``ஆந்திராவின் எஸ்.பி.பி-க்கு தெலங்கானாவில் எதற்கு சிலை" - எதிர்க்கும் சமூக ஆர்வல...
இலங்கை டிட்வா புயல்: "உயிர்போகும் நேரத்திலும் தமிழில் அறிவிப்புகள் இல்லை" - இக்கட்டிலும் இனவெறி?
அண்டை தீவு நாடான இலங்கையில் கடந்த வாரம் டிட்வா புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. 2003ம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையைத் தாக்கிய மிக மோசமான புயலாக டிட்வா கருதப்படுகிறது. இந்தப் பேரழிவில் 410 பேர் உயிரிழந்துள்ளனர், 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்துள்ளனர், சுமார் 336 பேர் காணாமல் போனோர் பட்டியலில் உள்ளனர்.
இந்த நெருக்கடியை இலங்கையின் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசு மோசமாக கையாண்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. பலரும் தீவிர மழைப்பொழிவு குறித்து எச்சரிக்கப்படாத நிலையில், எச்சரிக்கப்பட்டவர்களுக்கும் சிங்கள மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே அறிவிப்புகள் வழங்கப்பட்டதால் தமிழ் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கின்றனர்.
சமூக வலைதளங்களில் பயனர்கள் இடையே இது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. மேலும் ஆராய்ச்சியாளர் சஞ்சனா ஹட்டோடுவா ஒரு சுருக்கமான ஆய்வை வெளியிட்டுள்ளார்.
நியூசிலாந்தில் The Disinformation Project திட்டத்தில் ஆராய்ச்சி இயக்குநராக பணியாற்றிய இவர், நவம்பர் 25 முதல் நவம்பர் 29 காலை வரை பேரிடர் மேலாண்மை மையத்தின் (DMC) பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட 68 பதிவுகளை ஆராய்ந்து, முகப்புப் பக்கப் பதாகையில் உள்ள அனைத்து முக்கிய தகவல்களும் சிங்களத்தில் மட்டுமே இருப்பதைக் கண்டறிந்துள்ளார்.
புயல் உச்சக்கட்டத்தின் போது வெளியிடப்பட்ட 68 பதிவுகளில், வெறும் 12 பதிவுகளே தமிழ் உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தன என்றும், அவற்றில் இருந்தது அடிப்படை வெள்ள அறிவிப்புகளுக்கான தகவல்கள் மட்டுமே என்றும் கூறியுள்ளார்.
மலைநாட்டில் உள்ள தமிழர்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கான சூழல் இருந்தபோதும் இப்படி நடந்திருக்கிறது. கடுகண்ணாவ மற்றும் மஹியங்கனை ஹேர்பின் பாதை போன்ற முக்கியமான சாலை மூடல்கள் சிங்களத்தில் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன, இதனால் தமிழ் மக்களுக்கு அடிப்படை வழிகாட்டுதல்கள் கூட கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
தேர்வுக்கான வினாத்தாள்கள் தமிழ் பேசும் மக்கள் அதிகம் இருக்கும் ஜாஃப்னாவுக்கு விமானத்தில் வந்துசேரும் என்ற அறிவிப்பும் கூட சிங்களத்தில் மட்டுமே வந்துள்ளது. தெதுரு ஓயா படுகையில் நீர் வெளியேற்றத்துக்கான விகிதங்கள் பாதிக்கப்படும் பிரதேசங்களின் பெயர்களைக் கொண்ட அறிக்கையும் தமிழில் வெளியாகவில்லை என்கிறது அவரது ஆய்வு.
கடல்சார் மற்றும் காற்று எச்சரிக்கைகள் சிங்களத்தில் மிக விரிவானதாகவும் தமிழில் தெளிவற்றதாகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இணையதளத்திலும் இந்த பாகுபாடு நீடித்துள்ளது. DMC இன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தமிழ் மொழி ஆப்ஷன் இருந்தாலும், மெனுக்களைத் தவிர, கிட்டத்தட்ட அனைத்து உள்ளடக்கங்களும் சிங்களம் அல்லது ஆங்கிலத்தில் இருந்திருக்கின்றன.
நவம்பர் 25–29 தேதிகளுக்கான விரிவான வானிலை அறிக்கைகள் சிங்களத்தில் பிரத்தியேகமாக வெளியிடப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் தளத்தில் பதிவேற்றப்பட்ட 34 வானிலை அறிக்கைகளில், ஒன்றில் மட்டுமே தமிழ் இருந்தது. வானிலை ஆய்வுத் துறையின் பேஸ்புக் பக்கத்திலும் இந்த போக்கு நீடித்திருக்கிறது. முக்கியமான அறிக்கைகள் தமிழில் தாமதமாக வந்திருக்கின்றன அல்லது வரவேயில்லை.
உயிருக்கு ஆபத்தான சூழலில் வெளியிடப்படும் எச்சரிக்கைகளில் கூட காலதாமதம் ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளார். நவம்பர் 25 ஆம் தேதி பிற்பகல் 3.51 மணிக்கு சிங்களத்தில் வெளியிடப்பட்ட ஒரு கடுமையான மழை எச்சரிக்கை, மாலை 6.41 மணி வரை தமிழில் தோன்றவில்லை, இது மூன்று மணி நேர இடைவெளியாகும். மக்கள் வெள்ளத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியுமா என்பதை தீர்மானிக்க முக்கியமான தருணங்கள் அவை.
இலங்கை அரசின் அமைப்பு ரீதியான இனவெறி, மொழிப் பாகுபாடு எப்படி நெருக்கடியான நேரத்தில் அதன் சொந்த குடிமக்களை ஆபத்தில் தள்ளுகிறது என்பதை ஹட்டோடுவாவின் ஆய்வு காட்டியிருக்கிறது. இதேபோல இலங்கை அரசின் டிஜிட்டல் உள்கட்டமைப்பிலும் தமிழ் ஒதுக்கப்படுவதை இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேற்கொண்ட ஆய்வில் அவர் எடுத்துக்கூறியிருந்தார்.
இந்த ஆய்வைத் தொடர்ந்து பலரும் விடுதலை புலிகள் காலத்தில் தமிழர்களுக்காக சொந்த வானிலை அவதானிப்பு மையம் செயல்பட்டு வந்ததை நினைவுகூர்ந்துள்ளனர். ``உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டாலும் கூட, தமிழ் குடிமக்களுடன் அவர்களின் மொழியில் தொடர்பு கொள்ள முடியாத அரசுக் கட்டமைப்பு நிலவுகிறது" என தனது ஆய்வை முடித்துள்ளார் சஞ்சனா ஹட்டோடுவா.

















