செய்திகள் :

`அவர்களுக்கு காந்தி என்ற பெயரே இருக்கக் கூடாது; கரன்சி நோட்டிலிருந்துகூட...!' - ஸ்டாலின்

post image

மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் 9 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி ‘மறவோம்’ என்ற தலைப்பில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், ``இன்று காலையில் இருந்து, ஐந்து, ஆறு அரசு நிகழ்ச்சிகள், மாலையில் ஒரு மிகப் பெரிய தேர்தல் களத்தில் பணியாற்றும் பாக முகவர்களின் மாநாடு, அதைத் தொடர்ந்து இந்த நிகழ்வு. கமல்ஹாசன் அவர்களின் அழைப்பை நான் மறுக்க முடியுமா? முரசொலியின் பவள விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அவர் ஆற்றிய உரையை இதுவரையில் என்னால் மறக்க முடியாது. அந்த நட்புணர்வோடுதான், இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன்.

கமல் திரைப்படத்தில் ஒரு டயலாக் பேசியிருப்பார். “மறதி – ஒரு தேசிய வியாதி” என்று, அது போன்று, காந்தியடிகளையும் மக்கள் மறந்து விடக் கூடாது என்றுதான், காந்தியின் வாழ்க்கையில், பெரிய திருப்புமுனையையும் மன மாற்றத்தை ஏற்படுத்திய மதுரை மண்ணில், ‘மறவோம்’ என்கிற நிகழ்ச்சியை அவர் ஏற்பாடு செய்திருக்கிறார். காந்தி என்றதும், அரையாடை அணிந்து மேலே ஒரு துண்டோடு இருக்கும் எளிமையான உருவம்தான் அனைவர் மனதிலும் தோன்றும். அவ்வாறு அவர் அரையாடைக்கு மாறிய மண்தான், இந்த மதுரை மண்.

ம்துரையில் மறவோம் நிகழ்ச்சி

இந்திய நாட்டில், காந்திக்காக அமைக்கப்பட்ட முதல் அருங்காட்சியகம் இதுதான். காந்தி சுடப்பட்டபோது அவர் அணிந்திருந்த, ரத்தக்கறை படிந்த வேட்டி இங்கேதான் இருக்கிறது. அவர் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் இங்கே இருக்கிறது. காந்தியடிகளை ‘தமிழர்கள் மறவோம்’ என்பதன் அடையாளம்தான் இந்த அருங்காட்சியகம்.

காந்தியைப் பின்பற்றி அரசியல் களத்துக்கு வந்தவர் தந்தை பெரியார். காந்தியடிகளுடன் பல விஷயங்களில் முரண்படவும் செய்தார். ஆனால், காந்தியடிகள் ஒரு பயங்கரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டபோது, தந்தை பெரியார்தான், “இந்திய நாட்டுக்கு காந்தி தேசம் என்று பெயர் சூட்ட வேண்டும்” என்று உணர்ச்சி பொங்க பேசினார்.

காந்தியடிகள், தந்தை பெரியாரையும் அனைத்து மேடைகளிலும், கமல்ஹாசன்  நினைவு கூராமல் இருக்கவே மாட்டார். தன்னுடைய தந்தை, காந்தியைத் தொட்டு, அவரிடம் காலணா நிதி அளித்ததாக பெருமையுடன் சொல்லி இருக்கிறார் கமல்ஹாசன்

ம்துரையில் மறவோம் நிகழ்ச்சி

‘ஹே ராம்’ படத்திலும், காந்தியடிகளை கொல்ல வேண்டும் என்று கிளம்புகின்ற ஒரு கதாபாத்திரம் இறுதியில் திருந்துவதை காட்டியிருப்பார். வெறுப்பரசியலை மூர்க்கமாக திணிக்கும் ஒரு கட்சி, ஒரு கொள்கை, ஒன்றியத்தில் ஆளும் காலத்தில், காந்தியத்தை நம்முடைய நாடு இறுகப் பற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும் நிகழ்வுதான், இந்த நிகழ்வு.

