"கோட்டை விட்ட தவெக, சக்சஸ் செய்த திமுக" - கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி நிறுவன தேர...
இக்கட்டான தருணத்தில் முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறீர்களா... இந்த முருகன் கோயிலுக்கு வாங்க!
காஞ்சிபுரம் கோயில் மாநகரம். இங்கே இருக்கும் கோயில்களின் எண்ணிக்கை பல நூறு. அவற்றில் மகிமை வாய்ந்த பல திருத்தலங்கள் அமைந்துள்ளன. அப்படி ஒரு தலம் தான் குமரக்கோட்டம். காஞ்சிபுரத்தின் ராஜவீதியிலேயே அமைந்திருக்கிறது குமரக்கோட்டம்.
அம்மையப்பருடன் முருகப் பெருமான் அமர்ந்திருக்கும் திருக்கோலத்தை ‘சோமாஸ்கந்த மூர்த்தம்’ என்று வழங்குவர். அதேபோல் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும் காமாட்சி அம்மன் கோயிலுக்கும் நடுவில் குமரக்கோட்டம் அமைந்திருப்பதால், இந்த மூன்று கோயில்களும் சேர்ந்து சோமாஸ்கந்த அமைப்பில் திகழ்வது பெரும் சிறப்பாகும்.
சிவாலயம் சென்றால் சோமாஸ்கந்த மூர்த்தத்தைத் தரிசிக்க வில்லை என்றால் நம் தரிசனம் பூர்த்தியாகாது. காரணம் அந்தச் சந்நிதியே நம மனதின் வேண்டுதலை நிறைவேற்றும். அப்படிப்பட்ட சந்நிதிபோல அமைந்திருக்கும் குமரக்கோட்டம் முருகன் கோயிலும் நம் மன விருப்பத்தைப் பூர்த்தி செய்வது.

ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே செல்வோம். உள் பிராகாரத்தை வலமாக வரும்போது முதலில் சந்தான கணபதி. அவரை அடுத்து தண்டபாணி தெய்வம். இவருடைய சந்நிதியின் இருபுறமும் தேவகோட்டங்கள் அமைந்துள்ளன. கிழக்கில் விநாயகரையும் மேற்கில் மீனின் மீது அமர்ந்தபடி சடாதரியாகக் காட்சிதரும் மச்சமுனியின் திருவுருவத்தையும் தரிசிக்கலாம்.
தொடர்ந்து சண்முகரையும், மயூரவாகனரையும் தரிசிக்கிறோம். மயில் மீது அமர்ந்திருக்கும் இந்த முருகப்பெருமானின் இருபுறமும் வள்ளி-தெய்வானை பெருமாட்டிகள். அடுத்து, யாகசாலையும் பள்ளியறையும் அமைந்துள்ளன. பள்ளியறையை அடுத்தாற் போன்று உருகும் உள்ளம் பெருமாள் சந்நிதி. இக்கோயிலில் தனக்கும் ஓர் இடம் வேண்டும் என்று விரும்பி வந்து சந்நிதி கொண்டிருக்கிறாராம் இந்தப் பெருமாள்.
மேலும், சோமாஸ்கந்தர், நவவீரர்கள், முத்துக்குமாரசாமி, கஜவள்ளி, தெய்வானைதேவி, தட்சிணாமூர்த்தி, நாகதேவதை, நவ வீரர்கள் மற்றும் நவகிரகங்களைத் தரிசிக்க முடிகிறது. நவகிரகத்தில் சூரியதேவன் தன் தேவியருடன் காட்சி தருவது சிறப்பு. தெய்வானை சந்நிதியை அடுத்து கச்சியப்ப முனிவர், அருணகிரி நாதர் ஆகியோரும் அருள்பாலிக்கிறார்கள்.
இப்பிராகரத்திலேயே மடைப்பள்ளியும் தியான மண்டபமும் அமைந்துள்ளன. தியான மண்டபத்தை அடுத்து, திருச்சுற்றின் மேற்கு கோடியில் வடக்கு நோக்கிய சந்நிதியில் நாக சுப்ரமணியர் வள்ளி, தெய்வயானையுடன் காட்சி தருகிறார். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை இந்தத் திருமூர்த்தங்களுக்கே திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதே மண்டபத்தில் உற்சவத் திருமேனிகளையும் நாம் வழிபடலாம். மேலும் மூலவரின் உற்சவ விக்கிரகமும் தனிசந்நிதியில் அமைந்திருக்கிறது.

