செய்திகள் :

"அண்ணாமலை விமர்சனம் செய்தால், பதிலடி கொடுப்போம்!" - வரிந்துகட்டுகிறார் வினோஜ் பி.செல்வம்

post image

குதிரைப் பேரம் குற்றச்சாட்டில் ஆரம்பித்து, இந்து சமய அறநிலையத்துறை இடம் விவகாரம் வரையிலாக த.வெ.க அரசுக்கு எதிராக தொடர் கேள்விகளை எழுப்பிவருகிறார் பா.ஜ.க-வின் மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம். அவரிடம் நமது கேள்விகளை முன்வைத்தோம்...

"பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில், த.வெ.க அரசு மீதான உங்களது குற்றச்சாட்டுக்குப் பின்னணி என்ன?"

"பழனி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புமிக்க அந்த இடத்தைப் பத்திரப் பதிவு செய்வதற்கான முயற்சி கடந்த மார்ச் 27-ம் தேதியே எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் அப்போது அந்த முயற்சி தோற்கடிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில், மே 10-ம் தேதி த.வெ.க அரசு பொறுப்பேற்றுவிட்ட சூழலில், சம்பந்தப்பட்ட இடத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்திருக்கிறது த.வெ.க அரசு.

குறிப்பாக, பழனிக்கு அருகிலுள்ள சார்பதிவாளர்களை எல்லாம் விட்டுவிட்டு பல கி.மீ தூரத்திலுள்ள ஜஸ்டின் மணிகண்டன் என்ற சார்பதிவாளரை பொறுப்பாக நியமித்து, பத்திரப் பதிவு செய்திருக்கிறார்கள் என்றால், இதன் பின்னணியில் நிச்சயம் அதிகார தலையீடு உள்ளது. எனவே, முறையாக விசாரணை செய்து குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

பழனி முருகன் கோயில்

தமிழ்நாடு முழுக்க உள்ள கோயில்களுக்கும் பக்தர்களுக்கு செய்யவேண்டிய விஷயங்கள் ஆயிரம் இருக்கும்போது, அதையெல்லாம் செய்யாமல் இருக்கிற கோயில் சொத்துகளையும் தாரை வார்க்கிற விஷயங்களைத்தான் இந்த இரண்டு மாத ஆட்சிக்குள்ளாகவே செய்ய ஆரம்பித்துவிட்டது த.வெ.க அரசு! ஆக, த.வெ.க அரசு, திராவிட மாடல் 2.0 ஆட்சியாகத்தான் நடந்துகொண்டிருக்கிறது!"

"த.வெ.க அரசு, திராவிட மாடலின் தொடர்ச்சி என்று எந்தவகையில் குறிப்பிடுகிறீர்கள்?"

"கடந்தகால தி.மு.க ஆட்சியில் போலீஸ் விசாரணையில் கொடூரமாக கொல்லப்பட்டார் சிவகங்கையைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார். பாதுகாப்பு இல்லாத அன்றைய சூழலில்கூட அஜித்குமாரின் வீட்டுக்கு, நேரடியாக சென்றவர் இன்றைய முதல்வர் விஜய். ஆனால், இன்றைக்கு அவரது ஆட்சியில் சபரிநாதன் என்ற இளைஞர் காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டு மரணமடைந்திருக்கிறார். ஆனாலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை இதுவரை முதல்வர் நேரில் சென்று சந்திக்கவில்லை; ஆறுதலும் கூறவில்லை. கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை கொடுத்து சமாளித்ததுபோல், அமைச்சர்களை அனுப்பி நிவாரணம் கொடுக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

சபரிநாதன் மரணம் மட்டுமல்லாமல், காவல்துறையின் அராஜகங்கள் குறித்து இதுபோன்ற செய்திகள் தொடர்ந்து வெளிவருகின்றன. குறிப்பாக தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளோடு முதல்வர் விஜய் மீட்டிங் நடத்தியதற்குப் பிறகுதான் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிகிறது. ஆக, கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வரே கோரினாரா... என்ற கேள்வியும் எழுகிறது."

"த.வெ.க எம்.எல்.ஏ-க்களிடம் குதிரைப் பேரம் நடத்தியதாக கைதாகியுள்ளவர்களின் பின்னணியில் தி.மு.க-வினர் இருப்பதாக காவல்துறை தகவல் இருக்கும்போது, 'இந்தக் கைது நடவடிக்கையே ஒரு நாடகம்' என எப்படி சொல்கிறீர்கள்?"