அனைத்து மாற்றங்களும் தன்னில் இருந்து உருவாக வேண்டும் என்று சொன்னவர் காந்தியடிகள். அதைத்தான் கமலும் சொல்கிறார். எனக்கு எழுதிய கடிதத்தில்கூட “இன்றைய இந்தியா, உலகம் எதிர்கொள்ளும் முரண்கள், தனி வாழ்வில் ஏற்பட்டிருக்கின்ற சவால்கள் ஆகியவை காந்தியின் தேவையை முன்னெப்போதையும் விட அதிகரித்திருக்கிறது” என்று கமல் குறிப்பிட்டிருந்தார்.

காந்தி

காந்தியடிகளை மக்களுடைய மனதில் இருந்து எப்படியாவது அகற்றிட வேண்டும் என பா.ஜ.க. அரசு திட்டமிட்டு காத்து கொண்டிருக்கிறது. காந்திய கொள்கைகளை அழிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்து, இப்போது, காந்தி என்கின்ற பெயரே இருக்கக் கூடாது என்ற இடத்திற்கு அவர்கள் நகர்ந்திருக்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டுதான், நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருந்து, காந்தியடிகளின் பெயரை நீக்கியது. அடுத்து, கரன்சி நோட்டில் இருந்தும் காந்தி படத்தை எடுத்தாலும் எடுத்துவிடுவார்கள்.

என்னைப் பொறுத்தவரை, ஒற்றைத்துவத்திற்கு எதிரானவர் காந்தி. இந்து – முஸ்லிம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி, மதநல்லிணக்கத்துக்கான மகத்தான மந்திரம் காந்தி, இந்தியா அனைவருக்குமான நாடு என்ற கருத்தியல்தான் காந்தி. “நான் கொல்லப்பட்டாலும் கூட ராம், ரஹீம் என்கிற பெயர்களை அடிக்கடி உச்சரிப்பதை விடமாட்டேன். இரண்டும் ஒரே கடவுளின் பெயர்கள்” என்று சொன்னவர் காந்தி. இதனால்தான், மதத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் அற்பர்களுக்கு காந்தியை பிடிப்பதில்லை.

மதுரை காந்தி அருங்காட்சியகம்.

அண்மையில், பா.ஜ.க.வை சேர்ந்த ஒரு முதலமைச்சரே முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையை தூண்டுவதை பார்த்திருப்பீர்கள். இதை சொல்லவே வெட்கமாக இருக்கிறது. ஆனால், எந்த வெட்கமும் இல்லாமல் இப்படியான செயல்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள். சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கூட இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள்.

கிறிஸ்துமஸ் அன்றைக்கு கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். மாற்றுத்திறனாளி என்றுகூட பார்க்காமல், சிறுமி மீது தாக்குதல் நடத்துகிறார்கள். தமிழ்நாட்டிலும், இப்படிப்பட்ட சம்பவங்களை அரங்கேற்ற வேண்டும் என்று வெறி பிடித்து அலைகிறார்கள். நம்முடைய அரசும், உங்களைப் போன்ற தோழமை கட்சிகளும் இருக்கும் வரை, அதை நாங்கள் நடக்க விடவே மாட்டோம்.

மன்ட்டோ என்ற புகழ்பெற்ற எழுத்தாளர், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது நடந்த வன்முறைய பார்த்து, என்ன சொன்னார் தெரியுமா? “முட்டாள்களே, லட்சம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர், லட்சம் இந்துக்கள் கொல்லப்பட்டனர் என்று எழுதாதீர்கள். 2 லட்சம் மனிதர்கள் கொல்லப்பட்டனர் என்று எழுதுங்கள்” என்ற மனம் வெதும்பி சொன்னார். அவர் சொன்னது சரிதான். மதம் பிடிக்காமல் மக்களை பக்குவப்படுத்துவதுதான் மதங்களின் வேலை. மதவெறி புகுந்தால், முதலில் இறப்பது மனிதம்தான். இதை நன்றாக உணர்ந்த காரணத்தினால்தால் வெறுப்பை புறந்தள்ளி, தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கின்றது.