மூலவரான சுப்ரமணியர் ஒரு திருமுகமும், நான்கு திருக் கரங்களுடனும் அருள்கிறார். அவரின் மேலிரு கரங்களில் ருத்ராட்ச மாலையும், கமண்டலமும் திகழ, கீழ் வலக் கரத்தால் அபய ஹஸ்தம் காட்டியும், இடக் கரத்தை தொடையின் மீது வைத்தவாறும், அருட்காட்சி தருகிறார் இந்த வேலவன்.
மற்ற எந்த ஆலயத்திலும் இல்லாத இன்னொரு சிறப்பு... இங்கே மூலவருக்கு அபிஷேகத்துக்கு முன்னர் எண்ணெய்க்குப் பதில் தேனாலேயே அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும், முதலாவதாக பஞ்சாமிர்த அபிஷேகமே செய்யப்படுகிறது.
ஞானத்தின் வடிவமாக இந்த முருகப்பெருமான் திகழ்வதால் இங்கே வந்து முருகனைத் தரிசனம் செய்தால் நம் மனத்தின் விருப்பங்கள் நிறைவேறும். நல்ல புத்திக்கூர்மை உண்டாகும். வாழ்வில் எடுக்கும் முடிவுகள் நன்மையாக அமையும் என்கிறார்கள் பக்தர்கள்.
இங்கே முருகப்பெருமானுக்கு வைகாசி விசாகமும், ஐப்பசியில் கந்தசஷ்டி திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன. 12 நாள்கள் நடைபெறும் விசாகப் பெருவிழாவில் மூன்றாவது நாளன்று மயில் வாகனத்தின் மேல் முருகப் பெருமான் திருவீதி உலா வருகிறார். அதே நாளில் கச்சியப்பர், அருணகிரிநாதர், நவவீரர்கள் ஆகியோரின் புறப்பாடும் நடைபெறுகின்றன.
காஞ்சி குமரக்கோட்டத்துக்கு வேறொரு தனிச்சிறப்பும் உண்டு. ஆம்! கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலம் இது. குமரக் கோட்டத்து முருகப்பெருமானை நாள்தோறும் பூஜை செய்து வழிபட்டவர் கச்சியப்ப சிவாச்சாரியார்.
ஒருநாள் இவர் கனவில் தோன்றிய முருகப்பெருமான், “எமது வரலாற்றை அழகிய செந்தமிழில் பாடுக’’ என ஆணையிட்டார். அத்துடன், “திகட சக்கரச் செம்முகம்” என்று முதல்அடியும் எடுத்துக்கொடுத்தாராம்.
ஆறுமுகனின் ஆணையை சிரமேற்கொண்டு நிறைவேற்ற எண்ணிய கச்சியப்பர், கந்தபுராணத்தை இயற்ற தொடங்கினார். ஒரு நாளைக்கு நூறு பாடல்கள் வீதம் எழுதிவந்தார் கச்சியப்பர். ஒவ்வொரு நாள் இரவும் அன்று எழுதிய பாடல்களை முருகனின் திருவடிகளில் வைத்துவிட்டுச் செல்வார்.
மறுநாள் காலையில் அதில் சில திருத்தங்கள் அமைந்திருக்கும். இவ்வாறு முத்துக் குமரனின் அருளால் கந்தபுராணம் நிறைவு பெற்றது.

அரங்கேற்றத்தின்போது, கந்த புராணத்தின் முதல் வார்த்தையாக உள்ள ‘திகட சக்கரம்’ என்பதில் சொற்குற்றம் இருப்பதாகக்கூறினார் புலவர் ஒருவர். மன வருத்தத்துடன் இரவு உறங்கச்சென்ற கச்சியப்பரின் கனவில் தோன்றிய முருகப் பெருமான், புலவரின் சந்தேகத்தைத் தானே வந்து நிவர்த்தி செய்வதாக கச்சியப்பருக்கு வாக்களித்தார்.
அதன்படியே மறுநாள் புலவர் உருவில் அவைக்கு வந்து, ‘திகட சக்கரம்’ என்ற வார்த்தை வீரசோழியம் என்ற நூலில் இருப்பதாகக் குறிப்பிட்டு மறைந்தார். வந்தவர் முருகப்பெருமான் என்பதை அறிந்த புலவர் பெருமக்கள் கச்சியப்பரின் முருகபக்தியை வியப்புடன் போற்றினர். இந்த அருள் நிகழ்வு நடைபெற்ற மண்டபத்தை இன்றைக்கும் இக்கோயிலில் நாம் தரிசிக்கலாம்.
இத்தனை சிறப்புகளை உடைய காஞ்சிபுரத்துக்கு ஒருமுறை வந்து தரிசனம் செய்யுங்கள். முருகனின் ஞான வடிவம் உங்கள் மனதையும் அறிவையும் தூய்மையாக்கி வாழ்வை வளமாக்கித் தரும்.




