"முதல்வராக பதவியேற்ற விஜய், எதிர்க்கட்சித் தலைவர்களை வீடு தேடிச்சென்று சந்தித்தார். அதில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமையை மட்டும் மிகக் கவனமாக தவிர்த்துவிட்டு, அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து செயல்பட்டுவந்த எம்.எல்.ஏ-க்களை மட்டும் புதிய சோபாவுடன் நேரில் சென்று சந்திக்கிறார் முதல்வர் விஜய். இதற்கு அர்த்தம் என்ன? ஆக தமிழ்நாட்டில் குதிரைப்பேரத்துக்கு முதலில் வித்திட்டவரே முதல்வர் விஜய்தான்!

டி.டி.வி. தினகரன்

அதுமட்டுமல்ல... அ.ம.மு.க சார்பில் டி.டி.வி தினகரனும் அவரது கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-வும் சேர்ந்தே குதிரைப்பேரம் குறித்து புகார் அளிக்கிறார்கள். வைகோ, இதுகுறித்து பொதுவெளியிலேயே சொன்னார். பதவியை ராஜினாமா செய்துவிட்டு வாருங்கள். ஜெயிக்க வைக்கிறோம்' என த.வெ.க தரப்பில் அணுகியதாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் கூறியிருந்தார். ஆக, இவ்வளவு வெளிப்படையான குதிரைப்பேர ஊழல் குறித்து சி.பி.ஐ விசாரித்தால்தான் உண்மை வெளிவரும்."

"எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளை தங்கள் கட்சிக்கு இழுப்பது, கட்சிகளையே உடைப்பது என தேசிய அரசியலில் பா.ஜ.க செய்துவருவதைத்தான் தமிழக அரசியலில் த.வெ.க செய்கிறது என்கிறார்களே?"

"எந்தவொரு கட்சி எம்.எல்.ஏ-வையும் குதிரைப்பேரம் செய்து பா.ஜ.க கட்சியில் சேர்த்துக்கொள்ளவில்லை. மகாராஷ்டிராவில்கூட சிவசேனா தலைமையின் குடும்ப ஆதிக்கத்துக்கு எதிராக சிவசேனாவிலிருந்த ஷிண்டேதான் எதிர்ப்பு தெரிவித்தார். அவரது தலைமையின் கீழ் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் திரண்டனர். அப்போதும்கூட ஷிண்டேவைவிட அதிக எண்ணிக்கையில் இருந்த பா.ஜ.க., யாரையும் விலை கொடுத்து வாங்கவில்லை; 'நாங்கள்தான் ஆட்சி அமைப்போம்' என்றும் கூறவில்லை. மாறாக ஷிண்டே ஆட்சியமைக்க ஆதரவுதான் அளித்தார்கள்.

விஜய், ஸ்டாலின்

இன்றைக்கு மேற்கு வங்கத்திலும்கூட மம்தா பானர்ஜியின் நடவடிக்கைகள் பிடிக்காமல், திரிணாமுல் கட்சியைச் சேர்ந்தவர்களே தனி அணியாகப் பிரிந்துவந்து புதிய கட்சியில் இணைந்து மத்திய அரசுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். மற்றபடி 'நீங்கள் ராஜினாமா செய்துவிட்டு வாருங்கள்: நாங்கள் ஜெயிக்க வைக்கிறோம்' என்றெல்லாம் சொல்லி யாரையும் நாங்கள் குதிரைப்பேரம் செய்யவில்லை!"

"தேர்தலில் நின்று வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் தேர்தலை சந்திப்பதை எப்படி குதிரைப்பேரம் என்று சொல்ல முடியும்?"

"இன்றைக்கு புதிதாக த.வெ.க-வுக்கு ஆதரவளிப்பவர்கள் எல்லாம், 'த.வெ.க-வினர் எங்களை அப்ரோச் செய்தனர், முதல்வரே கேட்டுக்கொண்டார்' என்றெல்லாம் பொதுவெளியிலேயே சொன்னார்கள்தானே... இதுதான் குதிரைப்பேரம். பணம், பதவி கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து, ஒருவரது பதவியையே ராஜினாமா செய்யும்படித் தூண்டுவதென்பது, குதிரைப்பேரம் என்ற சட்டத்துக்குப் புறம்பான காரியம்தானே?"

"கடந்த தி.மு.க ஆட்சியின்போது திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கடும் எதிர்வினையாற்றிய தமிழக பா.ஜ.க., த.வெ.க ஆட்சியில் நிலவும் பிரச்னைகளுக்கு எதிராக கனத்த அமைதி காத்துவருவதன் ரகசியம் என்ன?"

"தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைக் கண்டித்து முதல் போராட்டத்தை மாநிலம் முழுக்க நடத்திய கட்சி பா.ஜ.க. இதுதவிர ஒவ்வொரு பிரச்னையின்போதும் எங்கள் எதிர்ப்புகளை வலுவாக பதிவு செய்துவருகிறோம். இனிவரும் நாட்களிலும் மக்கள் பிரச்னைகளுக்காக த.வெ.க அரசை எதிர்த்து மற்ற கட்சிகளைவிடவும் காத்திரமான போராட்டங்களை முன்னெடுப்போம்."

"புதிதாக ஆட்சி அமைத்தவர்களுக்கு 6 மாத காலம் அவகாசம் கொடுப்போம். அதன்பிறகே விமர்சிப்போம் என்றிருந்தீர்களே?"

"சொன்னோம்தான். அதேசமயம், காவல் மரணம், பாலியல் படுகொலை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சார்ந்த விஷயங்களில் அரசின் தவறான செயல்பாடுகளை உடனடியாகக் கண்டித்துத்தான் ஆகவேண்டும். நிர்வாகத்தைக் கையாள்வதில் வேண்டுமானால் புதிய அரசுக்கு கற்றுக்கொள்ள கால அவகாசம் கொடுக்கலாம். 'கோயில் சொத்தை எப்படி கொள்ளையடிக்கலாம்' என்ற நிர்வாக ரீதியிலான தவறான பாடத்தை மட்டும் ஆட்சிக்கு வந்த இரண்டே மாதங்களில் கற்றுத் தேர்ந்துவிட்டார்கள் த.வெ.க-வினர் எனும்போது, நாம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகிறது!"

"50 ஆண்டுகளுக்குப் பிறகாவது காங்கிரஸ் கட்சி, தமிழக அரசியலில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிட்டது. ஆனால், பா.ஜ.க எக்காலத்திலும் வராது என்ற தொலை நோக்குப் பார்வையில்தான் அண்ணாமலை அக்கட்சியிலிருந்து விலகிவிட்டாரோ?"

"அரசியல் என்பது, ஆட்சி அதிகாரத்தைத் தாண்டி கொள்கை, கோட்பாடுகளோடு செயல்பட வேண்டிய விஷயம். பா.ஜ.க-வினரைப் பொருத்தவரை தாங்கள் சார்ந்த சித்தாந்தத்துக்காக 40, 50 வருடங்களானாலும் எந்தவித அதிகாரமும் இல்லாமல் கட்சியில் பயணிப்பவர்கள். மாறாக, பவர் இருந்தால்தான் கட்சியில் இருப்பேன்; இல்லையென்றால் பிய்த்துக்கொண்டு ஓடிவிடுவேன் என்பதெல்லாம் பா.ஜ.க-வில் கிடையாது. ஆக, ஐடியாலஜி பிணைப்பு என்பது இங்கே மிக முக்கியம்.

வினோஜ் பி.செல்வம்

ஆனால், காங்கிரஸ் கட்சி அப்படியல்ல... அங்கே எந்தவொரு நிலையான ஐடியாலஜியும் கிடையாது. அவர்களால் தமிழ்நாட்டில் தனித்து நின்று தேர்தலை சந்திக்கவும் முடியாது. பதவிக்காக யாரோடு வேண்டுமானாலும் கூட்டணியும் அமைத்துக்கொள்வார்கள். அதனால்தான் அதிகாரத்துக்காக யாருடைய முதுகின்மீதாவது ஏறி, குதிரை சவாரி செய்து பதவி சுகம் அனுபவிக்கிறார்கள். தி.மு.க தயவில் 5 எம்.எல்.ஏ-க்களைப் பெற்றவர்கள், இன்றைக்கு த.வெ.க தயவில் 2 அமைச்சர்களைப் பெற்றிருக்கிறார்கள்.

அண்ணாமலை
அண்ணாமலை

ஆக, இந்த எண்ணிக்கையோ இந்த அரசியலோ எங்களுக்கு முக்கியமில்லை. மக்கள் மத்தியில் உண்மையான செல்வாக்கு யாரிடத்தில் இருக்கிறது என்பது மட்டும்தான் எங்களுக்கு முக்கியம். அதனால்தான், கடந்த 2024 தேர்தலிலேயே தமிழ்நாட்டில் பா.ஜ.க தனித்து நின்று பெரும் எண்ணிக்கையிலான வாக்கு சதவிகிதத்தை எட்டியுள்ளது."

"காங்கிரஸுக்கு தமிழ்நாட்டில் செல்வாக்கு இல்லை என்கிறீர்கள். ஆனால், 28 தொகுதிகளில் போட்டியிட்டு 5-ல் வெற்றி பெற்றிருக்கிறது காங்கிரஸ். பா.ஜ.க-வோ 27-ல் போட்டியிட்டு ஒரு சீட்டில்தானே வென்றிருக்கிறீர்கள்?"

