SIR: சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நிறைவு; நாளை வெளியாகும் இறுதி வாக்காளர் ...
கைவிட்ட தாய்... அரவணைத்த பொம்மை; இதயங்களை வென்ற குட்டிக் குரங்கு உணர்த்தும் வாழ்க்கை பாடம்!
ஜப்பானின் சிபா மாகாணத்தில் உள்ள இச்சிகாவா நகர மிருகக்காட்சிசாலையில் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் 'பஞ்ச்' என்ற ஜப்பானிய மக்காக் குரங்கு குட்டி பிறந்தது. பொதுவாக குரங்கு குட்டிகள் பிறந்தவுடன் தனது தாயின் வயிற்றை இறுகப் பற்றிக்கொண்டு பாதுகாப்பாக உணரும்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக பஞ்ச் பிறந்த சில நாள்களிலேயே அதன் தாய் அந்தக் குட்டியைப் பராமரிக்க மறுத்து கைவிட்டது. தாயின் அரவணைப்பு இல்லாமல் தவித்த குட்டி பஞ்ச், மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகி தவித்தது.
பஞ்ச்-சின் தனிமையைப் போக்க முயன்ற உயிரியல் பூங்கா ஊழியர்கள், அதற்கு ஒரு போர்வையையும், ஒரு பெரிய ஒராங்குட்டான் பொம்மையையும் வழங்கினர். யாரும் எதிர்பார்க்காத வகையில், பஞ்ச் அந்த பொம்மையைத் தனது தாயாகவே கருதி அதனுடன் ஒட்டிக்கொண்டது.
அந்தப் பொம்மையைத் தூக்கிக்கொண்டு அலைவது, அதைக் கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்குவது என பஞ்ச் காட்டிய அன்பு, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

தற்போது 7 மாதங்கள் ஆகும் பஞ்ச், அந்த பொம்மையின் துணையுடன் தனது பயத்திலிருந்து மெதுவாக வெளிவரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, கடந்த சில வாரங்களாக பஞ்ச் தனது பொம்மையைச் சற்று தள்ளி வைத்துவிட்டு, மற்ற குட்டி குரங்குகளுடன் ஓடி விளையாடத் தொடங்கியுள்ளது.
மிருகக்காட்சிசாலை மருத்துவர்கள் கூறுகையில், பஞ்ச் இப்போது பழங்கள் மற்றும் காய்கறிகள் நன்கு உட்கொள்வதாகவும், அதன் உடல் எடை மற்றும் வளர்ச்சி மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, மற்றொரு குரங்கு பஞ்ச்-சின் உடலைச் சுத்தம் செய்வது போன்ற நெகிழ்ச்சியான காட்சிகள் இன்று வெளியாகியுள்ளன. இந்த முன்னேற்றம், பஞ்ச் விரைவில் ஒரு சாதாரண குரங்காக தன் கூட்டத்துடன் இணைந்து வாழும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
#Baby#Punchi reminds us that even in the face of #rejection by your #tribe, there is always hope for acceptance. Even if it is by a #stuffed#monkey from #Ikea. #Punch is us, at our lowest moment.
— Olive Oil (@olivetheoil) February 19, 2026
pic.twitter.com/vQG7vO78mZ
More information about Punch, the baby monkey at Ichikawa Zoo in Japan.
— Volcaholic (@volcaholic1) February 14, 2026
He was abandoned by his mother shortly after birth and has been hand‑raised by zookeepers.
They gave him a plush orangutan toy, which he carries everywhere, hugging it while he sleeps, using it for… pic.twitter.com/qn1fO7Wu1n
இந்தச் செய்தி வைரலானதைத் தொடர்ந்து, ஜப்பானிய மிருகக்காட்சிசாலைக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. பஞ்ச் அந்தப் பொம்மையை விட்டுப் பிரியத் தயாராக இல்லை என்றாலும், அது மெதுவாகத் தன்னிச்சையாக உணவு உண்ணப் பழகி வருகிறது. ஒரு நாள் பஞ்ச் முழுமையாகத் தனது கூட்டத்துடன் இணைந்துவிடும் என்றும், அப்போது அந்தப் பொம்மையின் தேவை அதற்கு இருக்காது என்றும் உயிரியல் பூங்கா ஊழியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்தக் குட்டிக் குரங்கின் கதை, மனிதர்களாகிய நமக்கும் வாழ்க்கையில் பல நேரங்களில் பொருந்திப் போகிறது. நாம் வாழக் கூடாது என்பதற்கு பல நூறு காரணங்கள் இருப்பினும், `வா வாழலாம்' என நம்பிக்கையூட்டும் ஒற்றைக் காரணம் போதும்... நாம் புத்துயிர் பெற!
``எவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது?!’’ - பிரபஞ்சன்




















