'முக்கிய தகவல்களைப் பகிர WhatsApp Web பயன்படுத்துவதைத் தவிருங்கள்..!'- மத்திய அர...
'முக்கிய தகவல்களைப் பகிர WhatsApp Web பயன்படுத்துவதைத் தவிருங்கள்..!'- மத்திய அரசு அறிவுறுத்தல்
பொது இடங்களில் உள்ள கணினிகள் மற்றும் அலுவலகங்களில் மற்றவர்களுடன் பகிர்ந்து பயன்படுத்தும் கணினிகளில் 'வாட்ஸ்அப் வெப்' பயன்படுத்துபவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
பொதுவாக, கணினியில் வாட்ஸ்அப் பயன்படுத்திய பிறகு பலரும் வெறுமனே பிரவுசர் விண்டோவையோ அல்லது டேப்பையோ மூடிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். ஆனால், இப்படிச் செய்வதால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு 'லாக்-அவுட்' ஆகாது. அது தொடர்ந்து பயன்பாட்டில்தான் இருக்கும்.

இதைப் பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் உங்கள் கணக்கிற்குள் எளிதாக ஊடுருவ முடியும் என தேசிய சைபர் அச்சுறுத்தல் பகுப்பாய்வுப் பிரிவு எச்சரித்துள்ளது. இதன் மூலம் ஹேக்கர்கள் உங்கள் தனிப்பட்ட உரையாடல்கள், புகைப்படங்கள் மற்றும் தொடர்பு எண்களைப் பார்ப்பதுடன், உங்கள் பெயரிலேயே நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குத் தகவல்களை அனுப்பி பண மோசடி செய்யவும் அதிக வாய்ப்புள்ளது.
எனவே, பிரவுசிங் மையங்கள் ஹோட்டல் பிசினஸ் சென்டர்கள், பொது இடங்களில் உள்ள கணினிகள் மற்றும் கடனாக வாங்கிய லேப்டாப்களில் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்துவதை முற்றிலுமாகத் தவிர்க்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
தவிர்க்க முடியாத சூழலில் அலுவலகக் கணினியிலோ அல்லது பொதுக் கணினியிலோ பயன்படுத்த நேர்ந்தால், கட்டாயம் 'Incognito' அல்லது 'Private Browsing' மோடைப் பயன்படுத்த வேண்டும்; மேலும் வேலை முடிந்ததும் மறக்காமல் கைப்பட 'Log out' செய்ய வேண்டும்.
அத்துடன், கணினி வழியாக வாட்ஸ்அப் பயன்படுத்தும்போது அரசு சார்ந்த ஆவணங்கள், அலுவலக ரகசியங்கள் மற்றும் வங்கி, நிதி தொடர்பான முக்கியத் தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும்.

உங்கள் கணக்கிலிருந்து உங்களுக்குத் தெரியாமல் ஏதேனும் மெசேஜ் சென்றிருந்தாலோ அல்லது வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகள் தெரிந்தாலோ உடனடியாக உஷாராகி, உங்கள் மொபைலில் உள்ள 'Linked Devices' பகுதிக்குச் சென்று அனைத்துக் கணினிகளிலிருந்தும் லாக்-அவுட் செய்யுமாறும், சாதனங்களின் மென்பொருட்களை (OS & Browser) எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்குமாறும் சைபர் கிரைம் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb















