செய்திகள் :

அமித் ஷாவுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு; அவசரக் கூட்டத்திற்கு அஜித்பவார் மனைவி அழைப்பு

post image

மகாராஷ்டிராவில் முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியை மறைந்த முன்னாள் துணை முதல்வர் அஜித்பவார் இரண்டாக உடைத்தார்.

2023ம் ஆண்டு நடந்த இந்தப் பிரிவினைக்குப் பிறகு அஜித்பவார் கட்டுப்பாட்டில் முழு கட்சியும் சென்றது. மூத்த தலைவர்கள் அனைவரும் அஜித்பவாரிடம் சென்றுவிட்டனர். ஆனால் சரத்பவார் சொந்தமாக தனி அடையாளத்துடன் கட்சியை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு அஜித்பவார் விமான விபத்தில் மரணம் அடைந்த பிறகு அவரது மனைவி சுனேத்ரா பவார் கட்சிக்கு தலைமை ஏற்றுள்ளார்.

ஆனால் அஜித்பவாரின் மகன் பார்த் பவார் கட்சியின் மூத்த தலைவர்களிடம் கேட்காமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் கட்சிக்குப் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டபோது கூட கட்சியின் மூத்த தலைவர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் தனக்கு நெருக்கமானவர்களை பார்த் பவார் நியமித்துள்ளார்.

இது கட்சியின் மூத்த தலைவர்களாக பிரபுல் பட்டேல், கட்சியின் மாநில தலைவர் சுனில் தட்கரே போன்றோருக்குக் கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய செயல் தலைவர் பிரபுல் படேல், அக்கட்சியின் மகாராஷ்டிர மாநிலத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் தட்கரே, மாநில அமைச்சர்கள் சகன் புஜ்பால் மற்றும் ஹசன் முஷ்ரிஃப், மற்றும் மூத்த நிர்வாகிகள் தனஞ்சய் முண்டே, திலீப் வல்சே பாட்டீல் ஆகியோர், துணை முதலமைச்சர் சுனேத்ரா மற்றும் அவரது மகன் பார்த் பவார் ஆகியோர் இன்றி, டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து பேசி இருக்கின்றனர்.

ஆரம்பத்தில் இந்தச் சந்திப்பு மகாராஷ்டிராவில் தற்போது பா.ஜ.க வசம் இருக்கும் நிதித்துறையை தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கைக்காக நடந்தது என்று பேசப்பட்டது. ஆனால் இச்சந்திப்பு உட்கட்சி பூசல் தொடர்பான என்று இப்போது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இப்பிரச்னைக்கு தீர்வு காண இன்று சுனேத்ரா பவார் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி இருக்கிறார்.

அமித் ஷாவுடனான சந்திப்பின்போது அமித் ஷாவும் பிற பாஜக தலைவர்களும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு பிரிவுகளும் ஒன்றிணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக நீடிக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுக்கு இந்தத் திட்டத்தில் உடன்பாடு இல்லை. ஆரம்பத்தில் இரு கட்சிகளின் இணைப்புக்கு சரத்பவார் ஆர்வம் காட்டினார். ஆனால் இப்போது அதில் ஆர்வம் காட்டுவதை சரத்பவார் கைவிட்டுவிட்டார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் நிலவும் அதிருப்தி குறித்து மூத்த தலைவர்சுனில் தட்கரே கூறுகையில், "கட்சிக்குள் எந்த அதிருப்தியும் இல்லை. டெல்லி கூட்டம் முன்னரே திட்டமிடப்பட்டது. எங்கள் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாகவே உள்ளனர். கட்சி கூட்டத்தில் எதிர்காலச் செயல்பாடுகள் மற்றும் அமைப்பை விரிவுபடுத்துவது குறித்து நாங்கள் ஆலோசிப்போம்" என்று அவர் தெரிவித்தார்.

கட்சியை சரத்பவார் கட்சியுடன் இணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டதா என்று கேட்டதற்கு அது தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது என்றார். இன்று நடக்க இருக்கும் கூட்டத்தில் அனைத்து கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அஜித்பவார் மகன்கள் பார்த் பவார் மற்றும் ஜே பவார் அனைத்து மூத்த தலைவர்களுடனும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்று கட்சியிடம் உறுதியளித்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.