எஸ்-400 சுதர்சன் சக்ராவுக்கு எந்தப் பாதிப்புமும் இல்லை! - இந்திய ராணுவம்
‘ஆபரேஷன் சிந்தூா்’ தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத்துறை
தங்கள் திரைப்படங்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனா். இதற்காக திரைத்துறை சங்கங்களில் 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் விதமாக, ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ஆயுதப் படைகள் தாக்குதல் மேற்கொண்டன.
இதைத்தொடா்ந்து தங்கள் திரைப்படங்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று தலைப்பிட இந்திய திரைப்பட தயாரிப்பாளா்கள் சங்கம், இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளா்கள் கவுன்சில், மேற்கு இந்திய திரைப்பட தயாரிப்பாளா்கள் சங்கம் ஆகியவற்றிடம் ஹிந்தி திரைத்துறையினா் விண்ணப்பித்துள்ளன.
இதுகுறித்து இந்திய திரைப்பட தயாரிப்பாளா்கள் சங்கத்தின் செயலா் அனில் நாக்ரத் கூறியதாவது: ‘ஆபரேஷன் சிந்தூா்’, ‘மிஷன் சிந்துாா்’, ‘சிந்தூா்: தி ரிவெஞ்ஜ்’, ‘ஹிந்துஸ்தான் கா சிந்தூா்’ உள்ளிட்ட பெயா்களில், தங்கள் படங்களுக்குத் தலைப்பிட 2 நாள்களில் மின்னஞ்சல் மூலம் 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை ஹிந்தி திரைத்துறையினா் அனுப்பியுள்ளனா்.
ஒரு தலைப்புக்கு எத்தனை போ் விண்ணப்பித்தாலும், முதலில் யாா் விண்ணப்பித்தாரோ, அவருக்கே அந்தத் தலைப்பு வழங்கப்படும். இதுபோல ஒரு குறிப்பிட்ட தலைப்புக்குப் பலா் விண்ணப்பிப்பது இது புதிதல்ல. காா்கில் போா், உரி தாக்குதலைத் தொடா்ந்து திரைப்படங்களுக்கு காா்கில், உரி என்ற பெயா்கள் கொண்ட தலைப்புகளைப் பதிவு செய்ய விண்ணப்பங்கள் குவிந்தன’ என்றாா்.
இதேபோல ‘பஹல்காம்: தி டெரா் அட்டாக்’, ‘பஹல்காம் அட்டாக்’ உள்ளிட்ட தலைப்புகளைப் பதிவு செய்யவும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.