செய்திகள் :

கந்த சஷ்டி விரதம் : தமிழ் வளர்த்த அடியார்களுக்கு அருளிய முருகன்... 'திருச்செந்தூரின் கடலோரத்தில்-6'

post image

ராமநாதபுரம் அருகே இருக்கும் புகலூர் என்னும் தலத்தில் பிரசித்திபெற்று விளங்கும் ஐயனாருக்கு ‘பகழிக் கூத்தர்’ என்று பெயர். ஓர் அடியார் தன் மனைவியோடு அங்கு சென்று தரிசனம் செய்தார். அப்போது சாமியாடிய அந்தக் கோயில் அர்ச்சகர், இவர் கையைப் பிடித்து, ‘`உமக்கு ஒரு மகன் பிறப்பான்; அவன் பிள்ளைக்கவி புனைவான்’’ என்று கூறி திருநீறு அளித்தார். சில காலம் கழித்து, அந்த அடியார் தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. புகலூர் ஐயனார் கோயில் அர்ச்சகர் கூறியது நினைவுக்கு வர, அந்த ஐயனாரின் திருப்பெயரான ‘பகழிக்கூத்தர்’ என்னும் திருநாமத்தையே அந்தக் குழந்தைக்குச்சூட்டினர்.

பகழிக்கூத்தர் இளம் வயதிலேயே வரகவியாகவும், அறிவில் சிறந்தவராகவும், சேது சமஸ்தான அரசர் போற்றும் பெருமை பெற்றவராகவும் திகழ்ந்தார் பகழிக்கூத்தர். ஒருமுறை, பகழிக்கூத்தர் வயிற்றுவலியால் மிகவும் வருந்தினார். மணி, மந்திரம், மருந்து என எதுவும் நோய் தீர்க்கவில்லை. அதனால் கலியுக வரதனாகிய திருச்செந்தூர் செந்திலாண்டவர் கருணையை வேண்டினார். அப்போது, திருச்செந்திலாண்டவன் சந்நிதியில் நிற்பது போலும், அவனைப் பாடிப் பரவுவது போலும் மனத்தில் ஓர் அருட்காட்சி வந்தது.

திருச்செந்தூர் முருகன்

அன்றிரவு அவரது கனவிலும் தோன்றினார் கந்தவேள். இலை விபூதியையும் சீட்டு ஒன்றையும் தந்து மறைந்தருளினார். திடுக்கிட்டு விழித் தெழுந்த பகழிக்கூத்தர், முருகப் பெருமான் கனவில் வழங்கிய அருட் பிரசாதம் அருகில் இருக்கக் கண்டு மேலும் வியந்தார். விபூதியை நெற்றியில் பூசிக் கொண்டார். சீட்டைப் படித்துப் பார்த்தார். அந்தச் சீட்டில்...

'பூமாது போற்றும் புகழ்ப் பகழிக் கூத்தா உன்

பாமாலை கேட்க யாம் பற்றேமா - ஏமம்

கொடுக்க அறியேமா கூற்றுவன் வாராமல்

தடுக்க அறியே மாதாம்!'

என்று, ஒரு வெண்பா எழுதப்பட்டு இருந்தது. அக்கணமே திருச்செந்தில் ஆண்டவன் மீது செந்தமிழில் பிள்ளைத்தமிழ்ப் பாட வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு மேலிட்டது.

முருகப்பெருமான் எழுதித் தந்த வெண்பாவில் இருந்தே ‘பூமாது’ என்று தொடங்கும் சொல்லை முதல் சொல்லாக வைத்துப் பாடத் தொடங்கினார். பிள்ளைத் தமிழ்ப்பாடி நிறைவு செய்தவுடன், நெடுநாள் அவரைப் பற்றியிருந்த வயிற்றுவலியும், வினை நோயும் நீங்கி இன்புற்றார். தாம் இயற்றிய பிள்ளைத்தமிழை திருச் செந்தூர் முருகன் சந்நிதானத்தில் அரங்கேற்றி மகிழ எண்ணம் கொண்டு, அங்கு சென்றார் பகழிக்கூத்தர்.

