பாகுபலி, ராபின் ஹூட் போல செயல்படாதீர்கள் - பீகார் நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் ந...
காட்பாடி: வங்கி மேலாளர் வீட்டில் கைவரிசை; ரூ.1 கோடி நகைகளை அள்ளிச் சென்ற முகமூடி கொள்ளையர்கள்!
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கார்ணாம்பட்டில் `மே ஃப்ளவர்’ குடியிருப்புப் பகுதி அமைந்திருக்கிறது. இங்கு ஓய்வுபெற்ற வங்கி மேலாளரான எட்வின் என்பவர், தனது மனைவியும் மருத்துவருமான கிறிஸ்டியானாவுடன் வசித்து வருகிறார்.
நேற்று இரவு வழக்கம்போல் இருவரும் தூங்கச் சென்றனர். இன்று காலை எழுந்து பார்த்தபோது, மேல்மாடி அறை உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறிக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகினர். நள்ளிரவில், வீட்டின் பின்புற கதவை உடைத்துக் கொண்டு மாடிக்கு ஏறிய கொள்ளையர்கள், அங்குள்ள அறையின் பூட்டையும் உடைத்து அதற்குள் வைக்கப்பட்டிருந்த 60 பவுன் தங்க நகைகளையும், வைர நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

கொள்ளைபோன பொருள்கள் மதிப்பு சுமார் ரூ.1 கோடி இருக்கும் என வீட்டின் உரிமையாளரான எட்வின், திருவலம் போலீஸில் புகாரளித்திருக்கிறார். இதையடுத்து, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் எட்வின் வீட்டுக்கு வந்த போலீஸார் கொள்ளையர்களின் கைரேகைகள் மற்றும் தடயங்களைச் சேகரித்தனர்.
முதற்கட்டமாக, கொள்ளையில் ஈடுபட்டது 2 பேர் என்பதும், அவர்கள் முகமூடி அணிந்திருந்ததாகவும் தெரியவந்திருக்கிறது. பக்கத்தில் இருக்கும் மேலும் 2 வீடுகளிலும் அந்தக் கொள்ளையர்கள் திருட முயற்சித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்திருக்கும் போலீஸார், கொள்ளையர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்தச் சம்பவம், அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.




















