``தமிழ் மீதான தவறான விமர்சனத்திற்கு மன்னிப்பு கோர வேண்டும்" - அமைச்சர் மரிய வில்...
அதிகரிக்கும் புற்றுநோய் தாக்கம்... சிகிச்சை செலவுகளைச் சமாளிக்க மருத்துவக் காப்பீடு உதவுமா?
புற்றுநோய் என்பது தனிப்பட்ட நபரை மட்டும் பாதிப்பதல்ல. அவரது குடும்பத்தின் ஒட்டுமொத்த வாழ்நாள் சேமிப்பையே கரைக்கும் நிதியியல் சவாலாகவும் மாறி அச்சுறுத்தும். இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகளும், சிகிச்சைகளுக்கான செலவுகளும் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் சூழலில், சரியான மருத்துவக் காப்பீடு (Health Insurance) வைத்திருப்பது என்பது ஒவ்வொரு குடும்பத்துக்கும் அதி முக்கியமான நிதி பாதுகாப்பு (Financial Protection) நடவடிக்கையும்கூட.
அதிகரிக்கும் புற்றுநோய் தாக்கம்!
வாழ்க்கைமுறை மாற்றங்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகள், புகையிலை பயன்பாடு, பரம்பரை காரணிகள் போன்றவற்றால் இந்தியர்களிடையே புற்றுநோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. நோய் முற்றிய நிலையில் கண்டறியப்பட்டுக் கொண்டிருந்த பல புற்றுநோய்கள், தற்போது ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படுகின்றன. இது சிகிச்சையின் வெற்றி வாய்ப்பை அதிகரித் தாலும், சிகிச்சைக்கான செலவுகளையும் சேர்த்தே அதிகரிக்கிறது.
இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருக்கும் புற்றுநோய் பாதிப்பு விகிதம் கிட்டத்தட்ட சமமாகவே உள்ளது. எனினும், புகையிலை மற்றும் மது அருந்தும் பழக்கங்களால், ஆண்களுக்கு நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோய் பாதிப்புகள் அதிகம் காணப்படுகின்றன. பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் (Cervical Cancer) மற்றும் கர்ப்பப்பைப் புற்றுநோய் ஆகியவை அதிகம் ஏற்படுகின்றன.

நவீன சிகிச்சைகள் – அதிக நம்பிக்கை, அதிக செலவு!
கடந்த சில ஆண்டுகளில் புற்றுநோய் சிகிச்சைத் துறையில் மிகப்பெரிய முன்னேற் றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது பயன் படுத்தப்படும் சில முக்கிய சிகிச்சை முறைகள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப் பட்டுள்ளன.
இந்தச் சிகிச்சைகளில் பல இன்னும் காப்புரிமை பாதுகாப்பில் இருப்பதால், குறைந்த விலை மாற்று மருந்துகள் சந்தையில் அதிகம் கிடைப்பதில்லை. இதனால் சிகிச்சை செலவு அதிகரிக்கிறது.
புற்றுநோய் சிகிச்சை... எவ்வளவு செலவாகும்?
புற்றுநோயின் வகை, நிலை, மருத்துவமனை, மருத்துவர் மற்றும் பயன்படுத்தப்படும் மருந்து களைப் பொறுத்து செலவு மாறுபடும்.

ஏன் அதிக காப்பீட்டுத் தொகை தேவை?
பலர் ரூ.5 லட்சம் அல்லது ரூ.10 லட்சம் மருத்துவக் காப்பீடு போதுமானது என்று நினைக்கிறார்கள். ஆனால், புற்றுநோய் போன்ற தீவிர நோய்களுக்கு இது போதுமானதாக இருக்காது.
இன்றைய மருத்துவச் செலவுகளைக் கருத்தில் கொண்டால், குறைந்தபட்சம் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை காப்பீட்டுத் தொகை வைத்திருப்பதுதான் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இளம் வயதில் காப்பீடு எடுத்தால், கூடுதல் காப்பீட்டுத் தொகைக்கான ஆண்டு பிரீமியம் வித்தியாசம் பெரிதாக இருக்காது.
30 வயது கணவர், மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ள குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அடிப்படை மருத்துவக் காப்பீடு மற்றும் ரூ.90 லட்சம் சூப்பர் டாப்-அப் பாலிசி ஆகிய வற்றுக்கான ஆண்டு பிரீமியம் தோராயமாக ரூ.20,000 முதல் ரூ.35,000 வரை இருக்கும்