திருக்கோயில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள் ஆகியோரிடம் தமது விருப்பத்தைத் தெரிவித்தார். அவர்களும் சம்மதித்து அதனை அரங்கேற்றம் செய்ய ஏற்பாடு செய்தார்கள். பிள்ளைத்தமிழ்ப் பாக்களின் இனிமையையும் பொருள் நயத்தையும் அனைவரும் அனுபவித்தனர். ஆனால், அரங்கேற்றம் செய்து முடித்த பின், கோயில் சார்பில் அவரைப் பாராட்டி வாழ்த்த ஒருவரும் முன்வரவில்லை.

திருச்செந்தூர்
திருச்செந்தூர்

அந்த நாள்களில், திருச் செந்தூர் அருகே உள்ள குலசேகரன் பட்டினம் என்னும் ஊரில் காத்தபெருமாள் மூப்பனார் என்பவர் மிகப் பெரிய செல்வந்தராக இருந்தார்.முருகப்பெருமான் மீது மிகவும் பேரன்புடையவர் இவர். அன்றிரவு முருகப்பெருமான் அவரது கனவில் தோன்றி, பகழிக்கூத்தரது பிள்ளைத்தமிழ் பாடலுக்குத் தக்க பாராட்டும் மரியாதையும் செய்யுமாறு அறிவுறுத்தினார். கந்தவேளின் திருவருளை எண்ணிப் பெருமகிழ்வுற்ற காத்தபெருமாள், உடனே பல்லக்கில் புறப்பட்டு திருச்செந்தூரை அடைந்தார்.

இது ஒருபுறம் இருக்க, திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம் செய்த அன்றிரவு, தம் வாழ்நாளில் இறைவனுக்குத் தமிழ் பணியாற்றிய நிறைவுடன் கோயிலின் ஒருபுறத்தே பகழிக்கூத்தர் துயில் கொண்டார்.

ஆனால், முருகப்பெருமானுக்கோ இந்த நூலைப் பாராட்டித் தக்க பரிசை ஒருவரும் அளிக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டது போலும்! உடனே, தமது மார்பில் இருந்த மாணிக்கப் பதக்கத்தை பகழிக்கூத்தரின் தமிழ்ப் புலமைக்குப் பரிசாக அவரது மார்பில் அணிவித்தார். நன்கு உறங்கியதால் பகழிக்கூத்தர் அதை உணரவில்லை.

மறுநாள் காலையில் செந்திலாண்டவன் சந்நிதிக்கு வந்த கோயில் அர்ச்சகர்கள் இறைவன் மார்பில் திகழும் மாணிக்கப் பதக்கத்தைக் காணாது கலங்கினர். அங்கும் இங்கும் ஓடித் தேடினர். அப்போது, கோயிலின் ஒரு புறத்தே படுத்து உறங்கிக்கொண்டிருந்த பகழிக்கூத்தரது கழுத்தில் அந்தப் பதக்கம் பிரகாசிப்பதைக் கண்டனர்.

முதல்நாள் பிள்ளைத்தமிழ் அரங்கேற்றம் முடிந்தபின் அவரை முறையாகப் பாராட்டாததைக் கண்டு, முருகப்பெருமானே இந்தத் திருவிளையாடலைப் புரிந்தான் என்பதை உணர்ந்தனர்.

இந்த நிலையில், குலசேகரன் பட்டினம் காத்தபெருமாள் திருச்செந்தூர் கோயிலை அடைந்தார். அப்போது, பதக்கம் காணாமல் போனதும், அதனை இறைவன் பகழிக்கூத்தருக்கு அணிவித்த அற்புதத்தையும் அறிந்து மகிழ்ந்தார். புலவரின் திருவடிகளைப் பணிந்து, கந்தவேள் கனவில் சொன்ன செய்தியை உரைத்தார்.

பகழிக்கூத்தர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இறைவனது பெருங்கருணைத் திறத்தை எண்ணி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

திருச்செந்தூர் வந்தால் நோய் தீரும். இதற்கு ஆதி சங்கரர் முதல் பகழிக்கூத்தர்வரை பல ஞானிகள் உதாரணம். அதுவும் கந்த சஷ்டியில் விரதம் இருந்து அவனை நினைத்து வழிபட்டாலே நோய்கள் தீரும். வினைகள் விலகும். கந்த சஷ்டி ஆறுநாள்களும் விரதம் இருபப்வர்கள் அருகிலேயே முருகப்பெருமான் இருப்பார். ஆறுநாள்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் கடைசி ஒரு நாளில் விரதம் இருந்தால்கூடப் போதுமானது. ஆனால் அவனையே நினைத்து மனமொன்றி வழிபட வேண்டும். முருகனைத் துதிக்கும் தோத்திரங்களைச் சொல்ல வேண்டும். அப்படி விரதம் இருந்தால் அவன் அருள் நிச்சயம் கிடைக்கும். பகழிக்கூத்தரின் வாழ்க்கை நிகழ்வைக் கேட்டாலே புண்ணியம். யாரெல்லாம் இதை பக்தியோடு கேட்கிறார்களோ அவர்கள் கனவில் முருகன் வருவான் என்பது நம்பிக்கை.

