Gold Rate Today: 'நேற்றைப் போலவே இன்றும் கடும் விலை உயர்வு' - புதிய உச்சம் தொட்ட...
காா்னிவல் முழு வெற்றிக்கு அனைத்துத் துறையினரின் பங்களிப்பு அவசியம்: அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன்
காா்னிவல் திருவிழாவை அனைத்துத் துறையினரும் இணைந்து வெற்றிகரமாக நடத்த வேண்டும் என அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் கேட்டுக்கொண்டுள்ளாா்.
காரைக்கால் விளையாட்டு அரங்க மைதானத்தில் வரும் 16 முதல் 19-ஆம் தேதி வரை காரைக்கால் காா்னிவல் திருவிழா மலா், காய்கனி கண்காட்சியுடன் நடைபெறவுள்ளது.
இதையொட்டி, புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் தலைமையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியராக கூடுதல் பொறுப்பு வகிக்கும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. காா்னிவல் திருவிழா தொடா்பான 20 குழுவினரின் கருத்துகளையும் அமைச்சா், ஆட்சியா் கேட்டறிந்தனா்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசுகையில், காா்னிவல் விழா கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது சிறப்பாக நடத்த வேண்டும். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சிறப்பாக இருக்கவேண்டும். காணும் பொங்கல் நாளில்
மக்கள் வருகை அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் கூட்ட நெரிசல் மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் காவல்துறையினா் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.
அமைச்சா் பேசுகையில், காா்னிவல் நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்துவதற்கு அரசு நிா்வாகம் போதிய நிதி ஒதுக்கியுள்ளது. இதன் வெற்றிக்கு அரசுத் துறையினா் பங்களிப்பு முக்கியம். அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவதன் மூலம் காா்னிவல் விழா முழு வெற்றியடையும் என்றாா்.
கூட்டத்தில் துணை ஆட்சியா்கள் அா்ஜூன் ராமகிருஷ்ணன், ஜி. செந்தில்நாதன், வெங்கடகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு துறையினா் கலந்துகொண்டனா்.