சஞ்சு சாம்சன் இப்படியே தொடர்ந்து ஆட்டமிழந்தால்... அஸ்வின் கூறுவதென்ன?
ஒரே நாளில் 4 விவசாயிகள் தற்கொலை!
கர்நாடகத்தில் வங்கிக் கடன் பிரச்னையால் பாதிக்கப்பட்ட நான்கு விவசாயிகள் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டனர்.
கர்நாடக மாநிலம் ஹாசனில் பதிவான வழக்கில், சிறுநிதி நிறுவனத்தின் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ரவி(வயது 50) என்ற விவசாயி விஷம் குடித்து திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
ஆர்கல்குட் தாலுகாவில் உள்ள காந்தேன ஹள்ளியில் வசிக்கும் ரவி, மூன்று ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் இஞ்சி பயிரிட ரூ.9 லட்சம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பயிரில் பூச்சி பாதிப்பு ஏற்பட்டதால் ஒரு குவிண்டால் விலை ரூ. 3,000-ல் இருந்து ரூ. 900 ஆகக் குறைந்ததால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கடனளித்த நிதி நிறுவனங்களின் நெருக்கடியை தாங்க முடியாமல் ரவி தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கபள்ளாப்பூரில் நிதி நிறுவனத்திடம் இருந்து கடன் பெற்று டிராக்டர் வாங்கிய கிரிஷ் என்ற விவசாயி, கடனைத் திருப்பி அளிக்க முடியாததால் டிராக்டரை நிதி நிறுவனத்தினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான கிரிஷ் தற்கொலை செய்துகொண்டதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
மூன்றாவது வழக்கில் கௌரிபிதனூரைச் சேர்ந்த நரசிம்மய்யா என்பவர் தனியார் நிதி நிறுவனத்திடம் வாங்கிய கடனைத் திருப்பி அளிக்க முடியாததால், தனது பண்ணை வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிக்க : ராணுவ விமானத்தில் இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!
மேலும், தாவணகெரே, ஹரிஹார் தாலுகா, தீதுரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எல்.கே. சுரேஷ் (42) என்பவர் வங்கியில் ரு. 21 லட்சம் கடன் பெற்றுள்ளார்.
இதனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி கல்பனா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
கடன் பெற்றவர்களை வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் துன்புறுத்துவதை தடுக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஒரே நாளில் நான்கு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.