கந்த சஷ்டி விரதத்தில் நாளை ஆறாம் நாள் சூர சம்ஹாரம். அந்த அற்புத நாளின் மகிமைகளை தொடர்ந்து தரிசிப்போம்.

கந்த சஷ்டி விரதம்: கவசம் பாடினால் கவலையில்லை... 'திருச்செந்தூரின் கடலோரத்தில் - 5'

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் பல ஆயிரம்பேர். ஆலயத்தின் சுற்றுப்பகுதியிலேயே தங்கியிருந்து தினமும் சமுத்திரத்தில் நீராடி அந்த ஷண்முகனைத் துதிப்பார்கள். அதிலும் கந்ததுக்கு உகந்தது கந்த ... மேலும் பார்க்க

Kanda sasti | முருகனுக்கு ஏன் இரண்டு மனைவிகள்? கந்தபுராண சொல்லும் கந்த சஷ்டி ரகசியங்கள் | வாதவூரன்

கந்த சஷ்டி காலத்தில் முருகப்பெருமானின் அருமை பெருமைகளையும் அருணகிரிநாதரின் பாடல்களையும் வாரியார் சுவாமிகளின் ஆழ்ந்த கருத்துக்களையும் எடுத்துரைக்கும் வாதவூரன் ஐயாவுடன் ஒரு சிறப்பு உரையாடல். மேலும் பார்க்க

கந்த சஷ்டி விரதம் : 8 லிங்கங்கள்; 4 உற்சவர்கள்; அற்புத தகவல்கள் - திருச்செந்தூரின் கடலோரத்தில் - 4

ஆறுபடை வீடுகளில் இரண்டாவது திருத்தலம் திருச்செந்தூர். தானே விரும்பிவந்து திருச்செந்தூரில் கோயில்கொண்டான் அந்த செந்தில்நாதன் எனக்கண்டோம். அவன் ஆலய மகிமைகளையும் அறிந்துகொள்வோம். திருச்செந்தூர் ஆலயம் (ஓம... மேலும் பார்க்க

கந்த சஷ்டி விரதம்: 'திருச்செந்தூரின் கடலோரத்தில்...' - ஆறுமுகன் நம் மனதில் இன்று உதிக்கட்டும்...

தட்சன் பக்தன்தான். பக்தியாலும் தவத்தினாலும் முடியாதது எதுவுமில்லை என்பதை இந்தப் பிரபஞ்சத்துக்கு எடுத்துக் காட்டியவன். பிரபஞ்சத்தின் முதல் மகளே தனக்கு மகவாக வரவேண்டும் என்று வரம் கேட்டான். அப்போது அந்த... மேலும் பார்க்க

'திருச்செந்தூரின் கடலோரத்தில்...' - திருச்சீரலைவாய் தல புராணம் முதல் கந்த சஷ்டி விரதம் வரை !

திருச்செந்தூர்... உலகெங்கும் வாழும் முருகபக்தர்களின் மனம் கவர்ந்த தலம். வாழ்வில் ஒருமுறையேனும் அந்த அழகனை திருச்செந்தூர் வந்து தரிசித்துவிடமாட்டோமா என்று ஏங்கும் நெஞ்சங்கள் கோடானகோடி. அதுவும் கந்த சஷ்... மேலும் பார்க்க

Kanda Sasti Viratham | கந்த சஷ்டி விரதம் - உடை முதல் உணவு வரை முழுமையான வழிகாட்டல் - இரா. விஜயகுமார்

கந்த சஷ்டி விரதத்தின் உண்மையான தத்துவம் என்ன? ஆறு நாள்களும் எப்படி விரதம் இருக்க வேண்டும்? பூஜை செய்யும் முறை, அணிய வேண்டிய உடை, நைவேத்தியம், உணவு முறைகள் என கந்தபுராணம் கூறும் விரத விதிகளை விளக்குகிற... மேலும் பார்க்க