ஈரான்: "போரும் இல்லாத, அமைதியும் இல்லாத நிலை.." - முடிவுக்கு கொண்டுவர மொஜ்தபாவுட...
கர்நாடகா சட்டமேலவை தேர்தல்: 4 இடங்களையும் பா.ஜ.க கூட்டணியிடம் இழந்த காங்கிரஸ்!
கர்நாடகா, பீகார், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமேலவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் கடந்த 23ம் தேதி நடந்தது. இதில் கர்நாடகாவில் 4 இடங்களுக்கு இத்தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. வாக்குச்சீட்டுகள் மூலம் தேர்தல் நடத்தப்பட்டதால் இரவு வரை வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் வடகிழக்கு ஆசிரியர் தொகுதி, தென்கிழக்கு பட்டதாரிகள் தொகுதி மற்றும் மேற்கு பட்டதாரிகள் தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக் கட்சியான மதசார்பற்ற ஜனதா தளம் பெங்களூரு ஆசிரியர் தொகுதியைக் கைப்பற்றியது.
இதன் மூலம் இத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. வடகிழக்கு ஆசிரியர் தொகுதியில், மீண்டும் போட்டியிட்ட பாஜக சட்ட மேலவை உறுப்பினர் சஷில் ஜி. நமோஷி, காங்கிரஸ் வேட்பாளர் சரணப்பா மத்தூரின் அனைத்து நம்பிக்கைகளையும் தகர்த்து வெற்றி பெற்றார். காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் சொந்த மாவட்டமான கலபுரகியை உள்ளடக்கிய இந்தத் தொகுதியில், நமோஷி வெற்றி பெறுவது இது ஐந்தாவது முறையாகும்.

தென்கிழக்கு பட்டதாரிகள் தொகுதியில், காங்கிரஸின் சஷி ஹுலிகுன்டே மட்டைத் தோற்கடித்து பாஜகவின் கே.எம். சுரேஷ் வெற்றி பெற்றார்.
மேற்கு பட்டதாரிகள் தொகுதியில் காங்கிரஸின் மோகன் லிம்பிகாய்க்கு எதிராக போட்டியிட்ட பாஜகவின் எஸ்.வி. சங்கனூர் வெற்றி பெற்றார். இது குறித்து பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான அசோக் கெளடா கூறுகையில்,"இது தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி. காங்கிரஸ் பரப்பிய அனைத்துக் கருத்துகளும் அம்பலமாகிவிட்டது. கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. தங்களுக்கு காங்கிரஸ் அரசு வேண்டாம் என்பதை மக்கள் தெளிவாக உணர்த்தியுள்ளனர்," என்று தெரிவித்தார்.
75 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப் பேரவையில் 38 காங்கிரஸ் உறுப்பினர்கள், 24 பாஜக உறுப்பினர்கள், 6 பேர் மதசார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் மற்றும் ஒரு சுயேச்சை மற்றும் ஒரு தலைவர் இருக்கின்றனர். அரசு சார்பில் நியமிக்கப்படவேண்டிய ஐந்து நியமன உறுப்பினர் பதவி இடங்கள் காலியாக உள்ளன.




















