‘தனுஷ்காக காத்திருக்கும் அதிமுக, சீமானுக்காக காத்திருக்கும் திமுக’ – காங்கிரஸ் வ...
அரியலூர்: நள்ளிரவில் மது அருந்திய போதை ஆசாமிகள் - எச்சரித்த போலீஸாரை கடுமையாக தாக்கியதால் அதிர்ச்சி!
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள தளவாய் காவல் நிலையத்தில், ராஜாகண்ணு போலீஸாகவும், வெங்கடேசன் (47) ஊர்க்காவல் படை வீரராகவும் பணி புரிகின்றனர். இருவரும் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதே போல் நேற்று இரவும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தளவாய் காவல் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் தனியார் சிமென்ட் ஆலை உள்ளது. அந்த ஆலைக்கு அருகே இருக்கும் லாரி செட் முன்பு அமர்ந்து மூன்று பேர் மது குடித்துள்ளனர்.

இதைப்பார்த்த ராஜகண்ணுவும், வெங்கடேசனும் ராத்திரி 12 மணி ஆகிடுச்சி, இன்னும் மது குடித்து கொண்டிருக்கிறீர்கள் என்று கண்டித்துள்ளனர். மேலும் உடனே கிளம்ப வேண்டும், நாங்க திரும்பி வரும் போது நீங்க இங்கு இருக்கக் கூடாது என எச்சரித்து விட்டு சென்றவர்கள், முக்கிய பகுதிகளில் ரோந்து பணியை தொடர்ந்துள்ளனர். இதையடுத்து, அதிகாலை 2 மணி அளவில் அந்த போலீஸார் திரும்பி வந்த போது, அந்த மூன்று பேரும் விநாயகர் கோயில் அருகில் உள்ள மரப்பட்டறை சந்தில் உட்கார்ந்து மது குடித்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீஸார் ஏற்கெனவே சொல்லிட்டு போனோம் இன்னும் நீங்க உங்க வீட்டுக்கு போகாம குடித்து கொண்டிருக்கிறீர்கள்... நீங்க எந்த ஊர் என்று அருகில் சென்று கேட்டுள்ளனர். அப்போது மூன்று பேரும் நல்ல போதையில் இருந்த நிலையில், `நாங்கள் இங்கு உட்கார்ந்து குடிப்போம், உங்களால் என்ன செய்ய முடியுமோ செஞ்சுக்குங்க' என இரண்டு போலீஸாரையும் மரியாதை குறைச்சலாகப் பேசியுள்ளனர்.

இதையடுத்து ராஜாகண்ணு போன் மூலம் காவல் நிலையத்தில் உள்ள போலீஸாருக்கு இது குறித்து தகவல் கொடுத்துள்ளார். அப்போது போதை ஆசாமிகள் மூன்று பேரும் கண்மூடித்தனமாக இரு போலீஸார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். உடனே, வெங்கடேசன் போலீஸ் மீதே கை வைக்குறீங்களானு கேட்டு அடிப்பதை தடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து போலீஸ்ன்னா பயமா என்று பேசி விட்டு, ராஜாகண்ணுவின் இரு கைகளையும் முறுக்கிப்பிடித்து அடித்துள்ளனர். அத்துடன் வெங்கடேசனை அவரது முகத்தில் கைகளாலேயே கொடூரமாக குத்தியுள்ளனர். இதில் வெங்கடேசன் மயக்கம் அடைந்து விழுந்து விட்டார்.
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு சக போலீஸார் வந்து விட்டனர். இதை பார்த்ததும் போதை குரூப்பில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்ற இருவரை போலீஸார் பிடித்து விட்டனர். இதைத் தொடர்ந்து போலீஸார் தாக்குதலுக்கு உள்ளான இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆபத்தான நிலையில் இருப்பதாக சொல்லப்படும் ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசனுக்கு முதலில் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு தலையில் பலமாக அடிப்பட்டிருப்பதால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வெங்கடேசனின், பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் அவரது நிலையை கண்டு கதறியது நெஞ்சை பிழியச் செய்தது. இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில் இரு போலீஸாரை தாக்கியவர்கள் சிலப்பனுர் கிராமத்தை சேர்ந்த மதிவாணன், தாமரைக்கண்ணன், பரிதி ஆகிய மூவரும் என்பது தெரியவந்தது. அவர்களின் இரண்டு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ள போலீஸார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். டாஸ்மாக் கடைகள் மூடிய பிறகு அரியலூர் பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுகிறது. போலீஸார் தாக்கப்பட்ட இடத்துக்கு அருகிலேயே மது விற்பனை நடந்ததும் இந்த சம்பவத்துக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.