மறவோம் நிகழ்ச்சி முதலமைச்சர்

மனிதத்தையும், மனிதர்களையும் அழித்து ஆட்சியை பிடிக்க நினைக்கின்ற பா.ஜ.க.வின் பிடியில் தமிழ்நாடு சிக்கக் கூடாது. இந்த தேர்தல், தமிழ்நாட்டிற்கும், என்.டி.ஏ-விற்குமான தேர்தல், அதில் தமிழ்நாடு வெல்லும். பா.ஜ.க. வெறுப்பு இன்ஜின்கள் தமிழ்நாட்டிற்கு தேவையே இல்லை. காந்தியடிகளின் மதநல்லிணக்கமும், தந்தை பெரியாரின் பகுத்தறிவு, சமூகநீதி பார்வையும்தான் இந்தியாவிற்கு தேவை! அந்த அடிப்படையில்தான், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில்  கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இணைந்திருக்கிறது.

சிலர் சொல்லுவார்கள், கமல் பேசுவது ‘எங்களுக்கு புரியவில்லை’ என்று, அவர்களுக்கு புரியாமல் இல்லை! ஆனால், புரிந்து கொள்ளக் கூடாது என்று நினைக்கிறார்கள். மீடியா, மைக் முன்னால் புலம்பிக் கொண்டிருந்தவர்களை, இப்போது பார்லிமென்ட் மைக்கிலும் கமல் புலம்ப வைத்துவிட்டார்.

மதுரையில் மறவோம் நிகழ்ச்சி

அதுமட்டுமல்ல, அவர் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் 9-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த வேளையில், சம நீதிக்காகவும், சமூக நீதிக்காகவும் உங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும் என வாழ்த்துகிறேன். “அன்பின் பாதை சேர்ந்தவருக்கு முடிவே இல்லையடா” என்பது சகோதரர் கமலின் பாடல் வரி... அப்படி அன்பின் பாதையை வலியுறுத்திய காந்தியை மறவோம், காந்தியின் கொள்கைகளை காக்க, வெல்வோம் ஒன்றாக” என்றார்.

தீவிரவாதிகளை குறிவைத்து தாக்கியதா பாகிஸ்தான்? மறுக்கும் ஆப்கானிஸ்தான்! - தாக்குதல் பின்னணி?

ஆப்கானிஸ்தான் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது பாகிஸ்தான் அரசின் விமானப் படை.கடந்த 6-ம் தேதியில் இருந்து பாகிஸ்தானில் 3 தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடந்துள்ளன. இவற்றிற்கு ஆப்கானிஸ்தானில் பதுங்க... மேலும் பார்க்க

மதுரை: தெற்கு மண்டல தேர்தல் ஆலோசனை – ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற வியூகக் கூட்டம் | Album

முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூகக் கூட்டம் முதல்வர் தலைமையில் வியூக... மேலும் பார்க்க

`வெறும் ரசிகர் கூட்டமாக இருந்த உங்களை 40 ஆண்டுக்காலம் செதுக்கி மேடையேற்றி இருக்கிறேன்' - கமல்ஹாசன்

மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் 9 ஆம் ஆண்டு துவக்க விழாவையொட்டி ‘மறவோம்’ என்ற தலைப்பில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகரும், எம்.பி-யுமான கமல்ஹாசன் ப... மேலும் பார்க்க

உலக நாடுகளின்‌ மீது புது வரி! - 'சட்டத்திற்கு உட்பட்ட' ஐடியாவோடு வரும் ட்ரம்ப் - அது என்ன?

நேற்று முன்தினம் (பிப்ரவரி 20), அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப் உலக நாடுகளின் மீது விதித்திருக்கும் வரிக்கு எதிராக தீர்ப்பளித்தது அமெரிக்க உச்ச நீதிமன்றம்.ஆனாலும், அந்த வரிகளை ரத்து செய்வதாக இல்லை ட்ரம்பும்,... மேலும் பார்க்க