பூட்டிக்கிடந்த கடைக்குள் கள்ள நோட்டு மிஷின்; ரூ.37 லட்சத்திற்கு கள்ள நோட்டுக்களை...
ஆசிய பாரா விளையாட்டுப்போட்டி: "அழாதீங்க; நா சாதிப்பேன்னு சொன்னான்"- தங்கம் வென்ற தூத்துக்குடி இளைஞர்
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் - ஈஸ்வரி தம்பதியின் மகன் சோலைராஜ். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது சோலைராஜ் தனது 19வயதில் இராணுவத்தில் சேர்ந்தார்.
2018-ல் ஜம்மு காஷ்மீரின் கார்க்கில் பகுதியில் உள்ள பட்டாலிக் பனிப்பிரதேசத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கடுமையான குளிர் காரணமாக அவரது இடது காலில் ரத்த ஓட்டப் பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு அவரது இடது காலில் முழங்காலுக்குக் கீழே உள்ள பகுதி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

இருந்த போதிலும் மனம் தளரமால் செயற்கைக் காலுடன் விளையாட்டில் கவனம் செலுத்தினர். குறிப்பாக நீளம் தாண்டுதல் போன்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று தடகள வீரராக மாறினார்.
2023-ம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் பங்கேற்ற சோலைராஜ், ”T-64” பிரிவில் 6.80 மீட்டர் தாண்டி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
தொடர்ந்து தனது விடமுயற்சியினைக் கைவிடமால் பயிற்சி மேற்கொண்டார் சோலைராஜ். தற்போது ஜப்பானின் நாகோயா நகரில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் கடந்த 22-ம் தேதி, நீளம் தாண்டுதல் பிரிவில் கலந்து கொண்டு 7.15 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் சோலைராஜ் தங்கம் வென்று உள்ளதால், அவரது குடும்பத்தினரும் கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சோலைராஜின் பெற்றோர், ”சிறு வயது முதலே சோலைராஜுக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்தது. 9-ம் வகுப்பு படித்தபோதே கிரிக்கெட், வாலிபால், ரன்னிங் ஆகியவற்றில் ஆர்வமாகக் கலந்து கொள்வான். படிப்பதை விட விளையாடுவதில்தான் ஆர்வமாக இருப்பான்.
அது மட்டுமல்ல ராணுவத்தில் சேர வேண்டும் என்பது விருப்பமாக இருந்தது. ஒரே மகனை வைத்திருக்கிறோம் ராணுவத்திற்கு அனுப்ப வேண்டுமா என்று எங்களுக்குத் தயக்கம் இருந்தாலும், அவனுடைய விருப்பத்திற்கு நாங்கள் தடையாக இருக்கவில்லை.
ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றியபோது உடல்நிலை பாதிக்கப்பட்டு, இடது காலினை இழந்தபோது, மிகுந்த வேதனை அடைந்தோம். வேலை வேண்டாம் விட்டுவிட்டு வந்துவிடு என்று கூறினோம். எனது மகன், 'நீங்கள் அழக்கூடாது, சாதித்துவிட்டுதான் வருவேன்' என்று எங்களுக்கு ஆறுதல் கூறினான்.
அதே போன்று இன்றைக்குச் சாதித்துக் காட்டி நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது'' என்றனர்.

சோலைராஜின் மனைவி முத்துப்பிரியா, ”என் கணவர் எப்போதுமே பாசிட்டிவாகப் பேசுவார். தன்னம்பிக்கையுடன் இருப்பார். ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இரண்டு முறை பதக்கம் வென்று விட்டார். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதுதான் அவருடைய லட்சியம். நிச்சயமாக வெல்வார்” என்றார்.
சோலைராஜூவிற்கு முதல்வர் விஜய் பாராட்டு தெரிவித்ததுடன் ரூ.75 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.





