"இதற்கு கூட்டணிக் கணக்கு, சீட் தேர்வு - பங்கீடு, அன்றைய அரசியல் சூழல் என பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. எனவே, தோல்வி ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து நாங்கள் பரிசீலித்துக்கொண்டுதான் இருக்கிறோம். அதேசமயம் வரக்கூடிய 2029 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைவதற்கு உறுதுணையாக, தமிழகத்திலிருந்து அதிகப்படியான எம்.பி-க்களை தேர்ந்தெடுத்து அனுப்புவதற்குத் தேவையான பணிகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்."

வினோஜ் பி.செல்வம்
"அண்ணாமலை ஆரம்பித்திருக்கும் புதிய கட்சியின் பின்னணியில் பா.ஜ.க இருக்கிறது என்ற சந்தேகத்தை நிரூபிப்பதுபோல், இருதரப்புமே ஒருவரையொருவர் விமர்சிக்காமல் இருக்கிறீர்களே?"

"அண்ணாமலை இப்போது ஆரம்பித்திருக்கக்கூடியது அரசியல் கட்சியே கிடையாது. அது ஓர் இயக்கமாகத்தான் இருக்கிறது. தி.மு.க., த.வெ.க., பா.ஜ.க என யாரையும் அவர் இதுவரை எதிர்க்கவும் இல்லை எனும்போது, அவரது அரசியல் நிலைப்பாடு என்னவென்பதும் தெளிவாகத் தெரியவில்லை. அவரது கொள்கைகள் என்னவென்பதையும் இன்னும் அறிவிக்கவில்லை. அதேசமயம், 'இந்துக்கள் தங்கள் மதத்தை வீட்டிலேயே விட்டுவிட்டு வரவேண்டும்' என்கிறார். எல்லா மதத்தினரும் இதுபோல் செயல்படவேண்டும் என அவர் சொல்லியிருந்தால், கேள்வியில்லை. இந்துக்களுக்கு மட்டும் ஏன் சொல்கிறார் என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். வருங்காலத்தில் பா.ஜ.க-வுக்கு எதிராக அவர் விமர்சனம் செய்தால், நிச்சயம் நாங்கள் பதிலடி கொடுப்போம்!"

`நீங்களாகவே பதவி விலகிடுங்க' ; கலகத்துக்கு காத்திருக்கும் திமுக; போர்மேகத்தில் அதிமுக! | கழுகார்

போர்மேகத்தில் விழுப்புரம் அ.தி.மு.க!விழுப்புரம் அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக பசுபதியை நியமித்ததிலிருந்து, கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள். சண்முகத்தின் ஆதரவாளர்களை எட... மேலும் பார்க்க

``அந்த பெண்ணின் பின்னணி சந்தேகத்துக்குரியது; என்னை சிக்கவைக்க சதி நடக்கிறது’’ - தவெக மா.செ விளக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு மாசாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் அவர் (வயது 34). இவர், முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அவரின் மனுவில், ``கடந்த 10... மேலும் பார்க்க

NEET: "ஜனநாயகன் எங்கே போனார்?"- தமிழக மாணவர்கள் கைதுக்கு அதிமுக கண்டனம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர் அமைப்பின... மேலும் பார்க்க

NEET: "முதல்வர் திரைப்படங்களில் மட்டுமே ஜனநாயகவாதியா?" - தமிழக மாணவர்கள் கைதுக்கு சீமான் கண்டனம்

தமிழகத்தில் வீதிக்கு இறங்கிப் போராட முயலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை காவல் துறையைக் கொண்டு தவெக அரசு ஒடுக்குவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் த... மேலும் பார்க்க

"சி.விஜயபாஸ்கர் - வியக்கிறேன்; வைகோ - பேசுவதற்கு ஒன்றுமில்லை!" - நாஞ்சில் சம்பத் 'நச்'

அதிரடி பேச்சுக்குச் சொந்தக்காரரான த.வெ.க பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், 'விஜய் காலடியில் வீழ்ந்து கிடக்கிறார் வைகோ!' எனப் பேசி பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார். இந்தச் சூழலில், த.வெ.க அரசு மீதான எதி... மேலும் பார்க்க

”தவெக-வில் சீனியர்களுக்கு மரியாதை இல்லை என நான் கூறவே இல்லை”- கடம்பூர் ராஜூ விளக்கம்!

முந்தைய சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்த நிலையில், அக்கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எ.ல்ஏ-க்கள் சிலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் 3 முற... மேலும் பார்க்க