மருத்துவக் காப்பீடு... கவனிக்க வேண்டியவை!
புற்றுநோய் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காப்பீடு வாங்கும்போது பின்வரும் அம்சங்களைச் சரிபார்க்க வேண்டும்.
நவீன சிகிச்சைகளுக்கான பாதுகாப்பு!
இலக்கு சிகிச்சை, நோய் எதிர்ப்பு சிகிச்சை, செல் சிகிச்சை போன்ற புதிய மருத்துவ முறைகளுக்கான செலவுகள் காப்பீட்டில் உள்ளனவா என்பதை உறுதிபடுத்த வேண்டும்.
காப்பீட்டுத் தொகை மீண்டும் கிடைக்கும் வசதி!
ஒரு முறை காப்பீட்டுத் தொகை பயன் படுத்தப்பட்ட பிறகும், மீண்டும் அதே அளவு பாதுகாப்பு வழங்கும் வசதி இருப்பது சிறந்தது.
நெட்வொர்க் மருத்துவமனைகள்!
புற்றுநோய் சிகிச்சையில் சிறப்பு பெற்ற மருத்துவமனைகள், காப்பீட்டு நிறுவனத்தின் நெட்வொர்க்கில் உள்ளனவா என்பதைப் பார்க்க வேண்டும்.
காத்திருப்பு காலம்!
சில நோய்களுக்கு ஆரம்ப ஆண்டுகளில் காப்பீட்டுப் பாதுகாப்பு இருக்காது. எனவே, காத்திருப்பு கால விதிமுறைகளை கவனமாகப் படிக்க வேண்டும்.
சிறப்பு காப்பீடு தேவையா?
சாதாரண மருத்துவக் காப்பீடு, மருத்துவச் செலவுகளை ஈடுசெய்யும். இதில், செலவிட்ட தொகை, கவரேஜுக்குள் கிடைக்கும்.
புற்றுநோய் பாதுகாப்பு வழங்கும் தனிப்பட்ட திட்டங்களும் சந்தையில் உள்ளன. இவை நோய் கண்டறியப்பட்ட உடனே ஒருமுறை தொகையை வழங்குகின்றன. இவை புற்றுநோய்க்கு மட்டும் கவரேஜ் அளிக்கும். இரண்டையும் இணைத்தால், முழுமையான பாதுகாப்பு கிடைக்கும். ஆனால், பிரீமியம் சற்று அதிகமாகும்.
குடும்ப நிதி திட்டமிடலில் மருத்துவக் காப்பீட்டின் பங்களிப்பு!
புற்றுநோய் போன்ற தீவிர நோய்கள் ஏற்பட்டால், பல குடும்பங்கள் சேமிப்புகளை முழுமையாகக் கரைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றன. சிலர் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள். இதனால், குழந்தைகளின் உயர்கல்வி, கல்யாணம், ஓய்வூதியத் திட்டம், சொந்த வீடு போன்ற நீண்ட கால நிதி இலக்குகள் பாதிக்கப்படுகின்றன.போதுமான மருத்துவக் காப்பீடு இருந்தால், சிகிச்சை பெறும் நேரத்தில் நிதி அழுத்தம் குறையும். நோயாளியும் குடும்பத்தினரும் சிகிச்சையில் கவனம் செலுத்த முடியும்.
புற்றுநோய் சிகிச்சைத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் நோயாளிகளுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கின்றன. ஆனால், அந்த முன்னேற்றங்களுடன் சிகிச்சை செலவுகளும் வேகமாக உயர்ந்து வருகின்றன. எனவே, குறைந்த காப்பீட்டுத் தொகையுடன் திருப்தி அடைவதைவிட, போதுமான அளவிலான மருத்துவக் காப்பீடு மற்றும் தேவை எனில் புற்றுநோய் சிறப்பு பாதுகாப்புத் திட்டத்தையும் இணைத்து வைத்திருப்பது புத்திசாலித்தனமான நிதி முடிவாகும். நோய் எப்போது வரும் என்பதை யாரும் கணிக்க முடியாது. ஆனால், அதனால் ஏற்படும் நிதி பாதிப்பை முன்கூட்டியே கட்டுப்படுத்த முடியும். அதற்கான மிகச் சிறந்த கருவி போதுமான மருத்துவக் காப்பீடுதான்.














