கந்த சஷ்டி விரதம் : தமிழ் வளர்த்த அடியார்களுக்கு அருளிய முருகன்... 'திருச்செந்தூ...
"என்னுடன் விவாதம் நடத்தினால் மோடி பிரதமராக இருக்கமாட்டார்" - போனை பதிவு செய்வதாக கூறும் ராகுல்
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்ஸ்டாகிராமில் என்னிடம் கேளுங்கள் என்ற ஆன்லைன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் பொதுமக்கள் மற்றும் அவரது கட்சியினர் கேட்ட கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார். அந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி எனது தொலைபேசியை ஒட்டுக்கேட்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ராகுல் காந்தி தனது தொலைபேசியை உயர்த்தி, தனது தொலைபேசியில் பிரதமருக்கு எதிரான அனைத்து ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாகவும், அதனை ஒட்டுக்கேட்பதால் இது குறித்து பிரதமருக்கும் தெரியும் என்று தெரிவித்தார்.
மேலும் பல்வேறு பிரச்னைகள் குறித்து தன்னுடன் பிரதமர் நரேந்திர மோடி நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா என்று ராகுல் காந்தி சவால் விட்டார். மேலும் இது போன்று ஒருவருக்கு ஒருவர் நேரடி விவாதம் நடத்துவதன் மூலம், யார் வெளிநாட்டுக் கட்டுப்பாட்டில் இருக்கிறார், யார் தேசவிரோதி என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும். அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி அல்லது ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் விவாதத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டால் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் என்னுடன் ஒரு விவாதத்திற்குப் பிறகு பிரதமர் பிரதமராக இருக்க மாட்டார் என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.

பிரதமருக்கு எதிராக தன்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று கூறினார். தேர்தல் நடைமுறைகள், வெளிநாட்டு செல்வாக்கு மற்றும் தேசப் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் வெளிப்படையான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி பலமுறை வலியுறுத்தி வருகிறார்.
விவசாய சட்டங்கள், வாக்கு திருட்டு, வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR), சீனா, ஜெனரல் எம்.எம். நரவனேவின் புத்தகம் மற்றும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான விஷயங்களை பாராளுமன்றத்தில் எழுப்ப முயற்சித்தபோது தனது மைக்ரோஃபோன் அணைக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
பிரதமருக்கு ராகுல் காந்தி தற்போது விடுத்து இருக்கும் சவால் கடந்த 12 நாட்களில் 7வது முறையாகும். ஆனால் இந்த நேரடி விவாதத்தை நிராகரித்த பா.ஜ.க தலைவர்கள், பாராளுமன்ற விவாதத்தை ராகுல் காந்தி தவிர்ப்பதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், விவாதத்திற்கு பாராளுமன்றம் ஏற்கனவே இருக்கும் போது, வேறு ஒரு இடத்தை தேர்வு செய்யும்படி பிரதமரிடம் ராகுல் காந்தி ஏன் கேட்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.















