ஜனநாயக உரிமை பறிக்கப்படும்போது, அதற்கு எதிராகக் குரல் கொடுப்பதும், களத்தில் இறங்குவதும் ஒரு முதன்மை எதிர்க்கட்சியின் கடமையாகும்.

எனவே, அரசியல் லாபத்தைக் கணக்கிடாமல், ஜனநாயகத்தையும் மக்களின் வாக்குரிமையையும் மீட்டெடுப்பதே இப்போராட்டத்தின் முதன்மை நோக்கமாக இருக்கும்" என்றார்.

கவிதா முரளிதரன்
கவிதா முரளிதரன்

இந்தப் போராட்டம் காங்கிரஸ் அணுகும் விதம் குறித்து நம்மிடம் பேசிய ஊடகவியலாளர் கவிதா முரளிதரன், ``'வாக்குத் திருட்டு' (Vote Chori) என்ற பிரசாரத்தின் மூலம் SIR விவகாரத்தை ராகுல் காந்தி திடீரென கையில் எடுக்கவில்லை. தேர்தல் முறைகேடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் குளறுபடிகள் குறித்து அவர் நீண்டகாலமாகவே தெளிவானக் கருத்துகளைப் பேசி வருகிறார்;

தற்போதையச் சூழலில் அதற்கு பெரிய அளவிலான அரசியல் வேகம் கிடைத்திருக்கிறது. நீட் விவகாரத்தில் (CJP) அமைப்பின் போராட்டங்கள் கடந்த காலங்களில் தனியாக நடந்தது. அப்போதே காங்கிரஸ் களத்தில் தீவிரமாக இறங்கியிருக்க வேண்டும்.

ஆனால், இப்போது, இந்த முறைகேடு விவகாரத்தில் ராகுல் காந்தியும் 'இந்தியா' கூட்டணியும் முன்னின்று போராடுவது களத்தின் தீவிரத்தைக் காட்டுகிறது. காங்கிரஸ் கட்சி தனது மென்மையான எதிர்க்கட்சி என்ற பிம்பத்திலிருந்து வெளியேறி, வீரியமானப் போராட்டக் களத்திற்கு வந்திருப்பது ஒரு முக்கிய அரசியல் நகர்வாகும்.

வரவிருக்கும் பஞ்சாப், மணிப்பூர், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலத் தேர்தல்களுக்கு முன் இத்தகைய போராட்டங்களை முன்னெடுப்பது எதிர்க்கட்சிகளுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ஏனெனில், தேர்தலில் நடப்பதாகக் கூறப்படும் திட்டமிடப்பட்ட குளறுபடிகள் ஜனநாயகத்தின் அஸ்திவாரத்தையே பாதிக்கும் என்பதால், அனைத்துப் படைகளும் இணைந்து அதை எதிர்ப்பது கட்டாயமாகிறது. இதை 'பாரத் ஜோடோ யாத்திரை' போன்ற உணர்வுப்பூர்வமான அல்லது தனிநபர் சார்ந்த அரசியல் நிகழ்வோடு ஒப்பிட முடியாது.

பாரத் ஜோடோ யாத்திரை ராகுல் காந்திக்கு மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவும், மக்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்தவும் உதவியது. ஆனால், தற்போதைய போராட்டம் நேரடியாகத் தேர்தல் அமைப்பின் நம்பகத்தன்மை சார்ந்தப் போராட்டமாகும்.

இப்போராட்டம் மூலம் தன் ஆதிக்கத்தைப் பலப்படுத்தவும், மாநிலக் கட்சிகளின் மீது காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்துவதற்கான முயற்சியாகப் பார்க்க முடியாது. மாறாக, சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கொள்கை எதிரியான பா.ஜ.க-வின் சித்தாந்தத்தை எதிர்ப்பதில் தயக்கம் காட்டும் அல்லது அமைதி காக்கும் தவெக போன்ற சில மாநிலக் கட்சிகளுக்கு இது ஒரு அரசியல் அழுத்தத்தை உருவாக்கும்.

இதுபோன்ற போராட்டங்களைக் கடந்து, ராகுல் காந்தி காங்கிரஸுக்குள் இருக்கும் பல்வேறு சித்தாந்த முரண்பாடுகளைக் களைய வேண்டும். அதுதான் காங்கிரஸுக்கு வரும் தேர்தல்களில் பெரியளவில் கைகொடுக்கும்" என்றார்.

Delhi Protest: அபிஜித் தீப்கேவின் பாட்டி காலமாகிவிட்டாரா? டெல்லி காவல்துறை சொல்வது என்ன?

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் மாணவர் அமைப்புகள் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அழைப்ப... மேலும் பார்க்க

டெல்லி: "எங்க கூட்டிட்டு போறாங்கன்னு தெரியல" - போலீஸ் ஜீப்பில் இருந்தபடி வீடியோ வெளியிட்ட CPM MP

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தலைவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி ஜான் பிரிட்டாஸ் , கேரள முன்ன... மேலும் பார்க்க

'வறட்சி, நிதி பற்றாக்குறை' - மாணவர்களுக்கு சம்பளப் பணத்தில் மதிய உணவளிக்கும் மகாராஷ்டிரா ஆசிரியர்கள்

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு 75 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளை மாநில அரசு வறட்சி பகுதியாக அறிவித்து இருக்கிறது. வறட்சி பாதித்த பகுதிகளை மத்தியக் குழு ஆய்வு செய்து வருகிறது. கிராமங்களில் மாணவர்கள் மதிய... மேலும் பார்க்க

"கடந்த திமுக ஆட்சியில் ஸ்டாலின் பாஜகவை எதிர்த்து பேசியிருக்கிறாரா?" - அமைச்சர் நிர்மல்குமார்

மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் போது, "கடந்த 5 வருடங்களில் ஸ்டாலினும், உதயநிதியும் ஒரு நாளாவது பாஜகவையோ இல்லை மோடியை எதிர்த்தோ பேசியிருக்கிறார்களா? அவர்கள் எப்போது ப... மேலும் பார்க்க

மதுராந்தகம்: 'தவெகவின் இடைத்தேர்தல் வெற்றிக்கு உதவிய பாமக?' - களத்தில் என்ன நடந்தது?

இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் என இரண்டு தொகுதிகளிலும் தவெக வென்றிருக்கிறது. இதில் மதுராந்தகம் தொகுதியை தவெக வெல்ல பாமகவின் நிலைப்பாடு ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. மதுராந்தகத்தில் த... மேலும் பார்க்க

அதிமுக: இடைத்தேர்தல் தோல்வி; உச்சத்தில் உட்கட்சி பூசல்–எஸ்.பி. வேலுமணியின் அடுத்த மூவ் என்ன?

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் த.வெ.க வெற்றி பெற்றது. கடந்த பொதுத்தேர்தலில் இந்த இரண்டு தொகுதிகளிலும் வென்றிருந்த அ.தி.மு.க, இந்த தேர்தலில் இந்த தொகுதிகளை இழந்தது மட்ட... மேலும் பார்க்க