"திருநீறு, ருத்ராட்சையுடன் திருவள்ளுவர் ஓவியம்; திருப்பரங்குன்றம் விவகாரத்திலும்...
ஊக்க மருந்து சர்ச்சை... ஆசிய போட்டியில் விளையாட தடை: 3 முறை தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் தற்கொலை!
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் நீரஜ் யாதவ். மாற்றுத்திறனாளியான இவர் வட்டு மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகளில் கலந்து கொண்டு வந்தார். ஆசிய அளவில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு மூன்று முறை தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவர் டெல்லியில் வசித்து வந்தார். இன்று துரதிஷ்டவசமாக தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 7 வயதில் போலியோவால் பாதிக்கப்பட்ட நீரஜ் 2018ம் ஆண்டு நடந்த ஜகார்த்தா ஆசிய பாரா விளையாட்டு மற்றும் 2022ம் ஆண்டு நடந்த ஹாங்சோ ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார். ஹாங்சோவில் நடந்த வட்டு எறிதலில் தங்கப் பதக்கத்தையும் வென்றார்.
அவர் தற்கொலை செய்து கொண்ட செய்தியை இந்திய பாரா தடகள பயிற்சியாளர் எஸ் சத்தியநாராயணா உறுதிப்படுத்தினார். நீரஜ் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் இருப்பதாக சத்யநாராயணா கூறினார். மேலும் வீரர்கள் இது போன்ற முடிவுகளை எடுக்கக் கூடாது என்று தெரிவித்தார்.

ஊக்கமருந்து பயன்படுத்தியது தொடர்பான புகாரின் பேரில் இந்த மாதத் தொடக்கத்தில் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் நீரஜ் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதனால் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனதால், நீரஜ் மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. பாரா-தடகளப் போட்டிகளுக்கு மாறுவதற்கு முன்பு, அவர் 2005 முதல் 2012 வரை சக்கர நாற்காலி டென்னிஸ் விளையாட்டில் ஈடுபட்டிருந்தார்.
2023ம் ஆண்டு அக்டோபரில், பெங்களூருவில் உள்ள எஸ்.ஏ.ஐ (SAI) மையத்தில், தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை (NADA) சேகரித்த போட்டிக்கு அப்பாற்பட்ட மாதிரியில், நீரஜ் யாதவ் ஊக்க மருந்து பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் இந்தியாவிற்கு ஆசிய பாரா விளையாட்டுப்போட்டியில் கிடைத்த இரண்டு தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது.
இருப்பினும், விசாரணை முழுவதும் நீரஜ் தான் குற்றமற்றவர் என்று வாதிட்டார். மாதிரியில் மாசு கலந்திருக்கலாம் அல்லது பரிசோதனைச் செயல்பாட்டில் குளறுபடி நடந்திருக்கலாம் என்று அவர் கூறினார். மேலும், அந்த மாதிரியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த டிஎன்ஏ (DNA) பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.
















